சனி, ஜூலை 30, 2011

ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ பிடிக்கலை - நடிகையின் கணவர் பேட்டி

1.    நானும் என் மனைவியும் விவாகரத்து வாங்கிவிட்டோம் ஏனென்றால் அவள் கடவுளாம் நான் பக்தனாக நடக்கவில்லையாம்

2.    நான் மனநலம் குன்றியவன் அல்ல ஆனாலும் ஒவ்வொரு வினாடியும் சந்தோஷமாய் இருக்கிறேன்

3.    வாழ்க்கையில் ஒரு பிடிமானம் இருந்தது ஆனால் இப்போது அதுவும் உடைந்து விட்டது

4.    நான் ஒரு முழு மூடன் அல்ல ஆனாலும் ஒரு அறிவு இப்போ அவுட்

5.    கொல்வது குற்றம் என்பதாலயே சிலர் இன்னும் உயிரோடு உலவிக்கொண்டு இருக்கிறார்கள், இல்லாவிட்டால் என்றோ கொலை செய்யப்பட்டு இருப்பார்கள்

6.    வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது பின்னணி இசை வருவது இல்லை

7.    நீ பொறாமையில் பேசுகிறாய் என்று உணரமுடிகிறது, ஏனெனில் வார்த்தைகள் மட்டுமே என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறது.

# மேலே சொன்னது எல்லாம் நடிகையின் கணவர் விவாகரத்திற்கு பிறகு கொடுத்த பேட்டி  (கற்பனை மட்டுமே) , 

கீழே உள்ளது எல்லாம் நானா யோசிச்சேன் 

1.    வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள கூடாது, உங்கள் வாழ்க்கையை யாரும் பிடிங்கிக்கொள்ள முடியாது

2.    கடவுள் முட்டாள் மனிதர்களை நேசிக்க வேண்டும் ஏனெனில் அதிகம் பேரை அவ்வாறே படைத்து இருக்கிறான்

3.    நான் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன், மீண்டும் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று தெரியவில்லை 

4.    ஒரு ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் ஆனால் அதை வரைய மூவாயிரம் மூளை வேண்டும்

5.    முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது கோழிக்கு சில நாள் வேலை ஆனால் மூட மனிதனுக்கோ வாழ்நாள் பொறுப்பு

வெள்ளி, ஜூலை 29, 2011

விடையில்லா வினாக்கள்

இன்னும் எத்தனை
அடிகள் முன் வைக்க வேண்டுமோ
வாழ்க்கை பாதையை கடக்க?

இன்னும் எத்தனை
வினாடிகள் தேவைப்படுமோ
காத்திருப்பு முடிய ?


இன்னும் எத்தனை
போர்கள் சந்திக்க வேண்டுமோ
வெற்றி பெற ?

இன்னும் எத்தனை
கடவுள்கள் தேவையோ
பாவங்களை மன்னிக்க ?

இன்னும் எத்தனை
துரோகம் செய்ய வேண்டி இருக்குமோ
தன்னம்பிக்கைக்கு ?

இன்னும் எத்தனை முறை
கட்டுபடுத்த வேண்டி இருக்குமோ
முன்கோபத்தை ?

இன்னும் எத்தனை முறை
சகிக்க வேண்டுமோ
நீதியின் அநீதிகளை ?

இன்னும் எத்தனை பாதைகளை
தேட வேண்டி இருக்குமோ
வெற்றியின் வாசல் தொட ?

இன்னும் எங்கெல்லாம்
தேடவேண்டுமோ உண்மையான
அக்கறை உள்ள மனிதர்களை ?

இன்னும் எங்கெல்லாம்
தேட வேண்டுமோ
விடியலுக்கான கீற்று ?

கிழக்கு, மேற்கு
தெற்கு, வடக்கு
வேறு எங்கும் காண கிடைக்கவில்லை
பிறருக்கு கண்ணீர் சிந்தும் கண்களை

உலகம் தேடிக்கொண்டே
இருக்கும் இந்த கேள்விகளுக்கான
விடைகள் கிடைக்கும் வரை...

வியாழன், ஜூலை 28, 2011

கரடி விடும் கரடி.. போதை பார்டிகள் உஷார்...


கரடி என்ன செய்யுது கொஞ்சம் பாருங்கோ



வாழ்வின் விளிம்பில்

நீங்க எவ்வளவோ மோசமான தருணங்களை சந்தித்து இருக்க கூடும்.
கீழே சில மயிர்கூச்செறியும்  மோசமான தருணங்கள் உள்ளன. இதில் எது மிக மோசமானது  என்பதை வரிசை படுத்துங்களேன்

















 

புதன், ஜூலை 27, 2011

வள்ளுவம் தோற்கிறது

திட்டி முடிந்த பின்
கழுத்தோடு கையை கட்டி
வாயில் புன்சிரிப்போடு
போங்க டாடி என
கொஞ்சும் குழந்தையிடம்
வள்ளுவம் தோற்கிறது
ஆறாதே நாவினால் சுட்ட வடு தவறென்று!!!

செவ்வாய், ஜூலை 26, 2011

ஆங்கில சுவாரசியம் இது புதுசு

ஆங்கில அகராதி புரிந்து கொள்ள மிக எளிதானது அல்ல ஒரு உதாரணம் 'COMPLETE' மற்றும் 'FINISH' இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை சரியாக விளக்க முடிவது இல்லை.

சிலர்  'COMPLETE' மற்றும் 'FINISH'  இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்றும் சொல்வது உண்டு ஆனால் வித்தியாசம் உள்ளது

நீங்கள்  ஒரு சரியான நபரை திருமணம் செய்யும் போது, உங்கள் வாழ்க்கை 'COMPLETE'  (முழுமை என்று பொருள் கொள்க)

மேலும் நீங்கள் ஒரு தவறான நபரை திருமணம் செய்யும் போது,  உங்கள் வாழ்க்கை  'FINISH' (முடிந்தது என்று பொருள் கொள்க) 

மேலும் சரியான ஒருவர் தவறான காரணத்திற்கு உங்களை பிடித்தால் நீங்கள் 'COMPLETELY FINISHED'

திங்கள், ஜூலை 25, 2011

இந்தியாவை யாரும் விலைக்கு வாங்க முடியாது

வால் மார்ட் ஒரு நாடாக இருந்தால், அதன் வருவாய் 157 சிறிய நாடுகள் கடந்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையாக உலகின் 25 வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்.   மேலும் சில கம்பெனிகளின்  வருவாய் உலக நாடுகள் சிலவற்றை வாங்கும் அளவு உள்ளது அவை கீழே





மங்கோலியா மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 6,13 பில்லியன்
Yahoo வின் வருவாய்: $ 6,32 பில்லியன்
Yahoo உலகின் 138th மிக பெரிய நாடு






ஜிம்பாப்வே மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 7,47 பில்லியன்
VISA   வருவாய்: $ 8,07 பில்லியன்
VISA  உலகின் 133rd மிக பெரிய நாடு



மடகாஸ்கர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 8,35 பில்லியன்
EBay  வருவாய்: $ 9,16 பில்லியன்
EBay உலகின் 129th மிக பெரிய நாடு



பராகுவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி : $ 18,48 பில்லியன்
NIKE   வருவாய்: $ 19,16 பில்லியன்
NIKE   உலகின் 102nd மிக பெரிய நாடு


காங்கோ ஜனநாயக குடியரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி : $ 13,13 பில்லியன்
ConEdison தான் வருவாய்: $ 13,33 பில்லியன்
ConEdison உலகின் 112 வது மிக பெரிய நாடு



