புதன், ஜூன் 29, 2011

ஹா ஹா ஹா

அம்மா சிங்கம்     : குட்டி என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?
குட்டி சிங்கம்       : ஒரு மனுசன புடிக்க மரத்த சுத்தி ஓடிக்கிட்டு இருக்கேன்
அம்மா சிங்கம்    : எத்தனை வாட்டி சொல்லீருக்கேன், சாப்பிடும் போது விளையாடக்கூடாதுன்னு 

கடைக்காரர்     : உங்களுக்கு பாக்கெட் கால்குலேட்டர் வேணுமா ஸார்
இவர்                   : இல்லை என்கிட்ட எத்தனை பாக்கெட் இருக்குனு எனக்கு தெரியும்

ஆசிரியர்        : ராஜு, பூனை குடும்பத்தை சேர்ந்த நான்கு விலங்குகளின் பெயர்களை சொல்லு?? 
ராஜு            : அப்பா பூனை,அம்மா பூனை அப்புறம் ரெண்டு குட்டி பூனைகள்

நர்ஸ்            : இப்ப கொஞ்சம் ஈசியா இரும வருதே
பேசண்ட்         : ஆமா நைட் எல்லாம் பிராக்டிஸ் பண்ணினேன்

பேசண்ட்         : டாக்டர் எனக்கு தூக்கமே     வரமாட்டேங்குது, ஏதாவது  செய்யுறீங்களா?
டாக்டர்            :  நான் வேணா தாலாட்டு பாடவா?

டாக்டர்            : நான் ஒண்ணும் செய்யமுடியாதுங்க, இது பரம்பரை வியாதி
பேசண்ட்        : அப்ப பில்லை எங்க அப்பாகிட்டே வாங்கிக்குங்க
டாக்டர்            : எங்க அவரு
பேசண்ட்        :அவரு செத்துப்போயிட்டாரு

பேசண்ட்        : பாருங்க டாக்டர், இப்ப மணி காலையில மணி 2:30 இன்னும் எனக்கு தூக்கம் வரலே
டாக்டர்            :அதுக்கு ஏன்யா எனக்கு ஃபோன் பண்ணே, இனி எனக்கு தூக்கம் வராது.

பேசண்ட்        : டாக்டர் நான் எதை பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது
டாக்டர்            : அப்ப ஒரு கண்ணை மூடிக்குங்க

என்ன எல்லோரும் சிரிச்சாச்சா இப்ப கொஞ்சம் தத்துவம் பேசுவோமா

காலம் எல்லா காயத்தையும் ஆற்றும் என்று சொல்பவர்கள் கூட காயம்பட்டவுடன் காத்து இருப்பது இல்லை

செவ்வாய், ஜூன் 28, 2011

எதற்காகவும் காத்திருக்காதீர்கள்

ஒருநாள் சாத்தான் கூட்டத்தை கூட்டினார், விஷயம் என்னான்னா இந்த பூமியை எப்பிடி சீக்கிரம் அழிக்கலாம் அப்பிடின்னு. எல்லா பேரும் யோசிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரம் அமைதி

"நான் போயி பூமியை அழிச்சுட்டு வரேன்" ஒரு குரல் கூட்டத்தில கேட்டது

"எப்பிடின்னு சொல்லு" - தலைமை சாத்தான் கேட்டுச்சு

"அண்ணன் தம்பிக்கு நடுவுல பகையை ஏற்படுத்துறேன், அப்புறம் மனுசனுக்கு மனுஷன் அடிச்சுக்கிட்டு சீக்கிரம் இந்த பூமி அழிஞ்சுடும்"

"அது சரியா வரும்னு தோணலை வேற ஏதாவது சொல்லு" - தலைமை சாத்தான் சொல்லுச்சு

இன்னொரு சாத்தான் ஏந்துருச்சு
"நான் மனுஷ மனசுக்குள அன்பு இல்லாம பண்ணிடுறேன் அப்புறம் அவங்க சீக்கிரம் அழிஞ்சுடுவாங்க"

இப்பவும் தலைமை சாத்தானுக்கு திருப்தி இல்லை "வேற" அப்பிடின்னுச்சு

இன்னொரு குட்டி சாத்தான் எந்திருச்சு "நான் மனுஷ மனசுல பேராசையை உருவாக்கிடுறேன், அந்த ஆசையே அவங்க அழிச்சுடும்"

"நான் வேணா மனுசங்களுக்கு பொறாமையை, அகங்காரம், கர்வம் எல்லாத்தாயும் ஏற்படுத்துறேன், அப்புறமென்ன அவங்களே அழிச்சுக்கிடுவாங்க"

"வேற உருப்படியா ஏதாவது சொல்லுங்க" - தலைமை சாத்தான் சொன்னது

கடைசியா ஒரு வயசான சாத்தான் எழுந்து
"நான் மனுசங்க கிட்ட கடவுளை பத்தி சொல்றேன், அவர் எவ்வளவு நல்லவர், அவருடைய திட்டங்கள் எல்லாம் எவ்வளவு அருமையானதுன்னு எடுத்து சொல்றேன். கடவுள் மனுஷன் கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்ன்னு சொல்றேன்.  நேர்மை, நீதி,  ஒழுக்கம் மற்றும் வீரம் பத்தி எடுத்து சொல்றேன், அவங்களை அதே மாதிரி செய்யவும் வற்புறுத்துறேன்."

இதை கேட்ட தலைமை சாத்தானுக்கு ஒரே எரிச்சல், இருந்தாலும் அந்த வயசான சாத்தான்  தொடர்ந்து பேசுச்சு
"என்ன தான் எல்லாம் நல்லா இருந்தாலும் ஒண்ணும் அவசரம் இல்லை, இதை எல்லாம் நாளைக்கு செய்யலாம்ன்னு சேர்த்து சொல்லுவேன், எல்லா சூழ்நிலைகளும் சாதகமா வர்ற வரை காத்து இருங்கன்னு சொல்லுவேன். "   

இதை கேட்ட தலைமை சாத்தான்,  "நீங்க தான் சரியான ஆள் உடனே பூமிக்கு புறப்படுங்க"  அப்பிடினு சொல்லுச்சு

நீதி
செய்ய வேண்டியதை நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும், எல்லாம் சரியாய் இருக்கும் போது செய்ய வேண்டும் என்று காத்து இருந்தால் எதையும் செய்ய முடியாது 

