திங்கள், டிசம்பர் 26, 2011

ஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....

இப்போ தான் இந்த வருஷம் ஆரம்பிச்ச மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள முடியப்போகுது. நாட்கள் எல்லாம் நிமிஷம் மாதிரி பறந்து ஓடுது, மறக்க முடியாத பல நிகழ்வுகளின் கோர்வையாய் நம்மை பிரிய இருக்கிறது 2011. பல சுகமான நிகழ்வுகள், பல சோகமான நிகழ்வுகள், எல்லாம் முடிஞ்சு போனது ஆனாலும் நம் தவறுகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம், இல்லேன்னா ஒரு தடவை செய்த தவறுகளை மீண்டும் செய்ய நேரிடலாம்.   

இந்த உலகில் நாம் அடிமையான விஷயங்கள் நிறைய உள்ளன மது, நிகோடின், ஹெராயின், பாலியல், மற்றும்  ஐபோன்கள்.  இதை எல்லாம் விட மிக பெரிய போதை நமது சொந்த கருத்துக்களுக்கு நாமே அடிமையாகி உள்ளது. நாம் சொல்வது தான் சரி என்று நினைக்க ஆரம்பிக்கும் போதே இந்த போதை துவங்குகிறது. 

சிறந்த உதாரணம் அன்னா ஹசாரேன்னு ஒரு பெரிய மனுஷன் பண்ணுற வேலை. இதுவரை அவர் இந்த வருஷம் நிறைய வாட்டி உண்ணாவிரதம் இருந்துட்டார், நாளைக்கு கூட உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறார், அவர் நினைக்கிறது எல்லாம் நடக்கணும்ன்னு அவர் நினைக்கிறது அவருக்கு சரியா இருக்கலாம் ஆனா நடைமுறைக்கு சாத்தியம் தானான்னு யோசிச்சா அது என்னவோ ஒத்து வராதுன்னு தோணுது.

லஞ்சம் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்ன்னு சொல்றாரு, ஆனா அதுக்கு லஞ்சம் வாங்காம இருந்தாலோ இல்ல நாம லஞ்சம் குடுக்கமா இருந்தாலோ மட்டும் முடியுமா? இந்த பிரச்சனையோட ஆணிவேர் வேற, வேர்ல இருக்க கோளாரை சரி செய்யாம கிளையில இருக்கிற பிரச்சனைக்கு மருந்து தேடுவது புத்திசாலித்தனமா செயலா இருக்காதுங்கிறது என்னோட எண்ணம்.

சின்ன உதாரணம் சொல்றேனே, இப்போ எல்லாம் டியூஷனுக்கு வர்ற பசங்களுக்கு நிறைய மார்க் போடுற ஆசிரியர்கள் எத்தனை பேர்? ஏன் பண்ணுறாங்கன்னு யோசிச்சா அப்படி செஞ்சா தானே பசங்க டியூசனுக்கு வருவாங்க? அப்போ தானே வருமானம் வரும். இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரோட பொருளாதார சூழ்நிலையே நிர்ணையிக்குது. சொல்ல வந்த விஷயம் உங்களுக்கு புரிஞ்சு இருக்கும். அதாவது ஒருவருடைய பொருளாதார சூழ்நிலையே இதுக்கு எல்லாம் ஆரம்ப புள்ளி,

இதுக்கு தீர்வு தான் என்ன, ஒண்ணும் கிடையாது, நான் யோசிச்ச வரையில. அல்லது அது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏன்னா நம்ம மக்கள் தொகை அப்பிடி, எல்லோருக்கும் கல்வி இலவசமா கொடுக்கணும், மருத்துவம் இலவசமா கொடுக்கணும் இது ரெண்டு தான் நம்ம கிட்ட ஒரே வழி. இது இரண்டுக்கும் தான் வாழ்நாள் சேமிப்பை கரைக்கும் சக்தி உண்டு. இதை எல்லாம் அரசு செய்ய முடியாதான்னு கேக்குறீங்களா? செய்யுறதுக்கும் பணம் வேணுமே? வரி அப்பிடின்கிற பேர்-ல அதுவும் நம்ம தலை மேலே தானே விழும். இப்பயும் நான் எஜுகேஷன் செஸ்ன்னு வரி கட்டுறேனேன்னு கேக்குறீங்களா? அதுவும் பத்தாமா தானே அரசு பள்ளி எல்லாம் நலிவடைஞ்ச நிலையில இருக்கு?