லாட்வியா மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 24,05 பில்லியன்
மக்டொனால்ட்ஸ் வருவாய்: $ 24,07 பில்லியன்
மக்டொனால்ட்ஸ் உலகின் 92 வது மிகப்பெரிய நாடு



கென்யா மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 32,16 பில்லியன்
Amazon.com 'கள் வருவாய்: $ 34.2 பில்லியன்
அமேசான் உலகின் 86 மிக பெரிய நாடு




உஸ்பெகிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 38,99 பில்லியன்
மோர்கன் ஸ்டான்லி வருவாய்: $ 39,32 பில்லியன்
மோர்கன் ஸ்டான்லி உலகின் 82nd மிக பெரிய நாடு



லெபனான் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 39,25 பில்லியன்
சிஸ்கோ வருவாய்: $ 40,04 பில்லியன்
சிஸ்கோ உலகின் 81 வது மிகப்பெரிய நாடு



ஓமன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 55,62
பெப்சி வருவாய்: $ 57,83 பில்லியன்
பெப்சி உலகின் 69 வது மிகப்பெரிய நாடு



ஈக்வேடார் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 58,91 பில்லியன்
ஆப்பிள் வருவாய்: $ 65,23 பில்லியன்
ஆப்பிள் உலகின் 68th மிக பெரிய நாடு



குரோஷியா மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 60,59 பில்லியன்
மைக்ரோசாப்ட் தான் வருவாய்: $ 62,48 பில்லியன்
மைக்ரோசாப்ட் உலகின் 66 வது மிகப்பெரிய பொருளாதார நாடு



சூடான் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 68,44 பில்லியன்
Costco தான் வருவாய்: $ 77,94 பில்லியன்
Costco உலகின் 65 வது மிகப்பெரிய நாடு



லிபியா மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 74,23 பில்லியன்
புரோக்டருடன் அண்ட் கேம்பிள் தான் வருவாய்: $ 79,69 பில்லியன்
புரோக்டருடன் அண்ட் கேம்பிள் உலகின் 64 வது மிகப்பெரிய நாடு




அங்கோலா மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 86,26 பில்லியன்
வெல்ஸ் பார்கோ தான் வருவாய்: $ 93,249 பில்லியன்
வெல்ஸ் பார்கோ உலகின் 62 வது மிகப்பெரிய நாடு



மொராக்கோ மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 103,48 பில்லியன்
ஃபோர்ட் தான் வருவாய்: $ 128,95 பில்லியன்
ஃபோர்ட் உலகின் 60 வது மிகப்பெரிய நாடு


வியட்நாம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 103,57 பில்லியன்
அமெரிக்காவின் வருவாய் வங்கி: $ 134,19 பில்லியன்
பாங்க் ஆஃப் அமெரிக்கா உலகின் 59 வது மிகப்பெரிய நாடு




வங்காளம் மொத்த உள்நாட்டு உற்பத்தி: $ 104,92 பில்லியன்
General Motors தான் வருவாய்: $ 135,59 பில்லியன்
GM, உலகின் 58 வது மிகப்பெரிய நாடு



ஹங்கேரி மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 128,96 பில்லியன்
பெர்க்ஷையர் ஹாத்வே தான் வருவாய்: $ 136,19 பில்லியன்
பெர்க்ஷையர் ஹாத்வே உலகின் 57 வது மிகப்பெரிய நாடு



நியூசிலாந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 140,43 பில்லியன்
GE தான் வருவாய்: $ 151,63 பில்லியன்
GE உலகின் 52 வது மிகப்பெரிய நாடு



பெரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 152,83 பில்லியன்
ஃபென்னி மே தான் வருவாய்: $ 153,83 பில்லியன்
ஃபென்னி மே உலகின் 51 வது மிகப்பெரிய நாடு



பாகிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 174,87 பில்லியன்
Conoco Phillips வருவாய்: $ 184,97 பில்லியன்
Conoco Phillips  உலகின் 48 வது மிகப்பெரிய நாடு




செக் குடியரசு மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 192,15 பில்லியன்
செவ்ரான் தான் வருவாய்: $ 196,34 பில்லியன்
செவ்ரான் உலகின் 46th மிக பெரிய நாடு



தாய்லாந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 318,85 பில்லியன்
Exxon Mobil வருவாய்: $ 354,67 பில்லியன்
Exxon Mobil உலகின் 30 வது மிகப்பெரிய நாடு



நோர்வே மொத்த உள்நாட்டு உற்பத்தி்: $ 414,46 பில்லியன்
வால்மார்ட் வருவாய்: $ 421,89 பில்லியன்
வால்மார்ட் உலகின் மிக பெரிய 25 வது நாடு.

ஆதாரம்: ஃபார்ச்சூன் / சிஎன்என் மணி, சர்வதேச நாணய நிதியம்

பின்குறிப்பு : படிச்சு டயர்ட் ஆயிட்டீங்களா... எனக்கு ஒரு கனவு இருக்கு ,  ஒத்த பயலயும் விடாம மொத்த பயலுகளையும் ஒரே நாள்ல விலைக்கு வாங்கணும்.

   

வெள்ளி, ஜூலை 22, 2011

நீங்க A R ரெஹ்மான் மாதிரி ஆகணுமா?


இசையில் ஆர்வம் உண்டா, நீங்களும் இனி ஒரு இசை புயல் தான், உங்க ப்ரௌசெர்ஐ ஒரு இசை கருவியா பயன்படுத்திக்குங்க..


புதன், ஜூலை 20, 2011

வாழ்க்கையில் வெற்றி பெற 10 விதிகள்

விதி 1: 

வாழ்க்கை எப்போதும் சிறப்பானது இல்லை, முடிந்தவரை அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

விதி 2:

உலகம் உங்கள் சுய மரியாதையை பற்றி கவலைப்படுவது இல்லை உங்களை பற்றி நீங்கள் அறியும் முன் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும்.

விதி 3:

நீங்கள் உங்கள் உயர் பள்ளி கல்வி முடித்தவுடன் ஆண்டுக்கு 60,000  சம்பாதிக்க முடியாது, நீங்கள் ஒரு காரும் போனும் சம்பாதிக்கும் வரை நீங்கள் ஒரு துணை தலைவராக கூட முடியாது.

விதி 4: 

நீங்கள் உங்கள் ஆசிரியர் கடினமானவர் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு முதலாளி வரும் வரை காத்திருக்க.

விதி 5: 

வாழ்க்கையில் திருப்பங்கள் வரலாம் அது உங்கள் கண்ணியத்தை கீழே தள்ளுவது போலும் இருக்கலாம், நம் மூதாதையர் அதை வாய்ப்பு என்றே அழைத்தனர். 

விதி 6:

இனி என்ன செய்வது என்று  நீங்கள் குழம்புகிறீர்கள் என்றால், அது உங்கள் பெற்றோர்கள் தவறு இல்லை, எனவே உங்கள் தவறுகளை பற்றி புலம்ப தேவை இல்லை, அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று அர்த்தம்.

