வியாழன், ஏப்ரல் 28, 2011

எப்பிடி இருந்த கட்சி இப்பிடி ஆயிடுச்சே ...........


முஸ்கி: இது சற்று நீளமான பதிவு, சற்று பொறுமையாய் படிக்கவும்.  கொஞ்சம் கமெண்ட்-ம் போட்டா நல்லது  


1973-இல் தி.மு.கழகத்தின் ஆளுகையிலிருந்த சென்னை மாநகராட்சி மீது ஊழல் புகார் வந்தபோது தனது கட்சி என்று கருதாமல் மாநகராட்சியை கலைத்து கட்சியைவிட களங்கமற்ற ஆட்சிக்கே முதலிடம் அளித்தார்.

இதை இப்போது இருக்கும் சூழலில் இதை திருப்பி செய்ய கலைஞர் துணிவாரா? 

இன்னும் சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகும் சூழ்நிலையில், அவர் கட்சி உறுப்பினர்களும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சிறை செல்லும் நிலையில் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றாலும், ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என்று அறிவிக்க தயாரா?
தாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபித்து விட்டே ஆட்சி பொறுப்புக்கு வருவேன் அதுவரை எங்கள் கூட்டணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கட்சி ஆட்சி நடத்தும்  என்று சொல்வாரா?

கொஞ்சம் தமிழக வரலாற்றை திருப்பிப்பார்த்தால் தமிழக மக்களின் வாழ்க்கைக்கு கட்சி செய்த தியாகங்களும்,  லட்சோப லட்ச தொண்டர்களின் உழைப்பையும் உணர முடியும்.

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும்.

இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாக்க நீதிக்கட்சி `திராவிடா, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு’ என்ற கொள்கையுடன் போராடியது.1920, 1923, 1929 ஆண்டுகளில் பதவி வகித்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில் கீழ்க்கண்ட வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டன.

 • நிர்வாகத்திலும், சமுதாய நிலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
 • இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
 • பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு கொள்கை அமுலாக்கப்பட்டது.
 • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.  (இதனையே பின்னால் காமராஜர், எம்.ஜி.ஆர். அரசுகள் புதுப்பித்தன)
 • இந்து கோயில்களில் தேவதாசி முறையை ஒழித்தது. 

இச்சீர்திருத்தங்கள் பிராமணர் அல்லாதவர் மத்தியில் சுயமரியாதையும் ஒற்றுமை உணர்வையும், பகுத்தறிவையும் வளர்த்தன.  காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்புற்ற தந்தை பெரியார் என பின்னாளில் போற்றப்பட்ட ஈ.வெ.இராமசாமி அவர்கள் 1925-இல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

இவ்வியக்கம் 1941-இல் திராவிடர் கழகம் என்ற விடுதலை இயக்கமாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா போன்ற முன்னணி தலைவர்கள் இயக்கத்தின் குறிக்கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும் பரப்பினர். தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுக்குமிடையே சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால், அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா, அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் கலைஞர் என போற்றப்படும் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் கொள்கை பரப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழர் எனப் போற்றப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் மேட்டுக்குடியில் பிறக்கவில்லை. ஆனால் கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் நாவன்மை பெற்றிருந்தார். 

``சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே’’
``என்ன வளம்! என்ன அழகு!’’
 ``மடை திறந்தாற் போல பேச்சு’’
``அது குற்றாலத்து அருவி கொஞ்சு தமிழ்ச்சிந்து’’

இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும் பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன. மடை திறந்தாற் போல் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளால் பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்பினை, தமிழ் மொழியின் தொன்மையை நினைவுப்படுத்தினார்.

இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். சினிமா, நாடகம், பத்திரிக்கை, மேடை ஆகிய ஊடகங்களின் வழியாகச் சமுதாயத்தை தட்டி எழுப்பினார். அறிஞர் அண்ணாவின் `திராவிட நாடு’, டாக்டர் கலைஞரின் `முரசொலி’ ஆகிய ஏடுகள் மக்களிடையிலும், கட்சி தொண்டர்களிடையிலும் புதிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாக கேடயமாக வலம் வந்தன.