அப்ப இந்தியாவுல லஞ்சம் ஊழல் ரெண்டையும் ஒழிக்க முடியாதான்னு கேக்குறீங்களா? அது தொட்டில் பழக்கம் நீங்க அதை குற்றம்ன்னு பார்க்காம நீங்க கொடுக்கிற 100 ரூவா ஒரு குடும்பத்தை சந்தோஷமா வாழவைக்கிற உதவின்னு வச்சுக்கோங்களேன் என்ன கெட்டுப்போச்சி. இல்லை  உங்களுக்கு ஆக வேண்டிய வேலைய முடிச்சு குடுக்குறதுக்கு குடுக்குற சர்வீஸ் சார்ஜ்ன்னு நெனைச்சுக்கோங்க தப்பா தெரியாது!!   

நீங்க சொல்லுறது கேக்குறது,  50 / 100 வாங்குனா பரவாயில்லை அது அவன் பொருளாதார சிக்கல் எல்லாம் ஒத்துகிறோம் ஆனா கோடிக்கணக்கில வாங்குறாங்களே சிலர் அதுக்கு என்ன சொல்றீங்கன்னு தானே கேக்குறீங்க? பேராசைன்னு ஒரே வார்த்தையில சொல்லிடலாம். விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கிறது சகஜம் தானே, அதை விட முக்கியம் அதையும் செய்ய துணியிறான்னா அதுக்கு மேலேயும் ஏதோ ஒண்ணு கிடைக்குதுன்னு அர்த்தம். அதுவும் இல்லாம அவங்க பக்கம் ஏதோ தப்பு இருக்குனு தானே அர்த்தம், அப்படி இருக்குறப்ப இந்த லஞ்சம் ஊழல் எல்லாத்தையும் ஒழிப்பேன்ன்னு சொல்லுறது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு பேச்சு தானே. மலிவான புகழுக்கு ஆசைப்பட்டு செய்யுற வேலை தானே?? உங்களுக்கு என்ன தோணுதுன்னு கொஞ்சம் சொன்னா தேவலை....


டிஸ்கி : ரொம்ப நாளா பதிவு பக்கம் வார முடியல கொஞ்சம் வேலை பளு அதிகம். நண்பர்கள் மன்னிக்கவும், முடிந்த வரை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன். நண்பர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வரும் ஆண்டு எல்லா நல்லவைகளும் நிறைந்த ஆண்டாக அமைய இறைவனை வேண்டுகிறேன்.  

இன்றைய லொள்ளு


வியாழன், டிசம்பர் 01, 2011

தண்ணீர் தண்ணீர்

இன்று தமிழகத்தை சூழ்ந்து இருக்கும் இன்னொரு பிரச்சனை நதிநீர்.  தொடர்ந்து மற்ற மாநிலங்கள் நீர் தருவதை குறைத்து அல்லது நிறுத்தி வருவதை பார்க்கும் போது எங்கோ படித்த கவிதை வரி ஞாபகம் வருகிறது "என் தாத்தா தண்ணீரை ஆற்றில் கண்டார். என் அப்பா கிணற்றில் பார்த்தார், நான் குழாயில் கண்டேன். என் மகன் பாட்டிலில் பார்க்கிறான், என் பேரன் பார்ப்பதற்கு என்ன இருக்கும்?".  இதுவரை சும்மா இருந்த கேரளாவும்,  வேற அணை கட்டியே தீருவோம்ன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு போராட்டம் உண்ணாவிரதம்ன்னு  ஆரம்பிச்சுட்டாங்க.