விதி 7:

உங்கள் பள்ளி வென்றவர்கள் தோல்வியாளர்களையும் கடந்து இருக்கலாம், ஆனால் வாழ்க்கையில் அப்படி இல்லை. சில பள்ளிகளில், அவர்கள் தோல்வியாளர்களை நீக்கி இருக்கலாம் மேலும் வெற்றியாளர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்கி இருக்கலாம். இது நிஜ வாழ்க்கையில் நிகழுவதில்லை, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது, அதை சரியாக பயன்படுத்தியவர்கள் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள், எனவே வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்   

விதி 8:

வாழ்க்கை செமஸ்டர்கள் போல பிரிக்கப்பட்டுள்ளது அல்ல. இங்கு கோடை விடுமுறை இல்லை, வெகு சில முதலாளிகளே உங்களுக்கான நேரத்தை அறிய உதவி செய்கிறார்கள்,  அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

விதி 9:

அறிவார்ந்தவர்களோடு அன்பாய் இருங்கள். வாய்ப்புகள் நீங்கள் ஒருவரின் கீழ் பணிபுரியும் போது முடிந்து போகிறது.

விதி 10 :

வாழ்க்கை ஒரு தொலைக்காட்சி பெட்டி போல அல்ல உண்மையில் நாம் ஓய்வைப்பற்றி சிந்திக்காமல் உழைப்பை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டியிருக்கிறது 

பின்குறிப்பு :
மேலே சொன்னது எல்லாம் நான் சொன்னது இல்லீங்க,  பில்கேட்ஸ் சமீபத்தில் ஒரு பள்ளியில் ஆற்றிய உரை. பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி  பற்றி பேசி இருக்கிறார்.

செவ்வாய், ஜூலை 19, 2011

கல்யாண பரிசு

ஜனவரி 14,1997    மெரினா பீச் இரவு 8 மணி 

"ஐ லவ் யு கல்பனா"  சொன்ன சுந்தரை எரித்துவிடுவது போல் பார்த்தாள் கல்பனா

"இதுக்குதான் இத்தனை நாள் நல்லவன் மாதிரி என்கூட பழகுனியா?"

"எல்லோர் மாதிரி என்னையும் நினைச்சுடாதே கல்பனா, உண்மையிலேயே உன்னை கல்யாணம் செய்துக்க விரும்புறேன்"

"இனி என் மூஞ்சியிலேயே முழிக்காதே"  சொன்ன கல்பனா திரும்பி பார்க்காம நடந்தாள். 

ஜனவரி 15,1997    தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் காலை 5 மணி


"ஏண்டா உங்கள மாதிரி ஆளுகளுக்கு வேற வேலையே இல்லையா? நல்ல நாளு அதுவுமா ஏண்டா இப்பிடி ஒரு வேலை பண்ணே?" கோவத்துடன் அருகே வந்த சப்-இன்ஸ்பெக்டர் பழநியை அலட்சியத்துடன் பார்த்தான் சுந்தர்

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்ன இங்கயே கொன்னு பொதைக்கணும் போல இருக்கு... "

"அதை தானே ஸார் நான் செய்ய பார்த்தேன், நீங்க செஞ்ச சரி நான் செஞ்சா தப்பா?"

"எகத்தாளத்த பாரு உன்னை எல்லாம் கஞ்சா கேஸ்-ல  உள்ள தூக்கி போட்ட தான் சரியா வருவே"

"ஸார்..."

சத்தம் கேட்டு திரும்பிய பழனி, வாசலில் கல்பனாவை பார்த்தார்

"என்னம்மா வேணும்"

"அவரு இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டாரு இந்த தடவை மன்னிச்சு விட்டுடுங்க ஸார் பிளீஸ்"

"சரிம்மா உன்னை பார்த்தா பாவமா இருக்கு, உனக்காக இந்த பயல வெளியே விடுறேன். இனி இந்த மாதிரி ஏதாவது பண்ணே உனக்கு வாழ்க்கை பூரா ஜெயிலு தான் ஞாபகம் வச்சுக்க.  " 

"இங்க ஒரு கையெழுத்து போட்டு கூட்டீட்டு போம்மா"

ஜனவரி 15,1997    சைதாபேட்டை காலை 7:00  மணி

"ஏண்டா இப்பிடி பண்ணினே?"

"பின்னே என்னை பார்க்காதேன்னு சொல்லிட்டு நீ போயிட்டே.... வலிக்குதுல"

"அதுக்காக யாராவது சாவாங்களா? இனிமே இப்பிடி எல்லாம் பண்ணாதே. ஐ டூ லவ் யுடா "

பிப்ரவரி 14, 1997  காலை 9 மணி

"வாங்க சார் இப்பதான் மணி உங்களுக்கு 8 ஆகுதோ?" செல்லமாய் குட்ட வந்த கல்பனாவை  சமாளித்த சுந்தர்

"உனக்கு ஒரு கிஃப்ட் வாங்க போனேன் கடைக்காரன் கொஞ்சம் லேட் பண்ணீட்டான்"

"பொய் சொல்லாதேடா கடன்காரா"

"இன்னைக்கு பூரா என்கூட தான் இருக்கே"

"ஐயோ முடியாதுப்பா வீட்டுல திட்டுவாங்க"


ஏப்ரல் 1 , 2000 மெரினா பீச் பகல் 4 மணி 


"சுந்தர் தயவு செய்து நான் சொல்லுறதை கேளு, எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேன்கிறாங்க."

"நீயோ இன்னும் வேலை தேடிக்கிட்டு இருக்கே, இந்த நிலைமையில நாம பிரியிறது தான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு தோணுது"

"நீயும் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவே, எனக்கு தெரியும் இது கொஞ்சம் கஷ்டம் தான், ஆனா வேற வழி இல்லை சுந்தர்"

"பேசி முடிச்சுட்டியா கல்பனா, இது தான் உனக்கு சந்தோசம்ன்னா இதை செய்ய நானும் தயார்,  நாம நண்பர்களாகவே பிரிஞ்சுடுவோம்"

ஜூன் 26, 2000 கலைஞர் திருமண மண்டபம் தேனாம்பேட்டை காலை 8 மணி

"முகூர்த்ததிற்கு நேரம் ஆச்சு பொண்ண கூட்டிக்கிட்டு வாங்க" பிரோகிதர் சொல்ல

மெல்ல மணமேடையில் வந்து அமர்ந்தாள் கல்பனா

"எப்பிடியோ நம்ம பொண்ணு மனசு மாறி கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டா, சந்தோஷமா இருக்கு கல்யாணி" 

"ஆமாங்க..."

"கெட்டி மேளம் கெட்டி மேளம் ......"

ஜூன் 26, 2000 கல்பனா வீடு  மாலை 7  மணி

"என்னாங்க சீக்கிரம் இந்த லிஸ்ட்-ல இருக்க சாமான் எல்லாம் வாங்கீட்டு வாங்க படபடத்தாள் கல்யாணி"

"கல்பனா நீங்க இந்த கிஃப்ட் எல்லாம் கொஞ்சம் பார்த்து எடுத்து வச்சுக்கமா அப்புறம் அதை காணோம் இதை காணோம் ன்னு சொல்லக்கூடாது"

"என்னங்க வாங்க கிஃப்ட் எல்லாம் பார்க்கலாம் - சங்கரை கூப்பிட்டு" கிஃப்ட் இருந்த அறைக்குள் நுழைந்தாள் கல்பனா

"இது லக்ஷ்மி குடுத்தது இது குமாரி குடுத்தது, நல்லா இருக்கு"  சொல்லியபடி எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

"இது ஏதோ வித்தியாசமா இருக்கு கல்பனா, புல்லா கண்ணாடியில ஷீல்ட் பண்ணி இருக்கு ஒரிஜினல் இதயம் மாதிரி இருக்கு கீழே சுந்தர்ன்னு போட்டு இருக்கு, யாரது கல்பனா" கேட்டு கொண்டு இருக்கும் போதே கண்ணாடி பேழை கீழே விழுந்து உடைந்தது.  உள்ளே இருந்து கெட்ட வாடை.