இத்தனைக்கும் மேலாக, கழக உறுப்பினர்களிடையே `அண்ணன் - தம்பி’ என்ற பாசப்பிணைப்பை ஏற்படுத்தின. ஆலமரத்தின் சிறு விதைப்போல முளைத்தெழுந்த தி.மு.க. மாபெரும் வளர்ச்சியுற்று, மதக்கோட்டைகளை தகர்த்தது, இலட்சக்கணக்கான ஏழைகளின் நிழலாக பாதுகாப்பு அரணாக, அமைந்தது. பெரியாரை விட்டுப் பிரிந்தாலும், அவரின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் அடைய தி.மு.கழகம் அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு போராடி வந்தது.

அறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல், தி.மு.கழகமும், திராவிட கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக சமுதாய சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடின.  கழக இலட்சியங்களை நியாயமான, சட்டத்திற்குட்பட்ட முறையில் அடைய, போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பியரை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரம் மூலம் கட்டுக்கோப்பான வழியில் நடத்திச் சென்றார். இதனால் தான், தி.மு.க. ஒரு மக்கள் இயக்கமாக மாறி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றது. உலகத்தில் எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதில்லை.   

மக்களின் நலனை பேணும் பாதுகாவலனாக, அவர் இடர் துடைக்க அறவழியில் போராட தி.மு.க. என்றுமே தயங்கியதில்லை கழகம் துவங்கிய ஐந்தாம் ஆண்டிலேயே 1953-இல் மும்முனைப் போராட்டம் நடத்தியது.

இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், தமிழர்களை `முட்டாள்கள்’ என்று அவதூறு செய்த பிரதமர் பண்டித நேரு அவர்களைக் கண்டித்து இரண்டாவது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் கல்லக்குடி எனத் தமிழ்ப் பெயரிட வேண்டும் என்று மூன்றாவது முனையிலும் தி.மு.க. போர்க்களங்களை அமைத்தது.

அந்த அறப்போரில், கல்லக்குடி களத்திற்கு, கலைஞர் படைத்தலைவர். ஜூலை 15 ஒரே நாள் போரில், ஆறு உயிர் களப்பலி, அநேகர் சித்திரவதை, 5000 பேர் சிறைக்காவல்!

சட்ட மன்றத்திற்குள் சென்றால் மட்டுமே ஜனநாயக வழியில் கழக இலட்சியங்களை நிறைவேற்ற முடியும் எனக்கருதி அறிஞர் அண்ணா, 1956-இல் திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் அதற்கான ஒப்புதலை கட்சித் தொண்டர்களிடம் பெற்றார். 1957 பொது தேர்தலில் தி.மு.க. 15 சட்டமன்ற இடங்களிலும், 2 பாராளுமன்ற இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகிய முன்னணி தலைவர்கள் வெற்றிவாகை சூடினர். அசைக்க முடியாது என ஆணவ முரசம் கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின. இவ்வெற்றியால் தி.மு.க.விற்கு உதயசூரியன் தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

`உதித்து விட்டான்’ செங்கதிரோன் தென்திசையில்
கொதித்தெழுவோம் கொத்தடிமை தீர்வதற்கே'!

என தி.மு.க. வீரர்கள் பரணி பாடினர் கழகத்தின் செல்வாக்கு கோபுரம் போல உயர்ந்தெழுந்தது. 1959 சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றது. 100 பேர் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் தி.மு.க. 45 இடங்களை பெற்றது. தி.மு.க. உறுப்பினர் திரு. அ.பொ. அரசு. கழகத்தின் முதல் மேயராகப் பதவி ஏற்றார். தமிழகத்து அரசு கட்டிலிலும் தி.மு.கழகமே அமரப்போகின்றது என்பதற்கு இது ஓர் அறிகுறியாக அமைந்தது. 

கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், அத்தொழிலாளர்களின் துயர் துடைக்கவும் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருடன் மற்ற முன்னணி தலைவர்கள் 1953-இல் கைத்தறித் துணிகளை தோளிலே சுமந்து வீதிகளில் விற்று நிதி திரட்டினர். கழகத்தினர் அனைவரும் கைத்தறி ஆடையே அணிய முடிவு எடுக்கப்பட்டது.

தஞ்சையில் 1954-இல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் துடைக்க கழகம் நிதியும், உடையும் வழங்கியது.
1962-இல் சீனா ஆக்கிரமிப்பின் போது காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. முழு ஆதரவு அளித்தது. மாநாடுகள் நடத்தி தேசிய பாதுகாப்பிற்கு பெரும் நிதி திரட்டி அளித்த பெருமை தி.மு.க.விற்கு மட்டுமே கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக கட்சியின் நலனைவிட நாட்டு நலனை முன்நிறுத்தி, அறிஞர் அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். தி.மு.க.வின் தேசியப் பார்வையில் இது ஒரு திருப்புமுனையாகும்.