அவங்க சொன்ன மாதிரி செஞ்சுட்டாங்கன்னா கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் நடைபெறும் விவசாயம் நக்கிக்கிட்டு போயிடும். குடிநீருக்கு அவதிப்படும் நிலையும் வரும்.  இன்னைக்கு இந்த பிரச்சனை மிகவும் தீவிரமா அணுகப்படுவதால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழல் இருக்கவே செய்கிறது. 

இதுவரை காவேரியும்,பாலாறும்  மட்டுமே பிரச்சனையாய் இருந்தது, இனி முல்லைபெரியாறும். இனியும் மௌனமாய் இருந்தால் தமிழ்நிலம் பாலைநிலமாய் மாறும் என்பது கண்கூடு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தி இருந்த பூமி இப்போது பொட்டல் காடாய் கிடக்கிறது, ஆடுகளும் மாடுகளும் ரசாயன தீவனங்களை தின்பதால் பாலில் கூட அமிலத்தின் அளவும் அதிகமாகி விட்டன.

இனி குடிநீர் கூட சில பல மைல்கள் நடந்து சென்று எடுத்துவரும் கொடூர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் சில கிராம மக்கள். மரங்கள் நிறைந்து இருந்த தமிழக வனங்கள் இன்று வெறும் முட்புதர்களால் மூடிக்கிடப்பது வேதனை.   அந்த காலத்தில் கோயில் கட்டும் போது குளத்தையும் சேர்த்தே வெட்டினார்கள், அது  கடவுளுக்கு அபிஷேகம் செய்ய என்று புரிந்து கொண்டது நம் முட்டாள்தனம் என்றால் மிகையில்லைதானே. 

இன்று அந்த குளங்களின் நிலைதான் என்ன? கடவுள் கூட ஓடி விடுவார் ஒரு முறை அந்த நீரை வைத்து அபிஷேகம் செய்தால். குளங்கள் எல்லாம் குப்பைமேடானதிற்கும், மணல் மூடி போனதிற்கும் யார் பொறுப்பு நாம் தானே?  நம்முடைய பொறுப்பற்ற தன்மைதானே?? இனி எந்த அசோகர் வரவேண்டும் என்று நாம் காத்துக்கொண்டு இருக்கிறோம்? நம்மை சுற்றி உள்ள நீர்நிலைகளை நாம் அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அல்லது பாதுகாத்து வந்தாலே நமக்கு தேவையான நீர் கிடைக்குமே? 

சரி என்ன தான் பண்ணுறதுன்னு கேக்குறீங்களா? நீராதாரங்களை பெருக்குவதிலும் அதை முறையாய் பராமரித்தாலும் ஒரே தீர்வு. யாருடைய தயவும் இல்லாமல் தமிழகத்தின் நீராதாரம் இருக்க வேண்டுமானால்,  ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தமிழகத்தின் பிரதான பாசன வசதிகளான 35 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீராதாரப் பகுதிகள் பல ஆண்டுகளாகப் பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகி, அவற்றை தூர் வாராமல், பல ஏரிகள் காணாமல் போய்விட்டன. பல ஏரிகளின் கரைகள் மட்டும் உள்ளன. இதன் விளைவாக, அண்மைக் காலங்களில் பெரிய அளவில் மழை பெய்தாலும், முறையாக தேக்கி வைக்க வாய்ப்பு இல்லாமல் கடலுக்குச் சென்றுவிட்டது.