ரத்தம் உறைந்த நிலையில் ஆம் அது சுந்தரின் உண்மையான இதயம்,

என்ன கதை படிச்சுட்டீங்களா?

இப்ப கேள்வி :

சுந்தர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை இது ஒரு கொலையா?  சொல்லுங்க பார்க்கலாம்... 

திங்கள், ஜூலை 18, 2011

மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை (தொடரும் பதிவு)

என்னை தொடர் பதிவு எழுத அழைத்த நண்பர்  கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு நன்றி.  உங்கள் பதிவை தொடர்ந்து இந்த பதிவு ஆகவே கேள்விகள் உங்களுடையது பதில் என்னுடையது.   தலைப்பை கூட அப்பிடியே வச்சுக்கிட்டேன் (என்ன ஒரு சோம்பேறித்தனம் மைண்ட் வாய்ஸ்)

1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?

    * நல்ல சாப்பாடு எனக்கு மட்டும் இல்லை உலகில் இருக்கும் எல்லா ஜீவனுக்கும் (இந்த நிமிடம் எத்தனை ஜீவன்களுக்கு உணவு கனவாய் இருக்கிறதோ)
    * சுதந்திரம்
    * நேர்மை/உண்மை 


2) நான் விருப்பாத மூன்று விஷயங்கள்

    * துரோகம்
    * சமூக அக்கறை இன்மை (எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என இருப்பது)
    * பொறாமை


3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்

    * வாழ்க்கை - பயம் மட்டுமே நேரான வாழ்க்கை வாழ வைக்கும்
    * நண்பர்கள் - எப்போதும் நண்பர்களாகவே இருக்க வேண்டுமே!!??
    *  ஒழுக்கம் - எப்போது எங்கே தவறும் யாருக்கும் தெரியாது, ஏன் என்றும் சில நேரம் தெரியாது 


4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?

    * அஞ்சலி
    * ஆயிரத்தில் ஒருவன் - பழையது
    * நான் சிவப்பு மனிதன்


5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?

    * சாரை காத்து வீசும் போது சாரை பார்த்து பேசும் போது சாரைப்பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே (வாகை சூட வா) 
    * அவனை பத்தி நான் பாட போறேன் (அவன் இவன்)
    * திமு திமு தீம் தீம் தினம் அல்லாடும் மனம் (எங்கேயும் காதல்)


6) எனக்கு பிடித்த மூன்று உணவுகள்...?

    * சூடாய் இட்லி +  நெய்பொடி 
    * கருவாட்டு குழம்பு வித் ஃபுல் மீல்ஸ்
    * சப்பாத்தி + உருளை குருமா 


7) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

    * சிகரட்
    * வேலை
    * நொறுக்கு தீனி (1 மணி நேரத்துக்கு ஒரு தடவை ஏதாவது உள்ள போயி கிட்டே இருக்கணும் ஹி ஹி ஹி)


8) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?

    * ரௌத்திரம்
    * பொய் (உண்மை பேசியதால் நிறைய எதிரிகள் உண்டு)
    *  நல்லா எழுத


9) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?

    * மன்னிப்பு
    * பிச்சை - நான் மட்டும் அல்ல யாரும்
    * அழுகை

10) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று ...?

    * உயிர் நண்பர்கள் - துவண்ட போது எல்லாம் தோள் குடுத்தவர்கள், தவறுகளை சுட்டி காட்டி திருத்தியவர்கள் 
    * என் குடும்பம் - (எவ்வளவு அலும்பு பண்ணாலும் பொறுத்துக்கொள்கிறார்களே!!!)
    *என் பணி


11) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?

    * உலகம்
    * பணம்
    * மனிதம்


12) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?

    * ஒரு மரம் நட வேண்டும்
    * ஒரு 100 பேருக்காவது ஒரு வேலை.
    * உலகம் என் பெயர் சொல்ல வேண்டும் - காந்தி மாதிரி (என்ன ஒரு பேராசை ராஸ்கல்)  


13) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?

    * என்னை பிளாக் எழுத தூண்டிய பதிவர்கள் பாமரன்/சேட்டைக்காரன்/சி‌பிசெந்தில்குமார்/ பிலோசபி பிரபாகரன் (என்னை பிறருக்கு அறிமுகம் செய்த நண்பர்) /நாஞ்சில் மனோ. இவர்களின் எழுத்துக்கள் என்னையும் எழுத தூண்டியது

    *  இந்த தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்த மேலும் என்னை வலைசரம் மூலம் பலருக்கும அறிமுகம் செய்த நண்பர் கவிதை வீதி சௌந்தர்

    *  என்னுடைய எல்லா பதிவுகளுக்கும் கருத்துக்களை சொல்லி தொடர்ந்து உற்சாகப்படுத்தும் நண்பர் நிரூபன் (நேற்று முன்தினம் என் பிளாகில் உள்ள குறைகளை சொல்லி திருத்த வைத்த பெருமையும் இவரை சேரும்)

14) இதை தொடர அழைக்கும் மூன்று பதிவர்கள்..?

    * பாலா பக்கங்கள் - பாலா
    * என் ராஜபாட்டை - ராஜா
    * மகேந்திரன்

வெள்ளி, ஜூலை 15, 2011

நீங்கள் உங்கள் மதிப்பை எப்போதும் இழப்பது இல்லை.

சுப்பு, பேராசிரியர் மாணவர்கள் முன்னே நின்று கொண்டு இருந்தார். ஒரு ஆயிரம் ரூபாய் தாளை காட்டி

"இதன் மதிப்பு என்ன?" கேட்டார் சுப்பு

"ஆயிரம் ரூபாய், எந்த கடையில் சென்று கொடுத்தாலும் ஆயிரம் ரூபாய்க்கான பொருளை வாங்கலாம்" - மாணவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்

"சரியாய் சொன்னீர்கள்" என்று சொல்லிவிட்டு அந்த ஆயிரம் ரூபாயை கசக்கினார், பிறகு "இதன் மதிப்பு என்ன?" திரும்பவும் கேட்டார்.

"அதே ஆயிரம் தான்" மாணவர்கள் சொன்னார்கள்

கீழே போட்டு மிதித்தார், மீண்டும் கைகளால் நன்கு உருட்டி எடுத்தார்

"இப்போது ?" திரும்ப கேட்டார் 

"இப்போதும் இது ஆயிரம் ரூபாய் தான் இதன் மதிப்பில் மாற்றம் இல்லை"  -  மாணவர்கள் சொன்னார்கள்

இப்போது சுப்பு பேச துவங்கினார்

"இது தான் இன்றைய பாடம், நான் எவ்வளவு தான் கசக்கினாலும் இதன் மதிப்பு குறைவது இல்லை. அது போல் தான் நம் வாழ்க்கையும் நம் வாழ்வில் பல முறை, நாம் கசங்கியிருக்க, நாம் கைவிடப்பட்டது உள்ளது போல் உணர்கிறோம், சில சமயங்களில் நாம் எதற்கும் பயனற்ற ஜடம் போல உணர்கிறோம். நாம் செய்யும் முடிவுகள் நம்மை குப்பைமேட்டில் கூட தள்ளி விடலாம். எதற்கும் கலங்க வேண்டாம். 

எது எப்பிடி இருந்தாலும் நீங்கள் அந்த ஆயிரம் ரூபாய் போல உங்கள் மதிப்பை இழப்பது இல்லை.  உங்களுடைய மதிப்பு எப்போதும் உங்களுடையதே. "

திங்கள், ஜூலை 11, 2011

கல்வி - அதிகாரவர்கத்தின் இன்னொரு வணிக வாய்ப்பு !!