1971-இல் இந்திய - பாகிஸ்தான் போரில், அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ரூ.6 கோடி அளித்தார். இந்தியாவிலேயே இந்த அளவு நிதி அளித்த ஒரே மாநிலம் தமிழகமாகும்.

இந்திய பாதுகாப்பில் மற்ற அனைத்திந்திய கட்சிகளை விட தி.மு.க.விற்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் 1999 இந்திய - பாகிஸ்தான் எல்லை, கார்கில் போருக்கு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ரூ.50.43 கோடி நிதி திரட்டி
தமிழகத்தின் தனிப்பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு

என்ற உணர்வில் ஊறிப்போன தமிழர்களின் இந்தி எதிர்ப்பு, நீண்ட வரலாறு கொண்டது. இன்றைய இந்தியின் தாய் மொழியான வடமொழி (சமஸ்கிருதம்) தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தவும், அடிமைப்படுத்தவும் பலமுனைகளில் முயன்று தோல்வியையே தழுவியுள்ளது. `ஆரியம்’ நன்று தமிழ் தீது’ என உரைத்து நக்கீரனின் சாபத்திற்கு ஆளானவன் பற்றிய சங்க காலப் பாடல் தமிழ் இசையை அடிமைப்படுத்த முனைந்த `திருவிளையாடல் புராணம்’, ஹேமநாத பாகவதரின் கதை ஆகியவை இதனையே உணர்த்துவன.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆசியுடன் இந்தி ஆதிக்கம் தமிழகத்தில் நுழைய முற்பட்டது. 1938-இல் சென்னை இராஜதானி என அன்று அழைக்கப்பட்ட தமிழகத்திலுள்ள பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக புகுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும், மதத் தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அணிவகுத்து நின்றனர். அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம்

``வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!
வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்!’’
என சங்க நாதம் புரிந்தார்.

இந்திய அரசியல் சாசன விதிகள் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் அமுலுக்கு வந்த போதிலும், இந்திக்கு உள்ள எதிர்ப்பை உணர்ந்து, இந்தி பேசாத மக்களின் பதற்றத்தை குறைக்கும் வகையில் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், விதி 343-இன் படி இந்தி ஆட்சி மொழி ஆகும் தேதியை 15 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர். எனினும் தி.மு.கழகம் இந்தி என்றுமே ஆட்சி மொழி ஆகாதபடி விழிப்புடன் செயலாற்றி போராட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து மக்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இதன் பயனாக 1959 ஆகஸ்ட் 7-இல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியைத் தந்தார். 1959-இல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.கழகம் ஏற்பாடு செய்தபோதும், 1962-இல் இந்திய சீனப் போரின் போதும் ஜவகர்லால் நேரு அவர்கள் இவ்வாக்குறுதியை உறுதிப்படுத்தினார். பிரதம மந்திரியின் உத்தரவாதம் என்ற தலைப்பில், தமிழக செய்தித்தாள்கள் அனைத்திலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டது. இந்தி வெறியர்களுக்கு எதிராக, நாட்டின் பிரதமர் அவர்களிடமிருந்து இவ்வாக்குறுதியை தி.மு.கழகம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.

தமிழன் தொடுத்த இப்போரில் தாளமுத்து, நடராசன் என்ற இரு இளைஞர்கள் இந்தியை எதிர்த்து சிறை புகுந்து சிறைக்கோட்டத்தில் பிணமாயினர். தமிழன், மொழிப் போராட்டத்தின் கொடியை அந்த வீரர்களின் குறுதியிலே தோய்த்து விண்முட்ட பறக்க விட்டான்.
இந்திய சுதந்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், புறவாசல் வழியாகவும், இந்தியைப் புகுத்த முனைந்தது. தேசிய மொழி, பொதுமொழி, இணைப்பு மொழி, நிர்வாக மொழி, ஆட்சி மொழி என்ற பல்வேறு பெயர்களில் இந்தியை திணிக்க முனைந்தது. ஆனால் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.கழகம் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி இந்தியை எதிர்த்தது. தமிழைக் காத்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும் கழகத்தின் நீண்ட நாள் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில், சட்ட திட்டங்களை வகுத்தார்.
அவரது சாதனைகளில் சரித்திரம் படைத்தவை:

 • சென்னை மாநிலம் என அழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்தினார்.
 • அவர் இதயத்தில் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தார்.
 • மும்மொழித் திட்டத்தை அகற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார்.
 • சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எரியாத வீடுகள் (கல்நார் கூரையுடன்) அளிக்கப்பட்டன.
 • பேருந்துகள் நாட்டுடமை ஆகிய திட்டங்கள் தொடங்கப்பெற்றது.
 • 1968 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சங்ககாலம் மீண்டும் வந்ததோ! என அனைவரும் பூரித்திடும் வகையில் எழில் குலுங்கிட, தமிழன்னையின் இதயம் குளிர்ந்திட, இனிது நடத்தினார்.

ஆனால் காலதேவன் கொடுமையால் அண்ணாவின் தலைமை அதிக நாள் நீடிக்கவில்லை. 1969 பிப்ரவரி 3-இல் அறிஞர் அண்ணா மறைந்தார். தமிழகமே இருளில் மூழ்கியது.

அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றவும், தி.மு.கழகத்தைக் கட்டி காத்திடவும், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கவும், கழகத்தின் தலைமைப் பொறுப்பு டாக்டர் கலைஞரின் தோளில் சுமத்தப்பட்டது. ``டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக’’ 1969-இல் பிப்ரவரி 10-இல் பதவி ஏற்றார்.

கலைஞரின் தலைமையில், தமிழ்நாடு பல துறைகளில் புதிய சாதனைகள் படைத்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.கழக ஆட்சியில் - அவர் தலைமையில் நலிவுற்ற - பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக நிறைவேற்றப்பட்டன.
அவைகளுள் சில:

 • குடிசை மாற்றுவாரியம்.(பின்னால் மற்ற மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது)
 • பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள்.
 • கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள்.
 • கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் - அவர்களுக்கு இலவச கண்ணாடிகள்.
 • பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி - ஆடைகள்.
 • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
 • ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
 • போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.
 • தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.
 • விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை அனுபோக தாரர்கள் சட்டம்.
 • பேருந்துகள் நாட்டுடமை தமிழகத்தில் முழுமைப் பெற்றது.
 • அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம்.(பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்படுகிறது)
 • சிகப்பு நாடா முறை இரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.
 • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியது.
 • ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.
 • பெண்களுக்கு சொத்துரிமை.
 • மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.
 • ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.
 • அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.
 • கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.
 • சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
 • புதிய பல்கலைக் கழகங்கள் - நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.
 • மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.
 • மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.
 • ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.
 • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.
 • மாநில திட்டக்குழு அமைத்தல்.

கலைஞரின் முற்போக்குத் திட்டங்களைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்கள் தமிழ்நாடு, இந்தியாவிற்கு வழி காட்டுகிறது எனப் புகழாரம் சூட்டினார். லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களும் இத்திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி தமிழ் இனத்தின் பழைய சிறப்பை அவர்கள் நினைவு கூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகள் தமிழர் மனதில் என்றும் நிலை நிறுத்தும் வகையில், டாக்டர் கலைஞர் அவர்கள் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை உருவாக்கினார்.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் தயங்கியதில்லை. அவ்வுரிமைகளுக்கு குந்தகம் ஏற்பட்ட போதெல்லாம், தி.மு.கழகம் சிங்கத்தைப் போல் சிலிர்த்தெழுந்திடும். 1975-இல் திருமதி இந்திராகாந்தி ஜனநாயகத்தை நசுக்கி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தபோது தி.மு.கழகம் தோழமைக் கட்சி என்று தயக்கம் காட்டியதில்லை.

நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியது. மிரட்டியும், ஆசை காட்டியும் தி.மு.கழகத்தை பணியவைக்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஜனநாயகத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் இலட்சிய பிடிப்பு கொண்ட கலைஞர் எந்த சக்திக்கும் அடிபணிந்ததில்லை. இதனால் 1976 ஜனவரி 31-இல் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகத்தின் இருண்ட நாட்கள் தொடங்கின. 

திருவாளர்கள் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னணி தலைவர்களுடன் 500-க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் `மிசா’ சட்டத்தின்கீழ் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர். தி.மு.கழகம் அந்த சோதனையையும். `மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என சங்கநாதம் செய்தது. `மிசா கைதி’ என்பதை ஒரு பெருமையாகவே தி.மு.கழகம் இன்முகத்துடன் ஏற்றது. 

1980-இல் திருமதி இந்திரா காந்தி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு இனி எப்போதும் நெருக்கடி நிலையை அமுல் செய்ய மாட்டேன் என நாட்டிற்கு உறுதி அளித்தபோது தி.மு.கழகம் அறிஞர் அண்ணா சொல்வதுபோல் ``மறப்போம் - மன்னிப்போம்’’ என்று பகைமையை மறந்து நேசக்கரம் நீட்டி காங்கிரசுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது.    

இந்தி எதிர்ப்பு வரலாறு, 1964-க்குப்பின் 1984-இல் மீண்டும் திரும்பியது ஆனால் இம்முறை போராட்டம் எதிரிகளுக்கு எதிராக அல்ல. துரோகிகளுக்கு எதிராக எனலாம். புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் இராஜீவ் காந்தி அரசு ``நவோதயா’’ பள்ளிகள் திறக்கவும் அங்கு இந்தி மட்டுமே போதனை மொழியாக அமையவும் திட்டம் வகுத்து, தாராளமான நிதி ஒதுக்கீடு செய்தது. நிதியுதவி மூலம் இந்தியை நாடெங்கும் பரப்ப முனைந்த ஆட்சியாளர் சூழ்ச்சியை தி.மு.கழகம் கண்டு கொண்டது.

எனவே 1963-இல் அண்ணா போராடிய அதே நாளில் அதவாது 1986 நவம்பர் 17-இல் அரசியல் சட்டப்பிரிவு பகுதி 17-ஐ பொது மேடைகளில் எரித்திட தீர்மானம் நிவைவேற்றியது. அன்னை தமிழுக்கு துரோகம் செய்த அரசுக்கு எதிராக தி.மு.கழகம் சிங்கம் போல் நிமிர்ந்து சீறி சிலிர்த்து எழுந்தது. 20,000-க்கு மேற்பட்ட கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.  அடுத்து வந்த 1989 பொதுத் தேர்தலில் மீண்டும் தி.மு.கழகம் அரியணை ஏறியது.

இப்படியெல்லாம் மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்திய பெருமை மிகு கழகத்தின் இன்றைய நிலை என்ன? ஏன் இவை எல்லாம் நிகழ்ந்தது. மக்கள் போராட்டம் திசை மாறி குடும்ப போராட்டமானதற்கு என்ன காரணம் அல்லது யார் காரணம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஒரு கட்சி ஒரு தனி குடும்ப சொத்தாக மாறியது எப்படி.  இன்று அந்த ஒரு குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாரேனும் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர முடியுமா?

1972-இல் எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தை பிளவுபடுத்தியபோது, அவர் துவளவில்லை. வெற்றியும் தோல்வியும் என்றுமே அவரைப் பாதித்தது இல்லை. பொது வாழ்வில் ஊழலுக்கு எதிராக அவர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1969-லேயே சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தனது ஆண்டு சொத்துக்கணக்கை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர்.


4 கருத்துகள்:

சேக்காளி சொன்னது…

பழைய கால நினைவுகளை மறுபடியும் நினைத்து பார்க்கும் போது ஏற்படும் சுகமே அலாதியானது தான்.
ஆனாலும் எல்லாம் ஒரு கனாக்காலம் தானே.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சேக்காளி
வருகைக்கு நன்றி நண்பரே, நாம நெனச்சு என்ன பண்றது, நினைக்க வேண்டியவங்க நினைக்கனுமே!!

பெயரில்லா சொன்னது…

What to say...All is fate of Tamils.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@Anonymous
வருகைக்கு நன்றி நண்பரே, பெயர சொல்லிட்டு கமெண்ட் போட்டு இருக்கலாம், சரி பரவாயில்லை. ஆனா நீங்க சொன்ன மாதிரி விதின்னு விட்டுட முடியாது, ஏன்னா அவங்க கேட்கிறே கூலி அதிகம், நமக்கு கட்டுபடி ஆகாது.
கரெக்ட்-அ??

இடுகைகளை இ-மெயிலில் பெற