ஏரி,  குளங்களை குடியிருப்பு நிலங்களாக மாற்றி வெளிநாட்டினரும், வெளிமாநிலத்தவரும் வாங்குவதைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்

அடுத்து முக்கியமான விஷயம் மணற்கொள்ளை, ஏறக்குறைய தமிழகத்தில் இருக்கும் எல்லா ஆறுகளிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது, இன்னும் சட்டங்கள் கடமையாக்கப்பட்டு மணற்கொள்ளை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். தொழில்வளம், வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் நிலை இவைகள் பாதிக்கப்படாமல், நிலம் மற்றும் நீர் மாசுபடுவதைத் தடுத்தல் மற்றும் மாசுபடுவதைத் தடுக்க அரசு ஆவண செய்யவேண்டும். 

மழைநீர் சேகரிப்பு, நீரைப் பயன்படுத்தும் முறையில் விழிப்புணர்வு போன்றவைகளில் அரசும் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செயல்படுத்தவில்லை. அவைகளும் சரிசெய்யப்பட்டு சரியான திட்டங்களும் வகுக்கப்படவேண்டும்.

காத்திருப்போம் எம் தாகம் தீரும் நாளுக்காய் !!

இன்றைய லொள்ளு

இப்பிடி ஒரு ப்ராடக்ட் வந்தா நல்லா தான் இருக்கும்


புதன், நவம்பர் 30, 2011

நம்பினோர் கெடுவதில்லை

ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா? விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவெடுத்தேன், வேலை, உறவு உயிர் எல்லாம். வாழவே பிடிக்காத இந்த சமூகத்தில் இத்தனை நாள் பொறுமையாய் வாழ்ந்ததே போதும் இனியும் வேண்டாம் இந்த பிழைப்பு. எனக்குள் நானே பிதற்றிக்கொண்டே உறங்கிப்போனேன்.

எத்தனை மணி என்று தெரியவில்லை.  நான் இருந்த இடம் முழுவதும் வெளிச்சம் ஆனால் அது புது இடமாய் இருந்ததால் விடியவில்லை என்று மட்டும் உணர்ந்தேன். வேறு ஏதோ ஆகி விட்டதையும் அறிந்தேன். தென்றல் மெல்ல வருடியது, அந்த சுகம் இதுவரை அனுபவித்திராதது.  தென்றல் வழி வந்த சுகந்தத்தில் மெல்ல மயங்கியும் நின்றேன். 

"குழந்தாய்.."

சத்தம் கேட்டு கண்கள் விரித்துப்பார்தேன். அங்கே கடவுள் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் ஆச்சரியம்.. 

"எல்லாவற்றையும் விட்டுவிட நினைக்கிறாயா?" - மெல்ல கேட்ட கடவுளை நோக்கி "விடாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?" கொஞ்சம் கோபமாய் கேட்டேன்

"இங்கே சுற்றிப்பார், என்ன எல்லாம் இருக்கிறது.? "

"நிறைய மூங்கில் மரங்களும், நிறைய கொடிகளும் இருக்கின்றன. அதனால் என்ன?"

"இவைகள் இங்கே வந்த கதையை சொல்கிறேன் கேள்" என்றார் மெல்லிய சிரிப்புடன்

"ஒரே நேரத்தில் தான் இந்த கொடிகளுக்கும், மூங்கில் மரங்களுக்கும் விதைகளை தூவினேன்.  தேவையான நீரும் ஒளியும் வழங்கினேன். ஆனால் இந்த கொடிகள் வேகமாய் விதையை பிளந்து மண்ணையும் பிளந்து கொண்டு வந்துவிட்டன. ஆனால் இந்த மூங்கில் விதைகளில் இருந்து எதுவும் வரவில்லை, ஆனாலும் நான் தொடர்ந்து நீரும் ஒளியும் வழங்கிக்கொண்டு தான் இருந்தேன். "  மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்