இன்னைக்கு நம்மூர்ல சமச்சீர் கல்வி படுற பாடு எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம். இன்னைக்கு இந்தியாவின் சராசரி  படிப்பறிவு சதவிகிதம் 74.04% (2011) ஆனா இது உலக சராசரியை (84%) விட குறைவு.  இந்திய அரசும், மாநில அரசுகளும்  பல்வேறு திட்டங்களையும்,  வரைவுகளையும் நிறைவேற்றி உள்ளன.

கல்வி ஒரு அடிப்படை உரிமை எனவும் அறிவித்து உள்ளது இந்தியா அரசு ஆனாலும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்து உள்ளது.  அப்பிடின்னா எங்கயோ தப்பு இருக்கு, அது என்னான்னு பாக்குறதுக்கு முன்னாடி மத்திய அரசு என்ன மாதிரியான வரைவுகளுக்கு அனுமதி அளித்து இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கிறது அவசியம்.

2009 ஆம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம் அமுலுக்கு வந்தது, இதன் சிறப்பு அம்சம் என்னான்னா

1.    6 முதல் 14 வயதுவரை உள்ள எல்லா குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி

2.    ஆரம்ப கல்வி முடியும் வரை எந்த குழந்தையையும் பள்ளியில் இருந்து நீக்க முடியாது

3.   ஆண்டு இறுதி தேர்வில் வெற்றி பெறுதல் கட்டாயம் இல்லை (இது கொஞ்சம் எதிர் விளைவுகளை உருவாக்கும் அம்சம், எந்த புண்ணியவான் இதை சொன்னரோ)

4.   பள்ளியில் சேர்க்கை பெறாத அல்லது பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் ஆரம்ப கல்வியை முடிக்காத 6 வயதிற்கு மேற்பட்ட   குழந்தைகளை வயதுக்குரிய வகுப்பில் சேர்க்க வேண்டும்.  (இதுவும் ஒரு சர்ச்சைக்குரிய அம்சம் என்னான்னா நீங்க உங்க  11 வயது குழந்தையை நேரா ஆறாம் வகுப்பில் கொண்டு போயி சேர்க்கலாம்)
    
5. 14 வயதிற்கு மேலும் ஆரம்ப கல்வி முடிக்கவில்லை என்றால், ஆரம்பகல்வி முடியும் வரை கல்வி இலவசம்.

6.  தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% ஒதுக்கீடு அளிக்கிறது.

7. திட்டத்திற்கான நிதிச்சுமை (56000 கோடி வருடத்திற்கு)  மத்திய மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும்

8 . பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் (குறைவாக உள்ள இடங்களில்) 3 ஆண்டுகளுக்குள் மேம்படுத்த வேண்டும் இல்லாயேல் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

9.  ஆசிரியர்கள் தகுந்த பட்டபடிப்புகள் முடித்து இருக்க வேண்டும் இல்லையேல் வேலையை இழக்க நேரிடும் இதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

நல்லா தானே இருக்கு, ஆனா ஏன் இது எல்லா எடத்துலயும் நடைமுறைக்கு வரலை என்ன சொல்லாறாங்க தெரியுமா

"மாநில அரசுகள் இந்த திட்டதிற்கான நிதி ஒதுக்கீடு செய்ய முன் வரவில்லை, எனவே இது மததி்ய அரசே ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது."  

"அரசின் கடமைகளை பிறர் தலையில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது" அப்பிடின்னு தனியார் பள்ளிகள் கூறிவிட்டன.  

இதுல இருந்து என்ன தெரியவருதுன்னா எந்த ஒரு மசோதாவோ அல்லது திட்டமோ எந்த குழந்தையையும் பள்ளிக்கு வர வைக்காது எல்லோரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும், எந்த திட்டமும் எல்லோருடைய பங்களிப்பும் சரியா இருந்தா மட்டுமே வெற்றியடையும்.

அப்ப ஏன் குழந்தைக்கு இலவச கல்வி கிடையாதான்னு கேக்குறீங்களா? இது அரசு பள்ளிகள்ல மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள்ல மட்டும் தான் செயல்படுத்த முடியும் போல இருக்கு. தனியார் பள்ளிகள்ல இது சாத்தியம் இல்லை.  அப்புறம் நம்ம குழந்தைகளை அரசு பள்ளியில சேர்க்க நம்ம கௌரவம் இடம் தராது. சரி அதுக்காக தனியார் பள்ளியில இப்பிடி கொள்ளை அடிக்கிறாங்களே கேட்க யாருமே இல்லையான்னு கேக்குறீங்களா?

அதுக்கும் நீங்க தானே காரணம், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை கந்து வட்டிக்கு வாங்கியாவது அந்த பள்ளிக்கூடத்தில ஏன் புள்ளையை சேர்த்தே தீருவேன்னு நிக்கிறீங்க.  வசதியா இருக்கணும்ன்னா செலவு செஞ்சுதான் ஆகணும் ஒத்துக்கிறேன் ஆனா கல்வி ஹோட்டல் மாதிரி பஃப்பேன்னு சொல்லி சாப்பிடாத ஐட்டத்துக்கு எல்லாம் பில் போடுற மாதிரி அயிடக்கூடாதுல்ல.  

ஏற்கனவே கல்வி கட்டண முறைப்படுத்துறோம்ன்னு தமிழக அரசு எடுத்த முயற்சிகள் என்ன ஆச்சு, எத்தனை பள்ளிகூடத்துல அந்த கட்டணம் வசூல் பண்ணாங்க? இன்னும் அதுக்கே நிறைய பள்ளிகள் ஒத்துக்கலையே அவங்க எப்பிடி இலவச கல்வி அப்பிடின்னா ஒத்துக்குவாங்க?

எல்லா தொழிலும் லாபமா நடக்கனும் தானே எல்லோரும் ஆசைபடுவாங்க கேக்குறீங்களா? அது கூட நியாயம் தான் ஆனா லாபம் மட்டுமே பிரதானம்ன்னு நினைச்சா வேற தொழில் பண்ணலாமே.

இன்னைக்கு தரமான கல்வி இந்தியால படிக்கணும்ன்னா குறைந்தபட்சம் ரூ 60,000 முதல் ரூ 75,000 வரை செலவு செய்ய வேண்டி இருக்கிறது, சராசரியா மாதத்திற்கு ரூ 6,000  வரை. இது ஒண்ணும் டிகிரி படிக்க இல்லை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க ஆகும் செலவு மட்டுமே, அடுத்தடுத்த ஆண்டுகளில் இது குறையும் என்றாலும் குறைந்த பட்சம் 40,000 வரை கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. மாத வருமானம் 10,000 உள்ள குடும்பங்கள் மாதா மாதம் இவ்வளவு பணம் எங்கிருந்து செலவு செய்வார்கள்? 

நான் எல்லாம் படிக்கும் போது எம்‌சி‌ஏ-க்கு மூணு வருஷம் கட்டுனா பீஸ் ரூ 23,000 இன்னைக்கு  ஒண்ணாம் கிளாஸ் சேர்க்க போன அதை விட ஜாஸ்தியா கேக்குறாங்களே என்னத்த சொல்ல.  ரொம்ப வருசத்துக்கு முன்னாடியில பாஸு இப்பதான் ஒரு ஏழு வருசத்துக்கு முன்னாடி முடிச்சேன். 