வெள்ளி, ஜூன் 24, 2011

பெரியவங்க சொல்லீட்டு போனது

 1. எதிரியை எளிதாக எடை போடாதீர்கள், முள் சிரியதாய் இருந்தாலும் காலில் குத்தி விட்டால், முழுமையாய் நீக்கும் வரை  உங்களால் நடக்க இயலாது 
 2. கர்மவினை கருணை இல்லாதது,  யோகியாய் இருந்தாலும் மனித உருவில் இருக்கும் வரை கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும்.
 3. மரணம் ஒரு ஒட்டகம் போலே ஒவ்வொருவர் கூடாரத்தின் முன்னும் மண்டியிட்டு காத்துக்கொண்டு இருக்கிறது
 4. பாம்பை பிடிக்க உன் எதிரியின் கையை பயன்படுத்து
 5. சகோதரர் போலே வாழ்ந்தாலும், தொழில் செய்யும் போது அந்நியர் போலே செய்யுங்கள்
 6. எளிதாய் கிடைக்கும் எல்லாம் இழிவாகவே மதிக்கப்படும்
 7. ரோஜா வேண்டும் என்று ஆசைப்படுபவன் முள்ளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
 8. பகலில் வந்தடைய வேண்டும் என்றால் இரவிலேயே புறப்படவேண்டும்
 9. நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் பாவங்களுக்கு பரிகாரம் இல்லை
 10. எல்லா இலையுதிர் காலத்திற்கும் ஒரு வசந்தகாலம் உண்டு, எல்லா பாதைகளுக்கும் ஒரு முடிவு உண்டு
 11. கேள்வி கேட்கப்படும் வரை பதில் சொல்லாதீர்கள்
 12. பெரிய மனிதர்கள் எப்போதும் குழந்தை இதயம் கொண்டு இருப்பர்
 13. ஊரின் கதவுகளை எளிதாக அடைக்கலாம் ஆனால் ஒருவரின் வாயை அடைப்பது கடினம்
 14. கண்ணில் இருந்து மறைபவர் இதயத்தில் இருந்தும் மறைக்கப்படுகிறார்
 15. புத்திசாலி பிறர் அனுபவங்களில் இருந்து ஞானம் பெறுகிறார்
 16. பறவைகளே மரங்களை தேர்ந்து எடுக்கின்றன, மரங்கள் பறவைகளை  தேர்ந்துஎடுப்பதில்லை
 17. வளையாத வில்லில் இருந்து அம்பை எய்ய முடியாது
 18. தெரியாத ஒருவருக்கு கற்றுக்கொடுப்பது எளிது, கற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவனுக்கு பிரம்மனாலும் கற்றுக்கொடுக்க இயலாது
 19. உங்களுக்கு என்ன தெரியும் தெரியாது என்று அறிந்து இருத்தலே ஞானம்
 20. எப்பிடி பார்த்தாலும் ஒருவரின் இறந்தகாலம் எப்போதும் எதிர்காலத்தை விட சிறந்ததாகவே இருக்கும்.

செவ்வாய், ஜூன் 21, 2011

எங்கே மகிழ்ச்சி

சுப்பு ஒரு கல்லூரி பேராசிரியர், மனைவியை இழந்தவர். வேலையில் இருந்து  ஓய்வு பெற்றதும் தனியாக வாழ்ந்து வருகிறார்
பழைய மாணவர்கள் எல்லாம் தங்களுடைய ஆசிரியர் சுப்புவை பார்க்க அவர் வீட்டிற்கு வந்து இருந்தனர்.

அவர்கள் எல்லோரும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள், நல்ல வேலை, நல்ல அந்தஸ்த்து.  அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது பேச்சு அவர்களின் வேலை மற்றும் பிரச்சனைகளின் பக்கம் திரும்பியது.

அவர்களின் பேச்சின் ஊடே அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பது சுப்புவுக்கு புரிந்தது, அவர்கள் செயல்களாலேயே அவர்களுக்கு சில விஷயங்களை புரிய வைக்க சுப்பு விரும்பினார்.

"நீங்க பேசிக்கிட்டு இருங்க நான் உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வர்றேன்" சுப்பு  சமையல்கட்டுக்குள் சென்றார். 

ஒரு ஜாடி நிறைய காஃபியும், கொஞ்சம் கோப்பைகளையும்  எடுத்து வந்தார்.  கோப்பைகளில் சில உயர் ரகமாகவும், சில கொஞ்சம்   சுமாராயும், சில நெளிந்தும் இருந்தது

"எல்லோரும் காஃபி எடுத்துக்குங்க .." சுப்பு சொன்னார்

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையை எடுத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான காஃபியை ஊற்றிக்கொண்டனர்

இப்போது சுப்பு பேச ஆரம்பித்தார்

"உங்க கையில இருக்குற கோப்பையை எல்லாம் கொஞ்சம் கவனிங்க, எல்லாம் விலை உயர்ந்த அழகான கோப்பையை எடுத்துக்கிட்டு இருக்கீங்க, சுமாரான கோப்பையெல்லாம் கீழே இருக்கு, இது தான் ஒரு சாதாரண நிகழ்வுன்னாலும் இதுதான் உங்க பிரச்சனைகளுக்கு எல்லாம் மூலகாரணம். "

பசங்களுக்கு கொஞ்சம் குழப்பமா பார்த்தாங்க சுப்பு தொடர்ந்தார்

"நீங்க காஃபிய தான் குடிக்கபோறீங்க கோப்பையை அல்ல,  இந்த கோப்பைகள் காஃபிக்கு புது ருசிய குடுக்கபோறது இல்ல, இது அந்த காஃபியை வச்சுக்கப்போறது மட்டும் தான். ஆனாலும் எல்லோரும் நல்லா அழகா இருந்த கோப்பையை மட்டும் எடுத்துகிட்டீங்க அதுமட்டும் இல்லாம அடுத்தவங்க கோப்பையையும் கவனிச்சீங்க ஏன்னா வேற யாரும் உங்களுடையதை விட நல்லா இருக்கோன்னு உங்களுக்கு சந்தேகம் சரியா?" ன்னு கேட்டார்  

"வாழ்க்கை கூட இந்த காஃபி மாதிரி தான் உங்க வேலை,அந்தஸ்த்து எல்லாம் அந்த வாழ்க்கையை தாங்கி பிடிக்க மட்டும் தான். சில நேரங்களில் கோப்பை மேல கவனம் வச்சு காஃபியோட ருசியை மறந்துடுறோம்.    அது மாதிரி மற்றவர்களின் வேலை, அந்தஸ்தை ஒப்பிட்டு  நம்முடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியை மறந்துடுறோம். என்ன புரிஞ்சதா?" சுப்பு கேட்டார்

ஏதோ புரிந்தது போல எல்லோரும் தலை அசைத்தனர்


நீதி
மகிழ்ச்சியானவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்று இருப்பது இல்லை, பெற்றதை எல்லாம் சிறந்ததாக மாற்றிக்கொள்பவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் 

திங்கள், ஜூன் 20, 2011

பிறருக்கு பயன் இல்லாததை பேசாதீர்கள்

ஒரு நாள் சுப்புவை கடைத்தெருவில் பார்த்த குப்பு,
"உங்க நண்பரை பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உங்களுக்கு தெரியுமா?"  - கேட்டார்

"அவரை பத்தி சொல்றதுக்கு முன்னாடி, அந்த விஷயம் உண்மைன்னு உங்களுக்கு தெரியுமா?"  சுப்பு கேட்டார்

"இல்லை, என் காதுல விழுந்துச்சு அதான் உங்க கிட்ட சொல்லாம்ன்னு..." இழுத்தார் குப்பு

சுப்பு கேட்டார்  "அப்ப அது உண்மையான்னு உங்களுக்கு நிச்சயமா தெரியாது அப்பிடித்தானே" 

"ஆமா" - இது குப்பு

"சரி நீங்க கேள்விப்பட்டது நல்ல விஷயமா?" சுப்பு கேட்டார்

"இல்லை, அது நல்ல விஷயம் இல்லை" குப்பு சொன்னார்

"அப்ப அவரைபத்தி ஒரு தப்பான விஷயம் என் கிட்ட சொல்ல வந்து இருக்கீங்க, ஆனா அது உண்மையான்னு தெரியாது அப்பிடித்தானே?"   சுப்பு கேட்டார்

"ஆமா" இது குப்பு

"சரி இதால எனக்கு ஏதாவது பயன் இருக்கா?"  சுப்பு கேட்டார்

"சரியா தெரியல" குப்பு சொன்னார்

"அப்ப நீங்க சொல்ல வந்தது ஒரு உண்மைன்னு தெரியாத, தப்பான விஷயம் அதுவுமில்லாம எனக்கு எதுவும் பயன் தராத விஷயத்தை என்கிட்ட எதுக்கு சொல்ல வந்தீங்க?" ன்னு சுப்பு கேட்டார். 


நீதி:

பிறருக்கு பயன் இல்லாததை பேசாதீர்கள், அவர்கள் நேரம் மட்டும் அல்ல உங்கள் நேரம் கூட விரயமாகலாம்.

சனி, ஜூன் 18, 2011

சிலர் எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பர்

சுப்பு ஒரு  பெரிய பறவை வேட்டைக்காரர். சுப்புவிடம் ஒரு பறக்கும் நாய் கெடைச்சது, அந்த நாய் தண்ணி மேலயும் நடக்குற சக்தி இருந்தது.

அந்த நாயை எல்லா நண்பர்களுக்கும் காட்டணும்ன்னு சுப்புக்கு ஆசை, அவரும் எல்லா நண்பர்களுக்கும் விஷயத்தை சொல்லி தினமும் பறவை வேட்டைக்கு போற குளத்துக்கு வரச்சொன்னார்.

வேட்டை ஆரம்பிச்சது, சுப்பு சுட்ட வாத்தை எல்லாம் நாய் தண்ணி மேல நடந்து போயி எடுத்துட்டு வந்தது. இதை பர்த்த எல்லோருக்கும் ஆச்சரியம் அன்னைக்கு பூரா வேட்டை ஆடிட்டு எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க

சுப்புவும், குப்புவும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு இருந்தாங்க.

"இந்த நாய்கிட்ட ஏதாவது வித்தியாசம் இருந்துச்சா?"   சுப்பு கேட்டார்

"ஆமா .. "  குப்பு சொன்னார்

"என்ன கவனிச்ச?"  இது சுப்பு

"உன் நாய்க்கு தண்ணியில நீச்சல் அடிக்க தெரியல" ன்னு சுப்பு சொன்னார் 

நீதி
எவ்வளவு நல்லது இருந்தாலும் சிலர் எதிர்மறையாவே யோசிப்பாங்க, அதனால உங்களைப்பத்தி எல்லாத்தையும் எப்பயும் வெளியே சொல்லாதீர்கள், சில நேரம் உங்கள் மனம் நோகும் படி சிலர் நடந்து விடலாம்.  

வியாழன், ஜூன் 16, 2011

உறவுகள் சிறக்க மந்திர வார்த்தைகள்

வாழ்க்கையில் உறவுமுறைகளை வலுப்படுத்த சில விஷயங்கள் உங்களால் செய்ய முடிந்தது, இந்த வார்தைகளை நீங்கள் அடிக்கடி உபயோகப்படுத்துங்கள் போதும். இதன் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பர், உங்கள் நண்பர்களின் உறவுமுறையும் சிறக்கும்

நான் உங்களுக்கு உதவுகிறேன்
நல்ல நண்பர்கள் எப்போதும் தேவைகளை அறிந்தே இருப்பவர்கள்,  உங்களுக்கு தேவை என்னும் போது நீங்கள் கேட்காமலே தாங்களாகவே வந்து செய்து கொடுப்பவர்கள்.  நீங்களும் எப்போதும் நண்பர்களுக்கு உதவுங்கள், அவர்கள் கேட்காமலே

நான் உங்களை புரிந்துகொள்ளுகிறேன்
ஒருவர் மற்றவரிடம் நெருக்கமாக பழக வேண்டுமானால் அது மற்றவரின் புரிதலில் மற்றும் அவரது ஒத்துழைப்பை பொறுத்தே அமையும், எனவே நீங்கள் அனுமதித்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களிடம் நெருங்கி பழக முடியும். அது போலே நீங்கள் மற்றவர்களை புரிந்து கொண்டீர்கள் என்பதை அவர் அறிய செய்யவேண்டும், இதுவே உறவை வளர்க்க மிக சிறந்த வழி


நான் உங்களை மதிக்கிறேன்
மரியாதை என்பது அன்பை காட்டும் மற்றொரு வழி, மரியாதை என்பது மற்றவரை உங்களுக்கு சமமாக மதிக்கிறீர்கள் என்பதை உணர்த்தும். அது யாராக இருந்தாலும் பிறரை மதித்தால் நீங்களும் எப்போதும் மரியாதைக்குரியவராய் இருப்பீர்கள்.

நான் உங்களை தவறவிடுகிறேன்
இன்று எத்தனை திருமானங்கள் நடக்கிறதோ அத்தனை மண முறிவுகளும் இருக்கவே செய்கிறது. "நான் உங்களை தவறவிடுகிறேன்" என்ற மந்திரவார்தைகள் அடிக்கடி உபயோகப்படுத்துங்கள் மனங்களுக்கு இடையே ஏற்படும் விரிசல்களுக்கு இது ஃபெவிகால் போன்றது இந்த வார்தைகள் உங்கள் துணையிடம் ஏற்படுத்தும் மாற்றங்கள்.


நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்
விவாதங்கள் நடைபெறும் போது இந்த வார்த்தைகள் உங்கள் எதிரில் பேசிக்கொண்டு இருப்பவரை நீங்கள் பேசுவதை கேட்க மற்றும் யோசிக்கவும் வைக்கும். பொதுவாக விவாதங்களின் போது இரண்டு பேரும் அடுத்தவருடைய நிலையை யோசிப்பதும் இல்லை, உங்களின் நிலையிலும் இருந்து இறங்கி வருவதும் இல்லை, இந்த சூழ்நிலை உறவில் மிக பெரிய விரிசலை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அது போன்ற சமயங்களில் நீங்கள் சொல்லும் "நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்" என்ற வார்தைகள் உங்கள் உறவை காப்பாற்றுவதுடன், எதிரில் பேசிக்கொண்டிருப்பவரையும் இறங்கி வரச்செய்யும்


என்னை மன்னித்துவிடுங்கள்
அறுந்து போன உறவுகளை சீர் செய்யும் வழி மன்னிப்பு, தவறுகள் நீங்கள் செய்து இருந்தால் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களிடம் மன்னிப்புகோரும் போது உடனடியாக மன்னிக்கவும் தயங்காதீர்கள்.

உங்களுக்கு நன்றி
யார் எந்த உதவி செய்தாலும் நன்றி கூறுங்கள் அது யாராக இருந்த்தாலும் நன்றி கூற மறக்காதீர்கள்

நான் இருக்கிறேன்
நடு இரவில் உங்கள் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும், அல்லது நீங்கள் அவசரமாக சென்று கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் வாகனம் நடு வழியில் நின்று விட்டது, உங்கள் நண்பரை தொலைபேசியில் உதவிக்கு அழைக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு தெரியும் இந்த வார்தையின் அருமை. இன்னொருவருக்கு நீங்கள் கொடுக்கும் சிறந்த பரிசு இதுவாக மட்டுமே இருக்கும்.


நல்லா செய்யுங்க
நாம் எல்லோரும் தனித்துவம் பெற்றவர்கள் என்பதை மறக்காதீர்கள், உங்கள் நண்பர்களுக்கு அவர்கள் வழியிலேயே செல்ல ஆதரவும், ஊக்கமும் அளியுங்கள், அவராக கேட்கும் வரை உங்கள் எண்ணங்களையும், அறிவுரைகளையும் அவர்களின் மீது திணிக்க வேண்டாம்.

நான் உங்களை விரும்புகிறேன்

கடைசியாக இந்த அதிசக்தி மிக்க வார்த்தைகள், வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல், உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகளாக இருக்கட்டும். இது கேட்பவரின் மனதில் இருக்கும் தேவைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் எல்லோரும் இந்த வார்த்தைகளை கேட்கவே விரும்புகிறார்கள். அன்பு ஒரு உணர்ச்சி மட்டுமல்ல அது ஒரு அனுபவம், உணர்ச்சிகள் இல்லாத போதும் அன்பு செலுத்துங்கள்

அர்த்தமில்லா இலக்குகள்

ஒரு விவசாயி ஒரு நாய் வளர்த்தாரு, அது  வாசல்ல படுத்துக்கிட்டு போற வர வண்டிய வெரட்டிக்கிட்டே போகும், அப்புறம் திரும்பி வந்து படுத்துக்கும்.  இத பார்த்த அந்த விவசாயியோட நண்பர்,

"உங்க நாய், எல்லா வண்டியையும் விரட்டிக்கிட்டே இருக்கே ஏதாவது வண்டிய பிடிச்சுடும்ன்னு நினைக்கிறீங்களா?" அப்பிடின்னு கேட்டாரு
அதுக்கு விவசாயி
"வண்டிய பிடிக்கிறது இருக்கட்டும், ஆனா வண்டிய பிடிச்சதுக்கு அப்புறமா அதுக்கு என்ன பிரயோஜனம்ன்னு யோசிக்கிறேன்" அப்பிடின்னாரு

அந்த நாய் மாதிரியே நிறைய பேரு தேவையில்லாததற்க்கு சக்தியை வீணாக்கிக்கொண்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்,  இலக்குகளை சரியா திட்டமிட்டால் வெற்றி நிச்சயம்.

புதன், ஜூன் 15, 2011

வாழ்க்கை ...

"ஆ ஆஆ ஆஆஆ"  கத்தினான் மலையில் ஏறிக்கொண்டு இருந்த 10 வயது சிறுவன் ரமேஷ், கால் வழியில் இருந்த பாறையில் இடித்ததில் லேசாக வடிந்து கொண்டு இருந்தது. மலையின் முகட்டில் இருந்து  "ஆ ஆஆ ஆஆஆ"  யென வந்த சத்தம் அவனுக்கு வியப்பையும் பயத்தையும் கொடுத்தது.

"யார் நீ?" ரமேஷ் கேட்டான்

"யார் நீ?"  திரும்பவும் அவனுக்கே கேட்டது

கோபத்தில் "நீ ஒரு கோழை" ரமேஷ் கத்தினான்

"நீ ஒரு கோழை" திரும்பவும் கேட்டது

இதை கவனித்த சுப்பு, ரமேஷின் தந்தை கேட்டார்  "ரமேஷ் என்ன ஆச்சு?" 

ரமேஷும் நடந்ததை சொன்னான், அதை கேட்ட சுப்பு சிரித்துக்கொண்டே "இப்ப கவனி" என்று சொல்லிவிட்டு மலை பக்கம் திரும்பி 

"உன்னை நான் வணங்குகிறேன்" சுப்பு சொன்னார்

"உன்னை நான் வணங்குகிறேன்" மலை திருப்பி சொன்னது

"நீ ஒரு வித்தகன்" சுப்பு சொன்னார்

"நீ ஒரு வித்தகன்"  திருப்பி கேட்டது

ரமேஷுக்கோ ஒரே ஆச்சரியம் ஆனா அவனுக்கு புரியல

சுப்பு விளக்க ஆரம்பிச்சார்

"இதுக்கு பேரு எதிரொலி, நாம பேசுறது அந்த மலையில பட்டு திரும்ப நமக்கே கேட்கும்.    இது மாதிரி தான் நம்ம வாழ்க்கையும், நம்முடைய செயல்களின் எதிரொலி. உன் மேல் எல்லோரும் அன்பாய் இருக்கணும்ன்னா நீ எல்லோர் மேலயும் அன்பாய் இரு. நீ எல்லோரையும் பாராட்டுனா எல்லோரும் உன்னை பாராட்டுவாங்க."

நீதி  :
வாழ்க்கை நீ என்ன கொடுத்தாயோ அதை அது திருப்பி கொடுக்கும்.

செவ்வாய், ஜூன் 14, 2011

இது தாண்டா இந்தியா

1)    லோக்பால் மசோதாவை பலவீனப்படுத்த முயற்சி: அமைச்சர்கள் மீது அன்னா ஹசாரே புகார் 

இப்பிடி சின்ன பிள்ளை மாதிரி புகார் பண்ண கூடாது. அவங்க என்ன அவங்களாவா செய்யுறாங்க, எல்லாம் சொல்லி குடுக்குறாங்க இவங்க பேசுறாங்க. இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருந்தா, உங்க பேரனுக்கு பேரன் வந்தாலும லோக்பால் வராது. 

2)     கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: ராம்தேவ்

அது சரி இதையாவது தொடர்ந்து செய்வீங்களா? இல்ல இது கூட உங்க உண்ணாவிரதம் மாதிரி பாதியில முடிச்சுடுவீங்களா? 


3)    கடந்த 12 ஆண்டாக பென்ஷன் பெற, கலெக்டர் அலுவலகத்துக்கு நடந்து வருகிறேன். கடைசி காலத்தில் அரசு கொடுக்கும் பணத்தை         வாங்கி சாப்பிட விரும்பவில்லை. சுதந்திர போராட்ட தியாகி என்பதை பதிவு செய்வே, இத்தனை ஆண்டாக நடையாய் நடக்கிறேன்.

    தியாகி பட்டதையும் தியாகம் பண்ண சொல்றாங்களோ? இல்ல உங்களுக்கு குடுக்குற பணத்தில ஒரு வருஷம் இந்தியாக்கே பட்ஜெட் போடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கங்களோ என்னவோ?  

4)     270 பக்க 2ஜி ஊழல் அறிக்கை சபாநாயகர் மீரா குமார் நிராகரித்தார்.
   
    அவங்க ரொம்ப பிசி 270 பக்கம் படிக்க முடியாது, சுருக்கமா சுருக்குன்னு 10 வரியில் குடுங்க 

5)     சிண்டு முடியும் பத்திரிகைகள்: கருணாநிதி 
   
    இது என்ன மானம் கெட்ட பொழப்பு, இனிமே யாராவது புதுசா சிண்டு முடிஞ்சு விடணுமா? ஏற்கனவே உள்குத்து இருக்கிறனால தானே உங்க பொண்ணு உள்ள இருக்கு. கொஞ்ச நாள் வாய மூடிக்கிட்டு இருந்தா வெளிய விட்டுடுவாங்க  

6)     கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் - பிரணாப் நம்பிக்கை 

    என்ன நடவடிக்கைன்னு கொஞ்சம் சொன்ன தேவலை?, இதுவரைக்கும் எடுத்த நடவடிக்கை!!?? தான் பாபா வரை வந்து நிக்குது, இன்னும் இப்பிடி பேசிக்கிட்டு இருந்தா நானும் வர வேண்டி இருக்கும்   

7)     பிரம்மபுத்ரா நதி நீர் மடை மாற்றம் செய்யப்படுவது குறித்து, சீனாவிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, வெளியுறவுத் துறை         அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

    விளக்கம் கேட்டு கிட்டே இருங்க, ஒரு நாளு மொத்தமா தண்ணியே வராம போகப்போகுது.   அது சரி காவேரிய மறந்துட்டீங்களே


8)    இந்தாண்டு அரிசி உற்பத்தி 10 கோடி டன்னை தாண்டும்,'' என, விவசாயத் துறை செயலர் தெரிவித்துள்ளார்

    அதனால எல்லோருக்கும் இலவச அரிசி குடுக்கப்போறீங்களா, இல்ல அரிசி விலை கிலோ 10  ஆயிடுமா?    எப்பிடியும் குடௌன்ல அடுக்கி வச்சி எலி திங்க போகுது.

9)    பன்மு‌‌க கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ 7ஆயிரம் கோடி செலவில் கங்கை நதியை தூய்மைபடுத்த உலக வங்கியுடன் ஒப்பந்தம்

    இதுல எத்தனை கோடி நீங்க கங்கையை சுத்தம் பண்ண எடுத்துக்குவீங்க?

   
10)    கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
   
    இன்னும் எத்தனை வருஷம் தள்ளி போடுவீங்க பாஸு சீக்கிரம் சொல்லுங்க. 

திங்கள், ஜூன் 13, 2011

இதுவும் கடந்து போகும்

"இந்த உலகில் எல்லா சமயத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலையிலும் பொருந்தக்கூடிய மந்திரம் அல்லது கருத்து ஏதாவது உண்டா? இது எல்லா சந்தோஷ தருணங்களிலும், துக்க தருணங்களிலும், எல்லா வெற்றி மற்றும் தோல்வி தருணங்களிலும் பொதுவாக இருக்க வேண்டும்" அவையோரை பார்த்துக்கேட்டான் பாண்டியன்.

அவையில் இருந்த மந்திரிகளும், புத்திசாலிகளும் பதில் தேட ஆரம்பித்தனர், அவர்களால் முடியவில்லை. முடிவில் அந்த நாட்டில் வாழ்ந்து வரும் ஞானியிடம் கேட்பது என்று முடிவெடுத்து அவரிடம் சென்றனர். துறவியும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

அதன்படி அந்த கேள்விக்கான விடையை ஒரு ஓலையில் எழுதி மோதிரத்திற்குள் வைத்து "உங்கள் கேள்விக்கான விடை இந்த மோதிரத்திற்குள் இருக்கிறது, இதை இப்போது பார்க்காதீர்கள் உங்களுக்கு எப்போது சமாளிக்க முடியாயத நிலை வருகிறதோ அப்போது இந்த ஓலையை எடுத்து படிக்க வேண்டும்" என்று சொன்னார் துறவி. அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டு, மோதிரத்தை கையில் அணிந்து கொண்டான்.

சில நாட்களில் எதிரிகள் படை எடுத்து வந்தனர், பாண்டியனும் தன் படைகளை கொண்டு எதிரிகளை எதிர் கொண்டார், இறுதியில் பாண்டியன் தோற்க நேர்ந்தது, உயிருக்கு அஞ்சி ஒரு பாழடைந்த குகைக்குள் ஒளிய வேண்டியது இருந்தது.
அப்போது பாண்டியனுக்கு மோதிரத்தின் நினைவு வந்தது, உள்ளே என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாய் மோதிரத்தை திறந்து ஓலையை படித்தார்.

"இதுவும் கடந்து போகும்" - உள்ளே எழுதி இருந்தது.

பாண்டியனின் மனதில் ஒரு ஒளி, நினைத்து பார்த்தான் "நேற்று வரை நான் ஒரு பேரரசன், இன்றோ நான் ஒரு கீழ் நிலையில் இருக்கிறேன்", மனதில் புது நம்பிக்கையுடன் மீண்டும் படை திரட்டி எதிரிகளை வெற்றி கொண்டான். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஊரே விழாக்கோலம் பூண்டது, மன்னரை வாழ்த்தி பாடிக்கொண்டு இருந்தனர், மன்னரும் மகிழ்ச்சியில் பூரித்துக்கொண்டு இருந்தார். திடீரென்று மோதிரத்தில் சூரிய ஒளி பட்டு அவரது முகத்தில் பட்டது. மீண்டும் அந்த ஓலையை எடுத்து படித்தார்.

"இதுவும் கடந்து போகும்" - பாண்டியனின் மனம் அமைதியில் உறைந்தது

வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து விட்டான் என்பதை அவன் முகம் காட்டியது

நீதி :

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் இருபக்கங்கள், வரும் போகும் எதுவும் நிலையில்லை. நிலையாமை மட்டுமே இந்த உலகின் நியதி. மாற்றம் தவிர மற்றெல்லாம் மாறும், நாம் வெறும் சாட்சிகள் மட்டுமே, எனவே மாற்றங்களை உணருங்கள், புரிந்துகொள்ளுங்கள் இருக்கும் நிமிடங்களை மகிழ்ச்சியாக கழியுங்கள் ஏனெனில் இதுவும் கடந்து போகும்.


வெள்ளி, ஜூன் 10, 2011

அந்த ஐந்து நிமிடம்

"ரமேஷ் போதும் வா வீட்டுக்கு போகலாம்" பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த தன் மகனை அழைத்தார் சுப்பு

"இன்னொரு அஞ்சு நிமிஷம் டாடி" சொல்லிவிட்டு ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருந்தான்

சிறிது நேரம் கழித்து திரும்பவும் "ரமேஷ் போகலாமா" கேட்டார் சுப்பு

"இன்னொரு அஞ்சு நிமிஷம் டாடி" ரமேஷ் ஊஞ்சலை விட்டு இறங்கவில்லை

இப்படியே இன்னும் சிலமுறை சுப்பு அழைக்க, ரமேஷ் அதே பதிலை தந்து கொண்டு இருந்தானே ஒழிய ஊஞ்சலை விட்டு வரவில்லை

பக்கத்தில் இதை பார்த்துக்கொண்டு இருந்த குப்பு, "எப்பிடி ஒரு அப்பா நீங்க, இவ்வளவு பொறுமையா இருக்கீங்க? நானா இருந்தா இந்நேரம் பயல அடிச்சி இழுத்துட்டு போயி இருப்பேன்" ன்னு சொன்னார்

சுப்பு "அப்பிடியில்லே இதுவரைக்கும் நான் வேலை வேலைன்னு என் பசங்கள கவனிக்காம விட்டுட்டேன், பெரிய பையன் கொஞ்ச நாளைக்கு முன்னால விபத்தில இறந்துட்டான் அவன் கூட அஞ்சு நிமிஷம் கூட நான் இருக்கலை, அதே தப்ப இவன் கிட்ட பண்ண கூடாதுன்னு அப்பவே முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்லாம இந்த அஞ்சு நிமிஷம் அவன் விளையாடுறதுக்கு குடுக்கலை, அவன் விளையாடுறதை பாக்குறதுக்கு நான் எடுத்துக்கிட்டேன்"

புதன், ஜூன் 08, 2011

அவளுடைய நான்

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் எனக்கான தேடலை..

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் எனக்கான கண்ணீரை..

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் நான் இல்லாத தனிமையை...

முன்னெப்போதும் உணரவில்லை
அவளின் அன்பின் ஆழத்தை....

முன்னெப்போதும் உணரவில்லை
அவள் மனதில் எனக்கான இடத்தை...

இப்போதும் உணர உணர்வில்லை
அவள் இழப்பின் கண்ணீரை...

உதறித்தள்ளு மேலே வா

ஒரு விவசாயி ஒரு கோவேறு கழுதை வளத்துகிட்டு வந்தாரு, ஒரு நாளு அந்த கழுதை வீட்டுக்கு பின்னாடி இருந்த பாழடைந்த கிணறுக்குள்ள விழுந்துடுச்சு. விவசாயி பார்த்தாரு, உள்ள இருக்க கழுதைய வெளியே எடுக்க முடியல, கிணறும் ஆழமா இருந்தனால எதுவும் பண்ண முடியல.

அது ஒரு பாழும் கிணறு, அது எதுக்கும் ஆகாது அதனால கழுதயோட சேர்த்து கிணறை மூடிரலாம்ன்னு முடிவு பண்ணி பக்கத்துல இருந்த மண் வெட்டிய எடுத்து மண்ணை தோண்டி உள்ள போட ஆரம்பிச்சாரு.

கழுதைக்கோ வாழணும்ன்னு ஆசை, ஆனா முதலாளி மண்ணை போட்டு மூடுராறேன்னு வருத்தப்பட ஆரம்பிச்சது, கொஞ்ச நேரம் ஆச்சு கழுதை காலை மண் முடிடுச்சு, இன்னும் சும்மா இருந்தா மண்ணுக்குள போக வேண்டியதுதான்னு ஏதவாவது செய்யணும்ன்னு நெனைச்சுக்கிச்சு.

மேல இருந்த மண்ணை உதறி தள்ளுச்சு அப்பறம் காலை மேல தூக்கி வச்சுச்சி. கழுதையால மண்ணு மேல ஏறி நிக்க முடிஞ்சது. இனி இதையே செய்யலாம்ன்னு முடிவு பண்ணுச்சு. மேல விழுற மண்ணை உதறி தள்ளி கொஞ்சம் கொஞ்சமா மேல வர ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்தில, மண்ணு கிணறு மேல வரை மண்ணு நிரஞ்சுடுச்சு, கழுதையும் வெளியே வந்துடுச்சு.

நீதி

வாழ்க்கையும் இப்படித்தான் சில நேரம் பிரச்சனை என்னும் மண்ணை நாம் மேல் போடலாம், வலி இருந்தாலும் எல்லாமே கொஞ்ச நேரம் தான், நாம் அதை கண்டு அஞ்சாமல் பிரச்சனைகளை உதறி தள்ளி விட்டு மேலே வர வேண்டும்.

செவ்வாய், ஜூன் 07, 2011

எங்கே கடவுள்

ஒரு ஊருல அண்ணன், தம்பி ரெண்டு பேரு இருந்தாங்க ரெண்டும் சரியான வாலுங்க, அக்கம் பக்கத்துல ஏதாவது காணாம போனா அதுல இவங்க பங்கு இல்லாம இருக்காது, அதனால அவங்க அப்பா அம்மாக்கு ஒரே தலைவலி.

அந்த ஊருல ஒரு சாமியார் இருந்தாரு, அவரு இந்த மாதிரி வாலு பசங்கள எல்லாம்  திருத்துராறுன்னு அவங்கம்மா அவரை போயி பார்த்தா ஏதாவது செய்வார்ன்னு அவர் கிட்ட போனாங்க.

அவரும் எல்லாத்தையும் கேட்டுட்டு மொதோ உங்க ரெண்டாவது பையனை அனுப்புங்க அப்பிடின்னு சொன்னார். அந்தம்மா பையனை கூப்பிட்டு கிட்டு  ஆசிரமத்துக்கு போனாங்க.

"பையனை உள்ள விட்டுட்டு நீங்க வீட்டுக்கு போங்க" அப்பிடின்னு சாமியார் சொன்னாரு. அந்த ரூம்-ல கொஞ்ச நேரம் அமைதி, சாமியாரும் ஒண்ணும் பேசலை, பையனும் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருந்தான். கொஞ்ச நேரம் கழிச்சி

"கடவுள் எங்கே?"ன்னு  சாமியார்  கேட்டார்

பையன் பதில் எதுவும் சொல்லல, சுத்தி பார்த்தான்

சாமியார் திருப்பி கேட்டார் "கடவுள் எங்கே?"ன்னு

இப்பயும் பையன் கிட்ட இருந்து பதில் இல்ல

மூணாவது தடவை கொஞ்சம் மிரட்டலா கேட்டார் "கடவுள் எங்கே?"ன்னு

பையன் எடுத்தான் ஓட்டம், நேரா வீட்டுக்கு போயி தான் நின்னான், அதுவும் அவங்க ஒளியிற இடம், அண்ணன் கேட்டான் "என்னடா ஆச்சு?" ன்னு

"நாம பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கோம்டா" தம்பி சொன்னான்

"ஒண்ணும் புரியல புரியிற சொல்லு" அண்ணன் கேட்டான்

தம்பி சொன்னான் "இல்ல கடவுளை காணோமாம், அதையும் நாம தான் எடுத்தோம்னு எல்லோரும் சந்தேகப்படுறாங்க"

நீதி
தவறான கோணத்தில் பார்க்கப்படும் பிரச்சனைகளுக்கு, தவறான தீர்வே கிடைக்கும் 

திங்கள், ஜூன் 06, 2011

காந்தி தேசமே

இன்னைக்கு நானும் ஒரு அரசியல் பதிவு எழுதணும்ன்னு ஒரு வெறியோட ஆஃபிஸ்க்கு வந்தேன் (நான் பதிவு போடுறது எல்லாம் அங்க இருந்து தான் ஹி ஹி ஹி) , வந்து என் டாஷ் போர்டை பார்த்தா நெறைய நண்பர்கள் ஏற்கனவே நிறைய பதிவுகளை போட்டு இண்ட்லி, தமிழ்மணம் எல்லாத்தையும் நிரப்பிட்டாங்க, எல்லாம் கடந்த இரண்டு நாளா நாட்டுல நடந்து கிட்டு இருக்க குழப்பங்கள்தான். 

ஆனா ஒவ்வொருத்தரும் அவங்க வசதிக்கு தகுந்த மாதிரி பதிவு போட்டு இருந்தது தான் எனக்கு ஒரே குழப்பம்,

ஒருத்தரு கருப்பு பணத்தை இந்தியாக்கு கொண்டு வர ஏரோப்ளேன் அனுப்ப சொல்லுறார்,

இன்னொருத்தர் காசு செல்லாதுன்னு சொல்லுங்க எல்லாம் இனி எலெக்ட்ரோனிக் டிரான்ஸ்பர் மட்டும் தான் அப்ப தான் ஊழலை ஒழிக்க முடியும்ன்னு சொல்லுறாரு


இன்னொருத்தரோ இது எல்லாம் புதுசா, இந்தியால இது இப்பதான் ஆரம்பிச்சு இருக்கா அப்பிடின்னு கேக்குறாரு

ஒரே ஒரு நண்பர் மட்டும் வயித்துல பாலை வார்த்து இருந்தாரு, அதுவும் இந்தியாவோட ஜாதகத்தை!!?? கணிச்சு 

ஆனா என் கேள்வி ஒண்ணே ஒண்ணு தான், ஏன் இந்தியால எந்த ஒரு நல்ல விசயத்தையும் சரியா செய்ய முடியுறதில்லை?
யாராவது செய்ய முன் வந்தாலும் அவரு மட்டும் யோக்கியனா அப்பிடின்னு அவங்க மேல சேத்த வாரி வீசுறது.

பாபா இல்ல ஹசாரே யாரா வேணா இருக்கட்டும்,  அவங்க மேலயும் தப்பும் இருக்கலாம் ஆனா அதை எல்லாம் சரி பண்ணனும்ன்னு  முன்னாடி வரப்போ நாட்டு மேல அக்கறை இருக்குறவங்க (அட உங்களாதாங்க சொன்னேன்) பின்னாடி நின்னாதானே எதையாவது செய்ய முடியும்.  அவங்க தப்பு செஞ்சு இருந்தாலும் அந்த சட்டமே அவங்களை தண்டிக்கும் இல்லையா?

எல்லாருக்கும் இந்த நாடு அமெரிக்கா மாதிரி வல்லரசு ஆகணும்ன்னு நினைப்பு இருக்கு, எதுக்கு சொகுசா வாழணும், எல்லோரும் நிறைய சம்பாதிக்கணும, சந்தோஷமா இருக்கணும்னு தானே, ஆனா உண்மையில என்ன நடக்குது பழைய படத்துல வர ஜமீன்தார் மாதிரி சிலர் மட்டும் பணம் சம்பாதிக்க, இன்னும் சிலரோ ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை.  

செலவு செய்ய முடியாத அளவு பணம் சம்பாதிச்சாலும் இன்னும் சம்பாதிக்க சட்டத்தை வளைக்க துடிக்கிற கூட்டம், யார் என்ன செய்ய முடியும்னு நிணக்கிற தைரியம் எங்கே இருந்து வந்தது, நாம எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்தது தானே?   காசு குடுத்தா இந்தியால எது வேணா செயலாங்குற நிலைமை எப்பிடி வந்தது? நாம என்னைக்காவது யோசிச்சு பார்த்து இருப்போமா?

நமக்கு சாப்பிட சாப்பாடு இருக்கா, எவன் எக்கேடு கெட்டு போன நமக்கென்ன அப்பிடின்னு நாம சும்மா இருந்தது தானே? நம்ம எங்க இருந்து சட்டத்தை காப்பி பேஸ்ட் பண்ணுனோமோ அங்கே கூட இவ்வளவு தப்பு நடக்குறது இல்லையே ஏன்? அங்கே மக்கள் எப்பிடி இருந்தாலும் தலைமை சரியா இருக்கணும்னு நினைக்கிறாங்க,

ஆனா இங்க நிலைமை என்ன குறைஞ்சது 2 கேஸ் இருந்ததானே கவுன்சிலர் ஆக முடியுது, அப்ப எப்பிடி அவங்க நாட்டுக்கு நல்லது பண்ணுவாங்க, அப்பிடியே பண்ணுவாங்கன்னு நம்புனா நம்மள மாதிரி முட்டாள்கள் எந்த நாட்டிலயும் இருக்கமாட்டாங்க.   இங்க நாட்டை சுரண்ட கோடி பேர் இருக்காங்க, ஆனா காப்பாத்த ஆள் இல்லை, அப்ப்டிடியே யாராவது வந்தாலும் நீ மட்டும் ஏன்னா        

ஜனநாயகம், இந்த ஒரு  வார்த்தயை வச்சுக்கிட்டு அவன் அவன் பண்ற சேட்டை தாங்க முடியல,
"எகிப்தில் அல்லது துனீசியாவில் நடந்தது போல் இந்தியாவில் நடக்காதுன்னு" பிரதமர் சொன்னதோட அர்த்தம் இப்ப எல்லோருக்கும் புரிஞ்சு இருக்கும். ஒரு பத்தாயிரம் பேர் கூடுனதே அவங்களுக்கு பிடிக்கலயே, ஒரே நாள்ல வேலய காமிச்சுட்டாங்க.

ஏன்யா இப்பிடி பண்றீங்கன்னு கேட்டா "அவரு  உயிருக்கு ஆபத்து"ன்னு சலிக்காம பொய் சொல்லுது கவர்மெண்ட,  உயிருக்கு ஆபத்துன்னா பாதுகாப்பு குடுக்க வேண்டியது மட்டும் தானே அரசோடா பொறுப்பு, அவரு டெல்லியிலேயே இருக்க கூடாதுன்னு வெளியே அனுப்புனது எப்பிடிபட்ட மொள்ளமாரித்தனம.  இன்னும் கொஞ்ச நாள்ல அந்த கூட்டதில (ஹசாரே அண்ட் கோ) இருக்கிற எல்லாத்தையும் தீவிரவாதிகள் லிஸ்ட்ல செத்துருவாங்க போல இருக்கு. 

நாம என்ன பண்ணப்போறோம் வழக்கம் போல விரல் சூப்பிக்கிட்டே வேடிக்கை பார்க்கபோறோம், ஏன்னா ..........................
நீங்களே மிச்சத்தை உங்களுக்கு பிடிச்ச மாதிரி நிரப்பிக்குங்க..

நம்முடைய பிரார்த்தனைகளின் பலன்கள், நாம் பிரார்த்திப்பதால் மட்டும் இல்லை

ஒரு நாளு குப்புவும், சுப்புவும் படகுல போயிக்கிட்டு இருந்தாங்களா? அப்ப பெரிய சூழல்ல மாட்டிக்கிட்டாங்க, படகு உடைஞ்சு ரெண்டு பேரும் கடல்ல விழுந்துதிட்டாங்க. கண்ணு முழிச்சு பார்க்கும் போது, ஏதோ ஒரு தீவுல மயக்கமா கிடந்தாங்க.  மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா அந்த தீவுல இவங்கள தவிர வேற யாரும் இல்லை.

"சரி இனி எப்பிடி நம்ம ஊருக்கு போறதுன்னு யோசிப்போம்" அப்டின்னாரு சுப்பு

"இந்த போங்கு விளையாட்டுக்கு நான் வரல, நீ தனியா போ, நான் தனியா போறேன்"   அப்பிடின்னாரு குப்பு

சுப்புவுக்கு ஒரே வருத்தம் இருந்தாலும் "சரி நான் அந்த பக்கம் போயிடுறேன்" அப்பிடின்னு சொல்லிட்டு போயிட்டாரு.

ரெண்டு பேருக்கும் ஒரே பசி, இப்ப சாப்பிட ஏதாவது கிடைச்சா நல்லா இருக்கும் அப்பிடின்னு நெனைச்சாங்கலாம், நினைச்ச நேரத்தில அங்க இருந்த மரத்தில காய்கள் எல்லாம் பழமா மாறிடுச்சாம்.

ஒரு வாரம் கழிச்சு, குப்புவுக்கு ஒரே அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, சும்மா சாப்பிட்டு தூங்கி எந்திரிக்கிறது. இங்க ஒரு பொண்ணு மட்டும் இருந்தா நல்லா இருக்குமே அப்பிடினு நெனைச்சார், அன்னைக்கு நைட் இன்னொரு படகு அதே மாதிரி உடைஞ்சி, குப்பு இருந்தா கரை பக்கம் ஒதுங்குச்சு, அதுல ஒரு அழகான பொண்ணு குப்பு எதிர் பார்த்த மாதிரி. அவருக்கு ஆச்சரியமா இருந்தாலும், அந்த பொண்ணை காப்பாத்தி கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு.

இப்ப ஒரு வீடு இங்க இருந்தா குடும்பம் நடத்த வசதியாய் இருக்குமே அப்பிடின்னு நெனைச்சார், மேஜிக் மாதிரி  காலையில அவங்க இருந்த எடத்துல ஒரு வீடு வந்துருச்சு. ஆனா சுப்புக்கு இன்னும் ஒண்ணும் கிடைக்கலை, சாப்பாட தவிர

கொஞ்ச நாள் போச்சு, குப்புவுக்கு இனி இங்க இருக்க முடியாதுன்னு தோணுச்சு, "ஒரு கப்பலோ இல்ல படகோ இங்க வந்து நம்மள காப்பாத்த வராதா?"  ன்னு நெனைச்சார், அவரு நெனைச்ச மாதிரியே ஒரு படகு அந்த தீவ நோக்கி வந்தது.

குப்புவும் அவரு பொண்டாடிய கூட்டிக்கிட்டு  படகுல ஏற போனப்ப, ஒரு குரல்
"என்னப்பா குப்பு உன் நண்பன் சுப்புவ விட்டுட்டு நீ மட்டும் போக போறியா? "     அது அந்த தீவு தேவதை இதுவரை அவங்க வேண்டியத நிறைவேத்தி வச்சதும் அதுதான்

"அவன் ஒரு ராசியில்லாத பய இது எல்லாம் நான் நெனைச்சதால வந்தது, இது என் அதிர்ஷ்டம், அதுல அவனுக்கு பங்கு குடுக்கணும்ன்னு அவசியமில்லை" அப்பிடின்னாரு குப்பு

"நீங்க தப்பா நெனைச்சுகிட்டு இருக்கீங்க,  இது எல்லாம் சுப்புவோட அதிர்ஷ்டம் என்ன புரியலையா அவரு தான் நீங்க என்ன    நெனைச்சாலும் நடக்கணும்ன்னு வேண்டிக்கிட்டாரு"

நீதி

நம்முடைய பிரார்த்தனைகளின் பலன்கள், நாம் பிரார்த்திப்பதால் மட்டும் இல்லை

கடவுளை சரணடையுங்கள்

ஒரு நாள் சுப்பு முடி வெட்ட சலூனுக்கு போனாரு, அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சா,    அவரு முறை வர்ற வரை கத்துகிட்டு இருந்தாரு,

அவரு முறை வந்ததும் சேர்-ல போயி உட்கார்ந்தார், அவருக்கு முடி வெட்ட வந்தவரு ஒரு ஓட்டை வாய், ஏதாவது பேசாம முடி வெட்ட மாட்டாரு. அதே மாதிரி சுப்பு கிட்ட பேச ஆரம்பிச்சாரு, எது எதுவோ பேசி கடைசி கடவுளை பத்தி பேச ஆரம்பிச்சாரு. ஒரே திட்டு கடவுள் இல்லவே இல்லைன்ற மாதிரி பேசிக்கிட்டே இருந்தாரு.

சுப்புவும் ஒரு கட்டத்தில பொறுமையை இழந்து, "ஏன்யா இப்பிடி திட்டுற, கடவுள் இல்லைன்னு எப்பிடி சொல்லுற? உனக்கு என்னய்யா தெரியும் கடவுளை பத்தி" அப்பிடின்னாரு,

முடி வெட்டுறவரும் சலிக்கமா, "கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா, நாட்ல இப்பிடி எல்லாம் அநியாயம் நடக்குமா?  ரோட்ல போயி பாருங்க எவ்வளவு பேரு சோறு தண்ணி இல்லாம திரியுறாங்க?, நல்லது செய்யுறவங்க எல்லாம் கஷ்டப்படுறாங்க. கொள்ளை அடிக்கிறவன்,    ஊரை அடிச்சு உலையில போடுறவன் எல்லாம் நல்லா இருக்கான்"  அப்பிடின்னாரு

சுப்புவுக்கும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே, சரி இனி இவன் கிட்ட பேச முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டு, சும்மா இருந்துட்டாரு. முடி வெட்டி முடிச்சவுடனே காசை குடுத்துட்டு வெளியே வந்தாரு.  முடி வெட்டுறவர் சொன்ன மாதிரி நெறைய பேரு அந்த மார்க்கெட்-ல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஆனாலும் அவர் மனசு முடி வெட்டுறவர் சொன்னதை ஒத்துக்க முடியலை

கொஞ்ச தூரம் வந்து இருப்பாரு, உடனே சுப்பு மூளையில பல்ப் எரிஞ்சது, உடனே நேரா சலூனுக்கு வந்தாரு, அந்த முடி வெட்டுறவரை பார்த்து இங்க முடி வெட்டுறவங்களே இல்லை அப்பிடின்னாரு.

சுப்புவை ஒரு மாதிரி பார்த்த முடி வெட்டுறவர், "யோவ் இப்ப தானே உனக்கு முடி வெட்டி விட்டேன், உனக்கு ஏதாவது ஆயிடுச்சா? நான் தான் இருக்கேனே" அப்பிடின்னாரு

"இல்லை"  கத்துனார் சுப்பு, "முடி வெட்டுறவங்க இருந்தா ஊர்ல ஏன்யா ஜடா முடியோட நிறைய பேரு சுத்திக்கிட்டு இருக்காங்க, வெளியில போயி பாரு"    

"அதுக்காக முடி வெட்டுறவங்களே இல்லை சொல்லிடுறாத? அவங்க என்கிட்ட வந்தா வெட்டி விடுறேன்" அப்பிடின்னாரு முடி வெட்டுறவர்.

"அது தான், அதே தான்!! நீ இன்னும் கடவுள் கிட்ட போகலை" அப்பிடின்னாரு சுப்பு 

நீதி
    கடவுளை சரணடையாதவர்களுக்கு மனக்கவலையில் இருந்து விடுதலை கிடைப்பது அரிது 

சனி, ஜூன் 04, 2011

பிரச்சனைகள் மட்டுமல்ல, தீர்வுகளின் மேலும் கவனம் வையுங்கள்

இது ஒரு உண்மை சம்பவம், அமெரிக்கா முதன் முதலில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்னான்னா பேனாவை வச்சு விண்வெளியில எழுதமுடியாதுன்னு கண்டு புடிச்சாங்க. அதுக்கு ஒரு கம்பெனி கிட்ட ஆலோசனை கேட்டாங்க. 

அந்த கம்பெனியும் நிறைய ஆராய்ச்சி பண்ணி, எங்க வேணா எழுதுற மாதிரி பேனாவை கண்டுபிடிச்சாங்க, அந்த பேனா எங்க வேணா எழுதும் எந்த வெப்பநிலையிலும் மை ஒண்ணும் ஆகாது அதுக்கு ஆனா செலவு 1,20,00,000. 

இதே பிரச்சனைக்கு ரஷ்யர்கள் எளிதான வேற ஒரு தீர்வு வச்சு இருந்தாங்க என்ன தெரியுமா? அவங்க பென்சில்-ல எழுதுனாங்க.

வியாழன், ஜூன் 02, 2011

நம்மால் முடியும்

ஒரு நாள் இரண்டு பேரு குப்பு, சுப்பு மீன் புடிக்க போனாங்க, இதுல குப்பு புதுசா மீன் பிடிக்க வந்தவரு, சுப்பு மீன் பிடிக்கிறதுல கெட்டிக்காரரு.  ரெண்டு பெரும் மீன் பிடிச்சுகிட்டு இருந்தாங்களா, சுப்பு பெரிய மீனா பிடிச்சு அவரு பெட்டியில வச்சுக்கிட்டு இருந்தாரு. அப்பதான் கவனிச்சாரு குப்பு பெருசா வர்ற மீன திரும்பவும் தண்ணிக்குள்ள போட்டு கிட்டு இருந்தாரு.  

உடனே சுப்பு "என்னய்யா பண்ற பெரிய மீனெல்லாம் தூக்கி தண்ணிக்குள்ள போட்டு வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கே"  அப்பிடின்னு குப்பு கிட்ட கேட்டாரு.

"என் கிட்ட இந்த மீன வறுக்குற அளவுக்கு பெரிய சட்டி இல்லை" அப்பிடின்னாரு குப்பு

இதை படிக்கும் போது குப்புவை நெனச்சி சிரிச்சிருப்போம், ஏன்னா அவருக்கு தெரியல அவருக்கு வேண்டியது கொஞ்சம் பெரிய சட்டின்னு   

சில நேரங்கள்ல நாம கூட குப்பு மாதிரி பெரிய திட்டங்களை, பெரிய வாய்ப்புகளை, பெரிய கனவுகளை தூக்கி எறியிறோம், ஏன்னா நம்மால செய்ய முடியுமா அப்பிடிங்கற சந்தேகம் அல்லது எப்பிடி செய்யிறதுன்னு தெரியாம இருக்குறதுதான். சில சமயம் நாம அந்த வாய்ப்புகளை குறைந்த பட்ச முயற்சி கூட செய்ய தயங்குறோம்.

நாம சமாளிக்க முடியாத அளவு பிரச்சனை நமக்கு எப்பவும் வராது, அல்லது எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்க நமக்கு சக்தி இருக்கு.

நம்பிக்கையோட எந்த பிரச்சனையும் எதிர் கொண்டால், பாதி பிரச்சனைகள் குறைஞ்சுடும்.

புதன், ஜூன் 01, 2011

இது என்னோட வேலை


இந்த கதை 4 வகையான மக்களைப்பத்தி அவங்க யாருன்னா எல்லோரும்,யாரோ சிலர்,யாராவது, யாருமில்லை  

எந்த ஒரு  முக்கியமான வேலையைப்பத்தியும்  எல்லோரும் பேசுவாங்க,
எல்லோருக்கும் தெரியும் யாரோ சிலரால் மட்டும் செய்ய முடியும்னு, யாரோ ஒருவர் செஞ்சுடுவாங்க, ஆனா யாரும் செய்ய மாட்டாங்க

அந்த யாரோ சிலருக்கு கோவம் வரும் ஏன்னா இது எல்லோருக்குமான வேலை, எல்லோரும் என்ன நினைப்பாங்கன்னா யாராவது ஒருத்தர் செஞ்சுடுவாங்கன்னு
ஆனா யாரும் யோசிக்க மாட்டாங்க எல்லோராலயும் செய்ய முடியாதுன்னு.

இது எப்படி முடியுன்னா எல்லோரும் யாரோ சிலரை திட்டுவாங்க எப்பன்னா யாரும் யாரையும் கேள்வி கேக்காதப்ப??

நீதி:

ஏதாவது வேலையை உங்களுக்கு குடுத்தா நீங்க யாருக்காகவும் அல்லது எதுக்காகவும் காத்துகிட்டு இருக்காம செஞ்சு முடிச்சுடுங்க.

டிஸ்கி :

சரியா புரியலேன்னா திருப்பி மொதோ இருந்து படிங்க

இத படிக்கும் போது ஊழலை பத்தி ஞாபகம் வந்தா கங்க்ரட்ஸ் நீங்க ஒரு பெர்பெக்ட் இந்தியன்