"ஒரு ஆண்டு கழிந்தும் அப்படியே தான் இருந்தது. ஒரு மாற்றமும் இல்லை. இப்படியே இரண்டாவது ஆண்டும் ஓடியது. மூன்று, நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஐந்தாவது ஆண்டு மண்ணை பிளந்து கொண்டு சிறு செடி வெளியே தலை நீட்டி பார்த்தது. ஆனாலும் அது இந்த கொடியோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாகவே இருந்தது. ஆனால் அதன் பின் 6 மாதங்களில் இந்த மூங்கிலின் உயரம் 100 அடியையும் தாண்டி வளர்ந்துவிட்டது. 5 வருஷம் அது தன் வேரை பலப்படுத்திக்க
எடுத்துக்கிச்சு, தேவையான அளவு பலம் வந்ததுக்கப்பறம் அது மேலே வளர்ந்துச்சு" தொடர்ந்து

"குழந்தாய் இன்னும் கேள், நான் யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத  துயரங்களை எப்போதும் கொடுப்பதில்லை. உனக்கு  சோதனை வருகிறது என்றால் உன் வேர்கள் பலப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று எடுத்துக்கொள் உனக்கான காலம் வரும் அப்போது நீயும் இந்த மூங்கில் போல உயர்வடைவாய்" சொல்லிவிட்டு என் முகம் பார்த்தார்.

"எவ்வளவு உயரத்திற்கு நான் போவேன்?"  எனக்குள் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்

"இந்த மூங்கில் மரம் எவ்வளவு பெரிதாய் வளரும்?" திருப்பிக்கேட்டார் கடவுள்

"அதால எவ்வளவு பெருசா வளரமுடியுமோ அவ்வளவு பெருசா.."

"அது உனக்கும் பொருந்தும்" சொல்லிவிட்டு சிரித்தார்

திடீரென முகத்தில் மழை பெய்வதை போலுணர்ந்தேன்..

கண் விழித்த பார்த்த போது,  தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த என் குழந்தை பெய்த மழை..

கிஞ்சித்தும் இருள் இல்லாமல் பொலபொலவென விடிந்து இருந்தது பொழுது என் மனதிலும் இரவில் இருந்த இருள் இப்போது இல்லை.இன்றைய லொள்ளு

என்ன பண்ணுறாங்கன்னு யாராவது சொல்லுங்கப்பா..செவ்வாய், நவம்பர் 29, 2011

வாய்ப்புகள் என்னும் வைரங்களை தேடி

ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு, விவசாயம் நல்லா நடந்ததால அவரு சந்தோஷமா இருந்தாரு. தேவையான வருமானம் சந்தோஷமான வாழ்க்கை வேற என்ன வேணும் ஒரு ஆளுக்கு. ஆனாலும் விதி விடுமா அவருக்கும் வந்துச்சு ஒரு நாள் சாமியார் வேசத்தில, வந்த சாமியாரு அந்த விவசாயி கிட்ட வைரத்த பத்தி பேசுனாரு. ஒரு கட்டை விரல் அளவு வைரம் இருந்தா இந்த ஊரை வாங்கிடலாம்,

நடுவிரல் அளவு வைரம் கிடைச்சா இந்த நாடே உன்னோடது, சொல்லிட்டு போயிட்டாரு அந்த சாமியாரு. அதுவரை சந்தோஷமா இருந்த விவசாயி மனசுல அடிக்க ஆரம்பிச்சது புயல்.  நிம்மதியா தூங்கி எந்திருச்ச மனுஷன், இப்ப குழப்பத்தோட படுக்கைக்கு போறாரு.

மறுநாள் காலையில ஒரு முடிவுக்கு வந்துட்டாரு, வைரங்களை தேடி எப்பிடியாவது கண்டுபிடிச்சிரணும்ன்னு. இருந்த நிலத்தை எல்லாம் வித்துட்டு கிளம்பினாரு ஊரை விட்டு, உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் கண்டுபிடிச்சிரணும்ன்னு ஒரு வைராக்கியம் மனசுல.