அப்ப எங்க குழந்தைகள் தரமான கல்வி இலவசமா படிக்க வழியே இல்லையான்னு கேக்குறீங்களா?  பள்ளிக்கூடம் எல்லாம் அரசுடைமை ஆனா மட்டும் தான் இது எல்லாம் சாத்தியம்.  எது எதுவோ அரசுடைமை ஆகுது இது ஆகாதா என்ன? அதுவும் இல்லாம இங்க இலவசமா குடுக்க வேண்டியது எல்லாம் குடுத்து முடிச்சாச்சுன்னு நினைக்கிறேன்.  

அரசாங்கத்துக்கிட்ட எதிர்பாக்குறது எல்லாம் தரமான கல்வி, ஒரே மாதிரியான கல்வி அதுவும் நியாயமான கட்டணங்களில், எந்த அரசு இதை செய்யுமோ? இன்னொரு காமராஜர் வருவாரா?

வெள்ளி, ஜூலை 08, 2011

விவாகரத்து - ஏன் எதற்கு?

இன்றைய சூழ்நிலையில் சாதாரணமாகி விட்ட இன்னொரு நிகழ்வு விவாகரத்து. கடந்த மூன்று மாதங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 667. இது தமிழகத்தின் எண்ணிக்கை மட்டுமே. இது அதற்கு முந்தைய மூன்று மாதங்களை கணக்கில் கொள்ளும்போது 17% அதிகம் என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது ஏன் இன்று தினசரி நிகழ்வாக மாறியது?  இது ஒரு மடத்தனம் என்பது ஏன் சிலருக்கு புரியவில்லை என்று இது வரை எனக்கும் புரியவில்லை.

1. தவறாக புரிந்து கொள்ளல்

2. தற்பெருமை

3. தொடர்பு இன்மை

4. விட்டுக்கொடுத்தல் இல்லாமை 

இந்த நான்கும் முக்கிய காரணிகளாக நிபுணர்களால் சொல்லப்படுகிறது.  ஆனாலும் இவை எல்லாம் தவிர்க்க வேண்டியவை அல்லது எந்த ஒரு பிரச்சனைகள் வரும் போதும் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காமல்  கொஞ்சம் நிதானித்து யாருக்கும் பிரச்சனை இல்லாத ஒரு முடிவை எடுப்பதே சிறந்தது. 

இன்று பெண்களும் நிறைய படிக்கிறாங்க, வேலைக்கு போறாங்க. அவங்க முடிவை அவங்க எடுக்கணும்ன்னு நினைக்கிறாங்க. அதுல எந்த தப்பும் இல்லை ஆனா நான் முடிவு எடுத்துட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்னு அடம் பிடிக்கும் போது தான் பிரச்சனைகள் ஆரம்பம் ஆகுது.

இதுக்கு பெண்கள் மட்டும் காரணமா இல்ல, 90% ஆண்கள் தான் எப்பிடின்னா வீட்டு பொம்பளை என்ன முடிவு எடுத்தாலும் முடிவு எடுக்குறது இருக்கட்டும், ஏங்க இப்பிடி பண்ண நல்லா இருக்கும்ன்னு ஆரம்பிக்கும் போதே உனக்கு ஒண்ணும் தெரியாது சும்மா இருன்னு சொல்லுற ஆண்கள் தான் அதிகம்.  சில வீடுகளில் இது மாத்தியும் நடக்கும், வீட்டம்மா  பேச்சுக்கு மறு பேச்சு பேசாத ஆண்களும் உண்டு. 

இது கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி இனி உன் கூட இருந்து அழுதுகிட்டே வாழுறத விட தனியா போயிட்டா நிம்மதியா இருப்பேன்னு நினைக்கிற அளவு ரெண்டு பேரும் முடிவு பண்ணி வர இடம் தான் விவாகரத்து.  ஆனா அதோட எல்லாம் முடிஞ்சு போயிடுதா? இல்லை அடுத்து வருகிற பிரச்சனைகள் அதிகம்.  அதிலும் முக்கியமானது குழந்தைகளின் எதிர்காலம்.  அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

குழந்தைக்கு தந்தை அல்லது தாயின் மேல் ஒட்டுதல் (பாசம்)  அதிகம் இருக்கும் தனியாய் அவர்களை பராமரிப்பது அவ்வளவு எளிது அல்ல, பெண் வேலைக்கு போகிறவர் என்றால் அவருடைய பணத்தேவைகளை அவரால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதுவே ஒரு வேலைக்கு செல்ல முடியாத பெண் என்றால் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு உரித்தாகிறது.

ஒன்று தந்தை குழந்தையை தான் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும் அதாவது குழந்தை தந்தையுடன் இருக்கும் அதை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கொஞ்சம் எளிது, பெரியவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில்  குழந்தையை பராமரிப்பதும், கண்காணிப்பதும் கடினம்.   குறைந்த பட்ச அன்பாவது கிடைக்குமா என்பது சந்தேகமே

இல்லை குழந்தை தாயுடன் இருக்கும் அது பெரியவர் (18 வயது) ஆகும் வரை அதன் எல்லா தேவைகளுக்கும் தந்தை பணம் வழங்க வேண்டும்.  தந்தை பணம் வழங்க முடியாத சூழலில் அந்த பெண்ணும் குழந்தையும் எதிர் பார்த்து இருப்பது அவளுடைய பெற்றோரையும், சகோதரர்களையும் ஆரம்பத்தில் அவர்கள் ஆதரவு அளித்தாலும் அதை தொடர்ந்து செய்வார்களா தெரியாது, அவர்கள் சுமை என்று நினைத்து விட்டால், அவர்களின் நிலைமை கவலைக்கிடம் தானே!!??

இது மட்டும் அல்லாமல் சமூக ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கிறது, எந்த ஒரு சுப காரியங்களிலும் முன் நின்று செய்ய முடியாமல் போகிறது.  இவ்வளவு பிரச்சனைகளையும் ஆராயாமல் அவசரத்தில் முடிவெடுத்து விட்டு பின் வருந்துவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இவ்வளவும் தெரிந்து இருந்தும் இன்னும் நீதிமன்றங்களை நோக்கி போவோர் கூட்டம் இன்னும் குறையவில்லை.

இதுக்கு யாராவது புதுசா சட்டம் கொண்டு வந்தா தேவலை, குழந்தை இல்லையா விவாகரத்து கிடையாது அப்புறம் விவாகரத்துக்கு குறைந்த பட்ச வயது 55 அப்பதான் இது எல்லாம் குறையும். இல்லாட்டி ஒரு நாளைக்கு நடக்குற கல்யாணங்களின் எண்ணிக்கையை விட விவாகரத்துக்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும் நிலைமையும் ஒரு நாள் வரும்.

ரொம்ப சீரியசா பேசிட்டேனோ சரி கொஞ்சம் சிரிக்கலாம் 

ஒரு நீதிபதி விவாகரத்து தொடர்பாக ஒரு பெண்ணுடன் நேர்காணல் நடத்திக்கொண்டு இருந்தார்

"உங்க வீட்டை பத்தி கொஞ்சம் சொல்றீங்களா?"

அவள் பதிலளித்தாள் "நான்கு ஏக்கர் நிலத்தில நடுவுல எங்க வீடு இருக்கு அப்புறம் வீட்டை சுத்தி நிறைய தோப்பு இருக்கு"
 
"இல்லை, நான் உங்க குடும்பத்தை பத்தி கேட்டேன்"

"எனக்கு ஒரு மாமியார் மாமனார் இருக்காங்க, அப்புறம் 2 நாத்தனார் ஒரு கொளுந்தனார் எல்லோரும் ஊருல இருக்காங்க.. "

"இல்லைம்மா உங்க குடும்ப வாழ்க்கையில ஏதாவது பிரச்சனை இருந்துச்சா?"

"ஆமாம், என் மகன் மற்றும் மகள் எப்ப பார்த்தாலும் ஒரு வாக்மேன்-ஐ காதுல வச்சுக்கிட்டு நான் சொல்ற  எதையும் கேட்கிறது இல்லை"

"தயவு செய்து..." அவர், மீண்டும் முயற்சித்தார்

"மேடம், உங்கள் கணவர் எப்போதாவது உங்களை அடிச்சு இருக்காரா?"

"ஆமாம்," அவர், பதிலளித்தாள்

"எப்ப"

"ஒரு வாரத்துக்கு இரண்டு முறை பற்றி அவர் எனக்கு முன்னாடி எழுந்தா அடிச்சு எழுப்புவாரு."

இறுதியாக, வெறுப்பில், நீதிபதி, கேட்டது

"அம்மா, ஏன் நீங்கள் ஒரு விவாகரத்து விரும்புகிறீர்கள்?"

"ஓ, எனக்கு விவாகரத்து வேண்டாம்," அவள் பதிலளித்தாள்.

"நான் எப்பயும் விவாகரத்து பண்ணனும் ஆசைபட்டது கிடையாது. என் கணவர் இல்லை, அவருக்கு தான் விவாகரத்து வேணும்னு கூட்டிக்கிட்டு வந்தாரு ஏன்னா அவரால என் கிட்ட பேச முடியல்லைங்க்கிறார்! "


டிஸ்கி : இது சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது, என்னடா இவன் எப்பயும் பொம்பளைகளை தப்பா பேசுறான்னு நெனைச்சுடாதீங்க..  உங்க கருதுக்களையும் கொஞ்சம் பதிங்க படிக்கிறவங்க எல்லாம் கொஞ்சம் உங்க கிட்ட இருந்தும் தெரிஞ்சுகிடட்டும்.

வியாழன், ஜூலை 07, 2011

ஆண்மை தவறேல்

கல்யாணி தன் கணவருடன் அவசரமாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டு இருந்தாள். அது ஒரு சிறிய மருத்துவமனை, ஆனால் எப்போதும் பரப்பாக இருக்கும்.  டாக்டர். சுப்பு IN  என்று இருந்ததை பார்த்து கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.  தன் பெயரை வரவேற்பறையில் இருந்த நர்சிடம் பதிந்து விட்டு டோக்கன் வாங்கிக்கொண்டு வரிசையில் அமர்ந்தாள்.

கல்யாணி 26 வயது, கையில் ஒண்ணரை வயது மகள். வீட்டில் வேறு யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து இருக்கிறார்கள்.   யாரும் வீட்டிற்கு திரும்பி வருவதற்குள் வீட்டிற்கு போக வேண்டும் என்ற பதற்றம் வேறு எல்லாமும் சேர்ந்து முகம் வேர்த்து கிடத்தது.

அவர்கள் முறை வந்ததும் உள்ளே சென்றாள்.

"சொல்லும்மா என்ன பிரச்சனை"

"நீங்க எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும் டாக்டர்"

"சொல்லும்மா நிச்சயமா என்னால முடிஞ்சதை பண்றேன்"

"எனக்கு ரெண்டாவதா குழந்தை உண்டாயிருக்கு டாக்டர், அபார்ஷன் பண்ணனும்"

"ஏம்மா வீட்டில ஏதாவது பிரச்சனையா?"

"அது வந்து டாக்டர் ஏற்கனவே ஒரு பொண்ணு அதுவும் ஒண்ணரை வயசு தான் ஆகுது, இதை பார்த்துக்கவே கொஞ்சம் கஷ்டமா இருக்கு, அதுவும் இல்லாம ரெண்டாவதும் பொண்ணா பொறந்துட்டா இன்னும் பிரச்சனை ஆயிடும் ஸார், எங்க மாமியாரை கன்வின்ஷ் பண்றது கஷ்டம் டாக்டர். உங்களை தான் மலை போல நம்பி இருக்கோம்"

கொஞ்ச நேரம் அமைதி

"சரிம்மா உனக்கு இன்னொரு வழி சொல்றேன் கேப்பியா? " 

இருவருக்கும் உள்ளூர சந்தோஷம், டாக்டர் அபார்ஷன் பண்ண ஒத்துகிட்டார்ன்னு.

"ரெண்டு கொழந்தயையும் பார்த்துக்க முடியாதுன்னு நீ சொன்னதால, உன் கையில இருக்க கொழந்தையை கொன்னுடு. அப்புறம் உன் பிரச்சனை தீர்ந்துடும் அதுவும் இல்லாம அடுத்து பொறக்கபோறது பையனா இருந்துட்டா உங்க மாமியார் சந்தோஷப்படுவாங்களே?" 

கொஞ்சம் அதிர்ச்சியான கல்யாணி

"அது எப்பிடி டாக்டர் பெத்த புள்ளைய என் கையால கொல்றது, என் மனசு என்ன கல்லுன்னு நெனைச்சுட்டீங்களா?"

"எப்பிடியும் நீ ஒரு பிள்ளயை கொல்லனும்ன்னு தான் இங்க வந்து இருக்க, அது எந்த பிள்ளையாய் இருந்தா என்ன?"

"இல்ல டாக்டர் அது மட்டும் என்னால முடியாது",

"கையில இருந்தா மட்டும் இல்ல வயித்தில இருந்தாலும் அதுவும் குழந்தைன்னு புரிஞ்சுக்கிட்டேன் டாக்டர். இனி இப்பிடி ஒரு முடிவு எப்பவும் எடுக்க மாட்டேன். ரொம்ப நன்றி டாக்டர்"  சந்தோசமாய் சொன்னார் கல்யாணியின் கணவர். 

மனதில் இருந்த பாரம் இறங்கியது போல இருந்தது கல்யாணிக்கு, சந்தோசத்துடன் வேகநடை போட்டாள் வீடு நோக்கி.

புதன், ஜூலை 06, 2011

அச்சம் தவிர்

ஒரு நாளு சாத்தானுக்கு பணக்கஷ்டம் அங்கயும் விலைவாசி எல்லாம் எறிப்போச்சு, சாத்தானுக்கு அதுக்கு கீழே வேலை பாக்குறவங்களுக்கு சம்பளம் குடுக்க காசு பத்தலை.   அதனால வாழ்க்கையே வெறுத்துப்போய் இனி இந்த வேலையை செய்யுறது இல்லைன்னு முடிவு பண்ணிச்சு.   அதனால தான் கிட்ட இருக்க பொருளையெல்லாம் விக்கலாம்ன்னு சந்தைக்கு போச்சு.

சந்தையில எல்லா பொருளுக்கும் ஒரு விலை போட்டு பரப்பி வச்சுச்சி

விலைபட்டியல் கீழே இருக்குற மாதிரி

வன்மம்              ரூ.    500.00

பகைமை        ரூ.     520.00

பொறாமை        ரூ.     530.00

காழ்ப்புணர்ச்சி    ரூ.     575.00

வஞ்சம்            ரூ.     700.00

********        ரூ.100000.00 

நெறைய பேரு பார்த்துக்கிட்டே போனாங்க, ஒருத்தரும் வாங்குரா மாதிரி தெரியல

கீழே 50% தள்ளுபடி (selected items) ன்னு வேற எழுதி வச்சுச்சு, அதை பார்த்த ஒருத்தரு கிட்ட வந்து சாத்தான் கிட்ட எல்லா பொருளும் சீப்பா தான் இருக்கு,    ஆனா கடைசியா ஒரு ஒண்ணு பேரு இல்லாம இருக்கே அதுவும் இல்லாம விலையும் ஜாஸ்தியா இருக்கே அப்பிடி என்ன அது

அதுவா, அதுக்கு பேரு அதைரியம், இது தான் நான் பயன்படுத்துறதுல ரொம்ப வலிமையான ஆயுதம். மத்த எதுவும் சிலர் கிட்ட எடு படாம போயிடும் ஆனா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அவங்க தைரியத்தை கெடுத்து விட்டுட்டா அந்த ஆளு அவ்வளவு தான், அப்பறம் என் விருப்பப்படி அவங்கள என்னால ஆட்டி வைக்க முடியும்.