ஒவ்வொரு ஊரா சுத்துனாரு அந்த ஆளு, எங்கேயும் அகப்படலை வைரம். கையில இருந்த காசு தீர்ந்தப்ப அவரு மனசுல இருந்த ஆசை எல்லாம் வடிஞ்சு வெறும் விரக்தி மிச்சம் ஆச்சு இனி சாகுறத தவிர வேற வழியில்லைன்னு முடிவுக்கு வந்து தற்கொலை பண்ணிக்கிட்டாரு.

இன்னொரு பக்கம் அவர் கிட்ட நிலத்தை வாங்குனவரு ஒரு நாள் வயல்ல வேலை செய்யுறப்ப ஏதோ ஒரு பொருள் வெயில் பட்டு ஜொலிச்சிக்கிட்டு இருக்கிறதை பார்த்தாரு. அவருக்கும் தெரியலை அது என்னானு, எதுக்கும் இருக்கட்டும்ன்னு எடுத்து வேட்டியில முடிஞ்சுகிட்டாரு. சாயந்தரம் வீட்டுக்கு வந்தவரு அதை வாசல் கதவுல கட்டி தொங்க விட்டு இருந்தாரு.

அந்த வழியா வந்த சாமியார், வைரத்தை தேடி போனவன் வைரத்தோட வந்துட்டான்னு நெனைச்சு வெளியே இருந்து கூப்பிட்டாரு, வெளியே வந்த புது ஆளு,  அவர் இன்னும் வரலை உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்துட்டாருன்னு கேட்டாரு. இல்லை இங்கே வைரம் தொங்கிக்கிட்டு அதான் வந்துட்டாரோன்னு நினைச்சேன் அப்பிடின்னாரு. அது வைரம் இல்லை சாமி வெறும் கல்லு, சொன்ன புது ஆளுகிட்ட, எனக்கு தெரியும் இது வைரம் தான் அடிச்சு சொன்னாரு சாமியாரு. இது மாதிரி இன்னும் நிறையா அந்த வயல்ல கிடக்கு வந்து பாருங்கன்னு சொன்னாரு புதுஆளு. கொஞ்சம் எடுத்துட்டு போயி வைர  வியாபாரிகிட்ட காட்டுனாங்க, அவரும் சோதிச்சு பார்த்துட்டு அது எல்லாம் வைரம் தான்னு உறுதியா சொன்னாரு. அந்த வயல் பூராவுமே இப்படி வைரங்கள் அங்கே அங்கே நிறையா புதைஞ்சு இருந்துச்சு.

கதை சொல்லும் கதை
1. வாய்ப்புகள் எப்போதும் நம்முடைய கால்களுக்கு அடியில் தான் கிடக்கிறது அதை கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது

2. அக்கரை எப்போதும் பச்சையாய் தான் இருக்கும்

3. வாய்ப்புகளை கண்டுணர முடியாதவர்களுக்கு, வாய்ப்புகள் கதவை தட்டுவது கூட வெறும் சத்தமாய் தான் தெரியும்

4. ஒரே வாய்ப்பு இன்னொரு முறை வாய்ப்பது இல்லை கண்டுகொள்ள வில்லை என்றால் அதுவும் கடந்து போகும், வேறு ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்கலாம் ஆனால் அது நாம் இழந்த வாய்ப்பிற்கு சமமாகுமா தெரியாது.

இன்றைய லொள்ளு

சொன்ன பேச்சை எவன் கேக்குறா இங்கே


திங்கள், நவம்பர் 28, 2011

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு - ஒரு பார்வை

மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது சரி என்று சிலரும் தவறு என்று என்று சிலரும் பேசிக்கொள்வது என்னை குழப்பியதின் விளைவே இந்த தேடல்.

முதலில் அரசு தரப்பில் என்ன காரணங்கள் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் 

பொருட்களை எடுத்துச்செல்வதில் இருக்கும் முதலீட்டு பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது உலகிலேயே பழங்கள் மற்றும் காய்கறியின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் நாம் இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் உற்பத்தி செய்வது ஆண்டுதோறும் 200 மில்லியன் மெட்ரிக் டன், ஆனால் நம்மிடம் இருப்பது 5836 கோல்ட் ஸ்டோரேஜ் எனப்படும் குளிர் பதன நிலையங்கள் இவற்றின் மூலம் 23.6 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்களை மட்டுமே கையாள முடியும், அவற்றிலும் 80% உருளைகிழங்கு பதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது (உபயம் சிப்ஸ் கம்பெனிகள் போல)  

நம்மால் பதப்படுத்த முடியாத காரணத்தினால் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 1 டிரில்லியன் ரூபாய்கள், இது மொத்த  உற்பத்தியில் 57 சதவீதம். இன்னும் சில புள்ளி விவரங்கள் நாம் உற்பத்தி செய்யும் பழங்களில் 35-40% வீணாவதாகவும்!!(?), தானிய வகைகளில் 10% வீணாவதாகவும் சொல்கின்றன.  குளிர் பதன துறையில் மட்டும் முதலீட்டை அனுமதிப்பது பயன் அளிக்காது, ரீடைல் அவுட்லெட்களும் அதிகரிப்பதன் மூலம் வீணாகும் பொருள்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும் அப்பிடின்னு சொல்றாங்க.

அது மட்டும் இல்லாம இடைதரகர்களின் தலையீடும் குறையும் பலன் விலை நேரே விவசாயிகளுக்கு கிடைக்கும், அது மட்டும் இல்லாம அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். சுமாரா 5 வருசத்தில 1 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும. 

கபினேட்ல என்ன முடிவு வச்சு இருக்காங்கன்னா
1.    51% நேரடி முதலீடு செய்ய அனுமதிப்பது, குறைத்த பட்சம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்ப்பது
2.    50% உள்கட்டமைப்புக்கு ஒதுக்குவது இதன் மூலம் திறன் வாய்ந்த பதன கிடங்குகளை அமைக்க முடியும்.
3.  30% பொருட்கள் குடிசை/சிறு தொழில் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களை கொள்முதல் செய்து சந்தைபடுத்துதல். 
4.    விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
5.  10 லட்சத்திற்கு அதிகம் மக்கள் வசிக்கும் ஊர்களில் மட்டும் கடைகளை திறப்பது
6.    விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முதல் உரிமை அரசிடம் தான் இருக்கும்
7.    எந்த பொருட்கள் கொள்முதல் செய்தாலும் அதே பெயரில் தான் உலகம் முழுவதும் விற்கப்பட வேண்டும்

மேலும் விவரங்களுக்கு


சரி இப்ப எதிர்தரப்புல பரவலா சொல்லப்படுற விஷயங்களை பார்ப்போம் 

1. தினமணி தலையங்கம்

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

 மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

 2. ஜெயலலிதா :  சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.

3. கருணாநிதி கண்டனம்:  நாட்டில் சில்ல‌ைர வியாபாரத்தில் அன்னிய முதலீடு வந்தால் நாட்டின் பொருளாதாரம் சீரழியும். பலர் தங்களுடைய தொழிலை இழக்கும் அபாயம் ஏற்படுவதுடன் பொருளாதாரத்தில் சுனாமி என்ற பேரழிவு ஏற்படும். இதனை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.

4. மத்திய அரசின் முடிவை ஆதரித்தால், சிறு மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆதரவை எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சியினர் பெற்று விடுவர் என அஞ்சுவதால், கேரள காங்கிரசார், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

5. மாயாவதி: சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

ஒரு சாமானியனாக எனக்குள் ஓடிய ஒரு விஷயம் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரும் போது போட்டியின் காரணமாய் பொருட்களின் விலைகள் குறையும் என்பது நிதர்சனம்.

நிறைய தேடியும் இன்னும் சரியா புரியலை இது சரியா தப்பான்னு , யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..