எல்லோருடைய பக்கத்துலையும் இதை நான் வச்சு இருப்பேன், ஆனா ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும் இது என்னோட வேலைன்னு..



செவ்வாய், ஜூலை 05, 2011

விவேகம் பழகு..

அது ஒரு வெயில் கால பகல் பொழுது, சுப்பு பாதையோர மரத்தடியில் இளைப்பாறிக்கொண்டு இருந்தார்.  வயதும், தொடர்ந்து நடந்து வந்த களைப்பும், அவர் கையில் இருந்த மூட்டையும் அவரை அயர வைத்தது.  இன்னும் 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் அவர் வீட்டுக்கு, அடுத்த பஸ் வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் 

யாராவது அந்த வழியாக வரமாட்டார்களா என ரோட்டை பார்த்த படி இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு மோட்டோர் பைக்கில் ஒரு இளைஞர் வருவதை பார்த்தார். அந்த வண்டியை நிறுத்தி

"தம்பி நீங்க வல்லக்கோட்டை பக்கமா போறீங்களா?" சுப்பு கேட்டார்

"ஆமா" அந்த  இளைஞன் கூறினான்

"நீங்க தப்பா நினைக்கலைனா இந்த மூட்டையை உங்க வண்டியில வச்சு வல்லக்கோட்டை வரை எடுத்துக்கிட்டு போகமுடியுமா?"

"நான் எடுத்துட்டு போயிடுவேன் ஆனா..." இழுத்தான் அந்த இளைஞன்

"என்ன ஆனா?"  சுப்பு கேட்டார்

"இல்லை நான் வல்லக்கோட்டை தாண்டி போகணும். வண்டியில நான் 10  நிமிசத்துல போயிடுவேன், நீங்க நடந்து வரணும்ன்னா இன்னும் ஒரு மணி  நேரம் ஆகும். நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கணும். அது முடியாதே?"  அந்த இளைஞன் சொல்ல,

"சரி தம்பி நீங்க வேணா போங்க, நானே எடுத்துக்கிட்டு வர்றேன். ஒண்ணும் பிரச்சனை இல்லை. "  சுப்பு சொன்னார்

அந்த இளைஞனும் புறப்பட்டான்

கொஞ்ச தூரம் போனதும், அவன் உள்ளுணர்வு சொன்னது "என்ன ஒரு முட்டாள் நீயி? அந்த மூட்டையில ஏதாவது விலை மதிப்பிலாத பொருள் இருந்தா அப்பிடியே அமுக்கியிருக்கலாமே?"

அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு வண்டிய திருப்பி எடுத்துக்கிட்டு வந்தான்
"ஐயா பெரியவரே உங்கள பாக்க பாவமா இருக்கு உங்க மூட்டையை குடுங்க, நான் எடுத்துட்டு போறேன் நீங்க வந்து வாங்கிக்குங்க"

கொஞ்ச நேரம் யோசித்த சுப்பு

"இல்ல தம்பி, இந்த மூட்டையை நானே தூக்கிக்கிட்டு வர்றேன் ஒண்ணும் பிரச்சனை இல்லை"

"ஏன் என்னாச்சு?" இளைஞன் கேட்க

"இல்லை உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லை" சுப்பு சொன்னார்.

"ஏன் ஏன் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" - இளைஞன் கேட்க

"எந்த உள்ளுணர்வு உங்களுக்கு இந்த மூட்டையில ஏதாவது இருக்குமோன்னு நினைக்க வைச்சதோ, அதே உள்ளுணர்வு தான் உங்க மேல சந்தேகபடவும் சொலுச்சு" சுப்பு நிதானமாக சொன்னார்.


நீதி
அந்நியரை நம்பும் முன் நிதானமாக யோசியுங்கள்


திங்கள், ஜூலை 04, 2011

பேராசை குருடாக்கும்

ஒரு ஊர்ல ஒரு திருடன் இருந்தான் பேரு ஆறுமுகம், ஒரு நாள் அந்த ஊர்ல சந்தை கூடுச்சு. வித விதமான  பாத்திரங்கள், பண்டங்கள்,  வித்தியாசமான உணவு பொருட்கள். எல்லாம் ரொம்ப பிசியா வியாபாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க. 

ஆறுமுகம் அந்த சந்தையை சுத்தி வந்தான் எந்த பொருளும் அவனுக்கு சந்தோஷம் தரலை ஏன்னா எல்லாம் சின்ன சின்னதா இருந்துச்சு.  எதையாவது பெருசா அடிக்கணும்ன்னு யோசிச்சுகிட்டே வந்தான். சந்தைக்கு நடுவில ஒரு ஆளு தங்கம் வெள்ளி நகை எல்லாம் வச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருந்தாரு. தங்கநகை எல்லாம் மேஜை மேல பரப்பி இருந்தது

தங்கத்தை பார்த்த உடனே ஆறுமுகத்துக்கு எதுவும் ஓடலை, அவன் மனசு பூரம் அந்த தங்கநகை வந்துட்டு போச்சு,

"இங்க இருக்க நகையை கொள்ளை அடிச்சா" அப்பிடின்னு நினைச்சான்.

"நான் கூட இந்த ஊர்ல ஒரு பெரிய பணக்காரன் ஆய்டுவேன், அப்புறம் பெருசா வீடு கட்டீரலாம். வேலைக்கு நெறைய பேரு வச்சுக்கிடலாம். நல்ல உடை, நல்ல சாப்பாடு சாப்பிடலாம்" இப்பிடி எல்லாம் அவன் மனசுல பேராசை உண்டாச்சு. உடனே அந்த கடையில இருந்த நகையை எடுத்துக்கிட்டு எடுத்தான் ஒரு ஓட்டம்.

"திருடன் திருடன் பிடிங்க, என் கடையில இருந்து நகையை திருடிக்கிட்டு போறான்" கடைக்காரர் கத்த ஆரம்பிச்சாரு.  

கொஞ்ச நேரத்தில ஆறுமுகம் அங்கிருந்த மக்கள் கிட்ட மாட்டிக்கிட்டான். அவனை அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்தார் முன்னாடி கொண்டு போயி நிறுத்துனாங்க.

பஞ்சாயத்து தலைவர் கேட்டாரு

"ஏன்யா இவ்வளவு கூட்டதில எப்பிடிய திருடனும்ன்னு தோணுச்சு, எல்லோரும் பாக்குறாங்கன்னு உனக்கு தெரியலையா"?

தலையை தொங்கப் போட்டுக்கொண்ட ஆறுமுகம்,

"ஐயா என்னை மன்னிச்சுடுங்க, என்னோட ஆசை என் கண்ணை மறைச்சுடுச்சு, நகையை  பாத்ததுக்கு அப்பறம் அங்க இருந்த யாரும் என் கண்ணுக்கு தெரியலை நகை மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது"