வெள்ளி, ஏப்ரல் 29, 2011

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு மட்டும்

இப்ப வலைப்பூ உலகத்திலே காப்பி பேஸ்டால ஒரே குடுமி பிடி சண்டையா இருக்கு. காப்பி பேஸ்ட் பண்றது அவ்வளவு ஈசி-யா பண்ணா முடியாது. வெப்சைட் யுனிகோட் ஃபார்மட்-ல இருந்தா மட்டும் இது ஈசி.  

இப்ப எல்லாம் நிறைய வெப்சைட்-ல TSCII ஃபார்மட்ல இருக்க பாண்ட் யூஸ் பண்றாங்க இல்ல பாமினி, வானவில் மாதிரி நிறைய பாண்ட யூஸ் பண்றாங்க, இதுல என்ன பிரச்சனைன்னா இந்த பாண்ட் உங்க சிஸ்டம்-ல இல்லாட்டி வெப்சைட் சரியா (எதுவுமே) தெரியாது. அதை காப்பி பேஸ்ட் பண்றதும் கொஞ்சம் சிரமம்.

அந்த மாதிரி நேரத்தில உங்களுக்கு உபயோகப்படுறது தான் NHM Convereter என்கிற இந்த மென்பொருள். 
இதுல உங்களுக்கு வேண்டிய text -ஐ காப்பி பண்ணா அதுவே என்ன ஃபார்மட்ல இருக்குன்னு கண்டுபிடுச்சுரும் அப்புறம் நீங்க யுனிகோட் பார்மட்டுக்கு கன்வெர்ட் பண்ணி உங்க பிளாக்ல போட்டுக்காலம்.

லிங்க் இங்கே http://software.nhm.in/

இவங்க ரைட்டர் சாஃப்ட்வேர் கூட குடுக்குறாங்க, அதை பயன்படுத்தி தமிழ்ல நீங்க ஈசி-யா டைப் பண்ணிக்கலாம். எந்த ஃபார்மட் உங்களுக்கு பிடிக்குதோ அதையும் செலக்ட் பண்ணிக்கலாம்.


பேராசை..

ஒரு ஊரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.

ஒரு நாள்—

வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான்.

வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக் கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.

கிணற்றுக்குள் இருந்து "யார் இங்கே தண்ணீர் எடுப்பது?' என்ற பயங்கரமான குரல் கேட்டது.

அஞ்சி நடுங்கிய அவன் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. நடுங்கும் குரலில், "ஐயா! நான் ஒரு ஏழை. தண்ணீர் குடிப்பதற்காக இங்கு வந்தேன். நீங்கள் யார்?'' என்று கேட்டான்.

"விரும்பியதை எல்லாம் கொடுக்கும் மந்திரக் கிணறு இது. இதைப் பாதுகாக்கும் பூதம் நான். யார் கண்ணுக்கும் நான் தெரியமாட்டேன்,'' என்றது அந்தக் குரல்.

"மந்திரக்கிணறா! விரும்பியதை எல்லாம் தருமா?'' என்று வியப்புடன் கேட்டான் அவன்.

"உன்னிடம் பொற்காசுகள் உள்ளதா? ஒரு பொற்காசை இந்தக் கிணற்றுக்குள் போடு உன் விருப்பம் எதுவானாலும் கேள். உடனே அது நிறைவேறும். நன்றாக நினைவு வைத்துக் கொள். இரண்டு முறைதான் இந்தக் கிணறு உன் எண்ணத்தை நிறைவேற்றும்,'' என்றது அந்தக் குரல்.

"என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற எண்ணத்தில் ஒரு பொற்காசை கிணற்றுக்குள் போட்டான். "விலை உயர்ந்த நகைகளாலும் பொற்காசுகளாலும் என் வண்டி நிரம்ப வேண்டும்...'' என்றான் அவன்.

ஒரு நொடிக்குள் அவன் வண்டி பொற்காசுகளாலும் நகைகளாலும் நிரம்பி இருந்தது. இதைப் பார்த்து வியப்படைந்தான் அவன்.

"ஆ! ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. இந்த நாட்டிலேயே பெருஞ்செல்வன் நான் தான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே வண்டியில் அமர்ந்தான்.

"ஐயோ! காட்டு வழியாகச் செல்ல வேண்டுமே! வழியில் திருடர்கள் இருப்பார்களே... அவர்கள் இந்த நகைகளையும் பொற்காசுகளையும் கைப்பற்றிக் கொள்வார்களே! என்ன செய்வது?' என்று சிந்தித்தான்.

நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது. கிணற்றருகே வந்த அவன் தன்னிடம் இருந்த இரண்டாவது பொற்காசையும் அதற்குள் போட்டான்.

"உனக்கு என்ன வேண்டும்?'' என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

"வண்டியில் இருக்கும் நகைகளும் பொற்காசுகளும் என் கண்களுக்கு மட்டும் தெரிய வேண்டும். பிறர் கண்களுக்குத் தெரியக் கூடாது,'' என்று கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்,'' என்று குரல் வந்தது.

வண்டியை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான். எதிரில் திருடர்கள் சிலர் வந்தனர். அவர்கள் கண்களுக்கு வண்டியில் இருந்த நகைகளும் பொற்காசுகளும் தெரியவில்லை. தன் அறிவுக் கூர்மையை மெச்சிக் கொண்டான் பேராசைக்காரன். மகிழ்ச்சியுடன் தன் வீட்டை அடைந்தான்.

வீட்டுக்குள் ஓடினான். "இனி நாமோ நம் பரம்பரையோ வறுமையில் வாட வேண்டாம். அரசனைப் போலச் செல்வச் செழிப்புடன் வாழலாம். வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் என்னென்ன கொண்டு வந்துள்ளேன் பார்!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

வண்டி காலியாக இருப்பதைப் பார்த்து அவன் மனைவி திகைத்தாள். "என்னங்க! வண்டியில் விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். எந்தப் பொருளும் இல்லையே,'' என்றாள்.

அவன் கண்களுக்கு வண்டியில் ஏராளமான பொற்காசுகளும் நகைகளும் இருப்பது தெரிந்தது. மனைவியைப் பார்த்து, "வண்டியை நன்றாகப் பார்,'' என்றான்.

நன்றாகப் பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன் என்றாள்.

அப்பொழுதுதான் அவனுக்குத் தான் கேட்ட இரண்டாம் வரம் எவ்வளவு தவறானது என்று புரிந்தது. தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். கிடைத்த விலை மதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்த முடியாத நிலையை எண்ணி வருத்தம் அடைந்த அவன் வண்டியை ஓட்டிக் கொண்டு மீண்டும் காட்டிற்குச் சென்றான்.

அந்த இடத்தில் மந்திரக் கிணறும் இல்லை; ஒன்றும் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல் வண்டியை எட்டி உதைத்தான். அதிலிருந்து நகைகளும், பொருட்களும் கீழே கொட்டிச் சிதறின.

என்ன பிரயோஜனம். அவை இவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தன. தன்னுடைய பேராசை குணத்திற்கு கிடைத்த பரிசு என நினைத்து மிகவும் வருந்தினான் பார்த்தசாரதி.
 

வியாழன், ஏப்ரல் 28, 2011

நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.
முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

எப்பிடி இருந்த கட்சி இப்பிடி ஆயிடுச்சே ...........


முஸ்கி: இது சற்று நீளமான பதிவு, சற்று பொறுமையாய் படிக்கவும்.  கொஞ்சம் கமெண்ட்-ம் போட்டா நல்லது  


1973-இல் தி.மு.கழகத்தின் ஆளுகையிலிருந்த சென்னை மாநகராட்சி மீது ஊழல் புகார் வந்தபோது தனது கட்சி என்று கருதாமல் மாநகராட்சியை கலைத்து கட்சியைவிட களங்கமற்ற ஆட்சிக்கே முதலிடம் அளித்தார்.

இதை இப்போது இருக்கும் சூழலில் இதை திருப்பி செய்ய கலைஞர் துணிவாரா? 

இன்னும் சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரப்போகும் சூழ்நிலையில், அவர் கட்சி உறுப்பினர்களும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சிறை செல்லும் நிலையில் தேர்தலில் அவர் கட்சி வெற்றி பெற்றாலும், ஆட்சி பொறுப்புக்கு வரமாட்டேன் என்று அறிவிக்க தயாரா?




தாங்கள் ஊழல் செய்யவில்லை என்பதை நிரூபித்து விட்டே ஆட்சி பொறுப்புக்கு வருவேன் அதுவரை எங்கள் கூட்டணியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கட்சி ஆட்சி நடத்தும்  என்று சொல்வாரா?

கொஞ்சம் தமிழக வரலாற்றை திருப்பிப்பார்த்தால் தமிழக மக்களின் வாழ்க்கைக்கு கட்சி செய்த தியாகங்களும்,  லட்சோப லட்ச தொண்டர்களின் உழைப்பையும் உணர முடியும்.

தென்னக மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும், சர்.பி. தியாகராயர், டாக்டர். நடேசன், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் 1916-இல் தொடங்கிய தென் இந்திய நல உரிமைச்சங்கம், திராவிட இயக்கத்தின் கருவாகும்.

இச்சங்கம் `ஜஸ்டிஸ் (நீதி)’ என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்தியதால், நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாரின் சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாக்க நீதிக்கட்சி `திராவிடா, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு’ என்ற கொள்கையுடன் போராடியது.1920, 1923, 1929 ஆண்டுகளில் பதவி வகித்திருந்த நீதிக்கட்சியின் ஆட்சியில் கீழ்க்கண்ட வரலாற்றுச் சாதனைகள் படைக்கப்பட்டன.

  • நிர்வாகத்திலும், சமுதாய நிலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
  • இந்து அறநிலைய பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
  • பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு கொள்கை அமுலாக்கப்பட்டது.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.  (இதனையே பின்னால் காமராஜர், எம்.ஜி.ஆர். அரசுகள் புதுப்பித்தன)
  • இந்து கோயில்களில் தேவதாசி முறையை ஒழித்தது. 

இச்சீர்திருத்தங்கள் பிராமணர் அல்லாதவர் மத்தியில் சுயமரியாதையும் ஒற்றுமை உணர்வையும், பகுத்தறிவையும் வளர்த்தன.  காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர இந்து சனாதன கோட்பாடுகளிலும் வெறுப்புற்ற தந்தை பெரியார் என பின்னாளில் போற்றப்பட்ட ஈ.வெ.இராமசாமி அவர்கள் 1925-இல் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

இவ்வியக்கம் 1941-இல் திராவிடர் கழகம் என்ற விடுதலை இயக்கமாக மாற்றப்பட்டது. அறிஞர் அண்ணா போன்ற முன்னணி தலைவர்கள் இயக்கத்தின் குறிக்கோள்களை, கொள்கைகளை அழகு தமிழில் நாடெங்கும் பரப்பினர். தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணா மற்றும் முன்னணி தலைவர்களுக்குமிடையே சில கருத்து மாறுபாடுகள் ஏற்பட்டதால், அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949 செப்டம்பர் 17-இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினர். அறிஞர் அண்ணா, அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் கலைஞர் என போற்றப்படும் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள் கொள்கை பரப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழர் எனப் போற்றப்படும். அறிஞர் அண்ணா அவர்கள் மேட்டுக்குடியில் பிறக்கவில்லை. ஆனால் கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் நாவன்மை பெற்றிருந்தார். 

``சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே’’
``என்ன வளம்! என்ன அழகு!’’
 ``மடை திறந்தாற் போல பேச்சு’’
``அது குற்றாலத்து அருவி கொஞ்சு தமிழ்ச்சிந்து’’

இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும் பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன. மடை திறந்தாற் போல் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளால் பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்பினை, தமிழ் மொழியின் தொன்மையை நினைவுப்படுத்தினார்.

இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் அவரைப் பின் தொடர்ந்தனர். சினிமா, நாடகம், பத்திரிக்கை, மேடை ஆகிய ஊடகங்களின் வழியாகச் சமுதாயத்தை தட்டி எழுப்பினார். அறிஞர் அண்ணாவின் `திராவிட நாடு’, டாக்டர் கலைஞரின் `முரசொலி’ ஆகிய ஏடுகள் மக்களிடையிலும், கட்சி தொண்டர்களிடையிலும் புதிய விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் ஏற்படுத்தி தி.மு.கழகத்தின் வாளாக கேடயமாக வலம் வந்தன.

இத்தனைக்கும் மேலாக, கழக உறுப்பினர்களிடையே `அண்ணன் - தம்பி’ என்ற பாசப்பிணைப்பை ஏற்படுத்தின. ஆலமரத்தின் சிறு விதைப்போல முளைத்தெழுந்த தி.மு.க. மாபெரும் வளர்ச்சியுற்று, மதக்கோட்டைகளை தகர்த்தது, இலட்சக்கணக்கான ஏழைகளின் நிழலாக பாதுகாப்பு அரணாக, அமைந்தது. பெரியாரை விட்டுப் பிரிந்தாலும், அவரின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் அடைய தி.மு.கழகம் அரசியலமைப்பு விதிகளுக்குட்பட்டு போராடி வந்தது.

அறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல், தி.மு.கழகமும், திராவிட கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக சமுதாய சீர்கேடுகளுக்கு எதிராகப் போராடின.  கழக இலட்சியங்களை நியாயமான, சட்டத்திற்குட்பட்ட முறையில் அடைய, போராட வேண்டும் என்ற நோக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்கள் தனது தம்பியரை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரம் மூலம் கட்டுக்கோப்பான வழியில் நடத்திச் சென்றார். இதனால் தான், தி.மு.க. ஒரு மக்கள் இயக்கமாக மாறி பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்றும் அளவிற்கு வளர்ச்சிப் பெற்றது. உலகத்தில் எந்த அரசியல் இயக்கமும் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதில்லை.   

மக்களின் நலனை பேணும் பாதுகாவலனாக, அவர் இடர் துடைக்க அறவழியில் போராட தி.மு.க. என்றுமே தயங்கியதில்லை கழகம் துவங்கிய ஐந்தாம் ஆண்டிலேயே 1953-இல் மும்முனைப் போராட்டம் நடத்தியது.

இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு முனையிலும், தமிழர்களை `முட்டாள்கள்’ என்று அவதூறு செய்த பிரதமர் பண்டித நேரு அவர்களைக் கண்டித்து இரண்டாவது முனையிலும், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தின் பெயரை மாற்றிக் கல்லக்குடி எனத் தமிழ்ப் பெயரிட வேண்டும் என்று மூன்றாவது முனையிலும் தி.மு.க. போர்க்களங்களை அமைத்தது.

அந்த அறப்போரில், கல்லக்குடி களத்திற்கு, கலைஞர் படைத்தலைவர். ஜூலை 15 ஒரே நாள் போரில், ஆறு உயிர் களப்பலி, அநேகர் சித்திரவதை, 5000 பேர் சிறைக்காவல்!

சட்ட மன்றத்திற்குள் சென்றால் மட்டுமே ஜனநாயக வழியில் கழக இலட்சியங்களை நிறைவேற்ற முடியும் எனக்கருதி அறிஞர் அண்ணா, 1956-இல் திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் அதற்கான ஒப்புதலை கட்சித் தொண்டர்களிடம் பெற்றார். 1957 பொது தேர்தலில் தி.மு.க. 15 சட்டமன்ற இடங்களிலும், 2 பாராளுமன்ற இடங்களிலும் வெற்றிப் பெற்றது. அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகிய முன்னணி தலைவர்கள் வெற்றிவாகை சூடினர். அசைக்க முடியாது என ஆணவ முரசம் கொட்டிய காங்கிரஸ் கோட்டையில் கீறல்கள் உருவாயின. இவ்வெற்றியால் தி.மு.க.விற்கு உதயசூரியன் தேர்தல் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

`உதித்து விட்டான்’ செங்கதிரோன் தென்திசையில்
கொதித்தெழுவோம் கொத்தடிமை தீர்வதற்கே'!

என தி.மு.க. வீரர்கள் பரணி பாடினர் கழகத்தின் செல்வாக்கு கோபுரம் போல உயர்ந்தெழுந்தது. 1959 சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றிப்பெற்றது. 100 பேர் கொண்ட மாநகராட்சி மன்றத்தில் தி.மு.க. 45 இடங்களை பெற்றது. தி.மு.க. உறுப்பினர் திரு. அ.பொ. அரசு. கழகத்தின் முதல் மேயராகப் பதவி ஏற்றார். தமிழகத்து அரசு கட்டிலிலும் தி.மு.கழகமே அமரப்போகின்றது என்பதற்கு இது ஓர் அறிகுறியாக அமைந்தது. 

கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிக்கவும், அத்தொழிலாளர்களின் துயர் துடைக்கவும் அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருடன் மற்ற முன்னணி தலைவர்கள் 1953-இல் கைத்தறித் துணிகளை தோளிலே சுமந்து வீதிகளில் விற்று நிதி திரட்டினர். கழகத்தினர் அனைவரும் கைத்தறி ஆடையே அணிய முடிவு எடுக்கப்பட்டது.

தஞ்சையில் 1954-இல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் கண்ணீர் துடைக்க கழகம் நிதியும், உடையும் வழங்கியது.
1962-இல் சீனா ஆக்கிரமிப்பின் போது காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க. முழு ஆதரவு அளித்தது. மாநாடுகள் நடத்தி தேசிய பாதுகாப்பிற்கு பெரும் நிதி திரட்டி அளித்த பெருமை தி.மு.க.விற்கு மட்டுமே கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக கட்சியின் நலனைவிட நாட்டு நலனை முன்நிறுத்தி, அறிஞர் அண்ணா திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டார். தி.மு.க.வின் தேசியப் பார்வையில் இது ஒரு திருப்புமுனையாகும்.

1971-இல் இந்திய - பாகிஸ்தான் போரில், அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு ரூ.6 கோடி அளித்தார். இந்தியாவிலேயே இந்த அளவு நிதி அளித்த ஒரே மாநிலம் தமிழகமாகும்.

இந்திய பாதுகாப்பில் மற்ற அனைத்திந்திய கட்சிகளை விட தி.மு.க.விற்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உள்ளதென்பதை நிரூபிக்கும் வகையில் 1999 இந்திய - பாகிஸ்தான் எல்லை, கார்கில் போருக்கு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் ரூ.50.43 கோடி நிதி திரட்டி
தமிழகத்தின் தனிப்பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு

என்ற உணர்வில் ஊறிப்போன தமிழர்களின் இந்தி எதிர்ப்பு, நீண்ட வரலாறு கொண்டது. இன்றைய இந்தியின் தாய் மொழியான வடமொழி (சமஸ்கிருதம்) தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தவும், அடிமைப்படுத்தவும் பலமுனைகளில் முயன்று தோல்வியையே தழுவியுள்ளது. `ஆரியம்’ நன்று தமிழ் தீது’ என உரைத்து நக்கீரனின் சாபத்திற்கு ஆளானவன் பற்றிய சங்க காலப் பாடல் தமிழ் இசையை அடிமைப்படுத்த முனைந்த `திருவிளையாடல் புராணம்’, ஹேமநாத பாகவதரின் கதை ஆகியவை இதனையே உணர்த்துவன.

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆசியுடன் இந்தி ஆதிக்கம் தமிழகத்தில் நுழைய முற்பட்டது. 1938-இல் சென்னை இராஜதானி என அன்று அழைக்கப்பட்ட தமிழகத்திலுள்ள பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக புகுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும், மதத் தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அணிவகுத்து நின்றனர். அறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம்

``வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!
வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்!’’
என சங்க நாதம் புரிந்தார்.

இந்திய அரசியல் சாசன விதிகள் 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் அமுலுக்கு வந்த போதிலும், இந்திக்கு உள்ள எதிர்ப்பை உணர்ந்து, இந்தி பேசாத மக்களின் பதற்றத்தை குறைக்கும் வகையில் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள், விதி 343-இன் படி இந்தி ஆட்சி மொழி ஆகும் தேதியை 15 ஆண்டுகளுக்கு தள்ளி வைத்தனர். எனினும் தி.மு.கழகம் இந்தி என்றுமே ஆட்சி மொழி ஆகாதபடி விழிப்புடன் செயலாற்றி போராட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து மக்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருந்தது.

இதன் பயனாக 1959 ஆகஸ்ட் 7-இல் பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு, நாடாளுமன்றத்தில் இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்ற உறுதிமொழியைத் தந்தார். 1959-இல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்திற்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.கழகம் ஏற்பாடு செய்தபோதும், 1962-இல் இந்திய சீனப் போரின் போதும் ஜவகர்லால் நேரு அவர்கள் இவ்வாக்குறுதியை உறுதிப்படுத்தினார். பிரதம மந்திரியின் உத்தரவாதம் என்ற தலைப்பில், தமிழக செய்தித்தாள்கள் அனைத்திலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டது. இந்தி வெறியர்களுக்கு எதிராக, நாட்டின் பிரதமர் அவர்களிடமிருந்து இவ்வாக்குறுதியை தி.மு.கழகம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.

தமிழன் தொடுத்த இப்போரில் தாளமுத்து, நடராசன் என்ற இரு இளைஞர்கள் இந்தியை எதிர்த்து சிறை புகுந்து சிறைக்கோட்டத்தில் பிணமாயினர். தமிழன், மொழிப் போராட்டத்தின் கொடியை அந்த வீரர்களின் குறுதியிலே தோய்த்து விண்முட்ட பறக்க விட்டான்.
இந்திய சுதந்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும், புறவாசல் வழியாகவும், இந்தியைப் புகுத்த முனைந்தது. தேசிய மொழி, பொதுமொழி, இணைப்பு மொழி, நிர்வாக மொழி, ஆட்சி மொழி என்ற பல்வேறு பெயர்களில் இந்தியை திணிக்க முனைந்தது. ஆனால் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தி.மு.கழகம் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி இந்தியை எதிர்த்தது. தமிழைக் காத்தது.

அறிஞர் அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட்சியில் இருந்த போதும் கழகத்தின் நீண்ட நாள் இலட்சியங்களை நிறைவேற்றும் வகையில், சட்ட திட்டங்களை வகுத்தார்.
அவரது சாதனைகளில் சரித்திரம் படைத்தவை:

  • சென்னை மாநிலம் என அழைக்கப்பட்ட தமிழகத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றி தமிழர்களின் தன்மானத்தை உயர்த்தினார்.
  • அவர் இதயத்தில் கொண்ட பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு ஏற்ப சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளித்தார்.
  • மும்மொழித் திட்டத்தை அகற்றி, தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளுக்கு இடமளித்து, தமிழகப் பள்ளிகளிலிருந்து இந்தி மொழியை அறவே நீக்கினார்.
  • சென்னை, கோவை ஆகிய பெருநகரங்களில் ரூபாய்க்கு ஒரு படி அரிசி எனும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு எரியாத வீடுகள் (கல்நார் கூரையுடன்) அளிக்கப்பட்டன.
  • பேருந்துகள் நாட்டுடமை ஆகிய திட்டங்கள் தொடங்கப்பெற்றது.
  • 1968 ஜனவரி முதல் வாரத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை சங்ககாலம் மீண்டும் வந்ததோ! என அனைவரும் பூரித்திடும் வகையில் எழில் குலுங்கிட, தமிழன்னையின் இதயம் குளிர்ந்திட, இனிது நடத்தினார்.

ஆனால் காலதேவன் கொடுமையால் அண்ணாவின் தலைமை அதிக நாள் நீடிக்கவில்லை. 1969 பிப்ரவரி 3-இல் அறிஞர் அண்ணா மறைந்தார். தமிழகமே இருளில் மூழ்கியது.

அறிஞர் அண்ணாவின் இலட்சியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றவும், தி.மு.கழகத்தைக் கட்டி காத்திடவும், தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கவும், கழகத்தின் தலைமைப் பொறுப்பு டாக்டர் கலைஞரின் தோளில் சுமத்தப்பட்டது. ``டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக’’ 1969-இல் பிப்ரவரி 10-இல் பதவி ஏற்றார்.

கலைஞரின் தலைமையில், தமிழ்நாடு பல துறைகளில் புதிய சாதனைகள் படைத்துள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் தி.மு.கழக ஆட்சியில் - அவர் தலைமையில் நலிவுற்ற - பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் இந்தியாவிலேயே முதன் முதலாக நிறைவேற்றப்பட்டன.
அவைகளுள் சில:

  • குடிசை மாற்றுவாரியம்.(பின்னால் மற்ற மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது)
  • பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள்.
  • கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள்.
  • கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் - அவர்களுக்கு இலவச கண்ணாடிகள்.
  • பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி - ஆடைகள்.
  • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
  • ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள்.
  • போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.
  • தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.
  • விவசாயத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு மனை அனுபோக தாரர்கள் சட்டம்.
  • பேருந்துகள் நாட்டுடமை தமிழகத்தில் முழுமைப் பெற்றது.
  • அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம்.(பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் வழங்கப்படுகிறது)
  • சிகப்பு நாடா முறை இரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.
  • கை ரிக்ஷாக்களை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கியது.
  • ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.
  • பெண்களுக்கு சொத்துரிமை.
  • மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.
  • ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.
  • அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.
  • கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.
  • சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.
  • புதிய பல்கலைக் கழகங்கள் - நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.
  • மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.
  • மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.
  • ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.
  • மாநில திட்டக்குழு அமைத்தல்.

கலைஞரின் முற்போக்குத் திட்டங்களைப் பாராட்டி, குடியரசுத் தலைவர் வி.வி. கிரி அவர்கள் தமிழ்நாடு, இந்தியாவிற்கு வழி காட்டுகிறது எனப் புகழாரம் சூட்டினார். லோகநாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களும் இத்திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி தமிழ் இனத்தின் பழைய சிறப்பை அவர்கள் நினைவு கூறும் வகையிலும், தமிழ் மொழிக்காக பாடுபட்ட பெரியோர்களின் சேவைகள் தமிழர் மனதில் என்றும் நிலை நிறுத்தும் வகையில், டாக்டர் கலைஞர் அவர்கள் பூம்புகார் கலைக்கூடம், வள்ளுவர் கோட்டம், கட்டபொம்மன் கோட்டை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை உருவாக்கினார்.

தி.மு.கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் தயங்கியதில்லை. அவ்வுரிமைகளுக்கு குந்தகம் ஏற்பட்ட போதெல்லாம், தி.மு.கழகம் சிங்கத்தைப் போல் சிலிர்த்தெழுந்திடும். 1975-இல் திருமதி இந்திராகாந்தி ஜனநாயகத்தை நசுக்கி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தபோது தி.மு.கழகம் தோழமைக் கட்சி என்று தயக்கம் காட்டியதில்லை.

நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியது. மிரட்டியும், ஆசை காட்டியும் தி.மு.கழகத்தை பணியவைக்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஜனநாயகத்தின் மீதும், அடிப்படை உரிமைகள் மீதும் இலட்சிய பிடிப்பு கொண்ட கலைஞர் எந்த சக்திக்கும் அடிபணிந்ததில்லை. இதனால் 1976 ஜனவரி 31-இல் தி.மு.கழக ஆட்சி கலைக்கப்பட்டது. தமிழகத்தின் இருண்ட நாட்கள் தொடங்கின. 

திருவாளர்கள் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன், மு.க. ஸ்டாலின் ஆகிய முன்னணி தலைவர்களுடன் 500-க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் `மிசா’ சட்டத்தின்கீழ் விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர். தி.மு.கழகம் அந்த சோதனையையும். `மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என சங்கநாதம் செய்தது. `மிசா கைதி’ என்பதை ஒரு பெருமையாகவே தி.மு.கழகம் இன்முகத்துடன் ஏற்றது. 

1980-இல் திருமதி இந்திரா காந்தி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு இனி எப்போதும் நெருக்கடி நிலையை அமுல் செய்ய மாட்டேன் என நாட்டிற்கு உறுதி அளித்தபோது தி.மு.கழகம் அறிஞர் அண்ணா சொல்வதுபோல் ``மறப்போம் - மன்னிப்போம்’’ என்று பகைமையை மறந்து நேசக்கரம் நீட்டி காங்கிரசுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டது.    

இந்தி எதிர்ப்பு வரலாறு, 1964-க்குப்பின் 1984-இல் மீண்டும் திரும்பியது ஆனால் இம்முறை போராட்டம் எதிரிகளுக்கு எதிராக அல்ல. துரோகிகளுக்கு எதிராக எனலாம். புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் இராஜீவ் காந்தி அரசு ``நவோதயா’’ பள்ளிகள் திறக்கவும் அங்கு இந்தி மட்டுமே போதனை மொழியாக அமையவும் திட்டம் வகுத்து, தாராளமான நிதி ஒதுக்கீடு செய்தது. நிதியுதவி மூலம் இந்தியை நாடெங்கும் பரப்ப முனைந்த ஆட்சியாளர் சூழ்ச்சியை தி.மு.கழகம் கண்டு கொண்டது.

எனவே 1963-இல் அண்ணா போராடிய அதே நாளில் அதவாது 1986 நவம்பர் 17-இல் அரசியல் சட்டப்பிரிவு பகுதி 17-ஐ பொது மேடைகளில் எரித்திட தீர்மானம் நிவைவேற்றியது. அன்னை தமிழுக்கு துரோகம் செய்த அரசுக்கு எதிராக தி.மு.கழகம் சிங்கம் போல் நிமிர்ந்து சீறி சிலிர்த்து எழுந்தது. 20,000-க்கு மேற்பட்ட கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.  அடுத்து வந்த 1989 பொதுத் தேர்தலில் மீண்டும் தி.மு.கழகம் அரியணை ஏறியது.

இப்படியெல்லாம் மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்திய பெருமை மிகு கழகத்தின் இன்றைய நிலை என்ன? ஏன் இவை எல்லாம் நிகழ்ந்தது. மக்கள் போராட்டம் திசை மாறி குடும்ப போராட்டமானதற்கு என்ன காரணம் அல்லது யார் காரணம். 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் ஒரு கட்சி ஒரு தனி குடும்ப சொத்தாக மாறியது எப்படி.  இன்று அந்த ஒரு குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாரேனும் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர முடியுமா?

1972-இல் எம்.ஜி.ஆர். தி.மு.கழகத்தை பிளவுபடுத்தியபோது, அவர் துவளவில்லை. வெற்றியும் தோல்வியும் என்றுமே அவரைப் பாதித்தது இல்லை. பொது வாழ்வில் ஊழலுக்கு எதிராக அவர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1969-லேயே சட்டமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் தனது ஆண்டு சொத்துக்கணக்கை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியவர் கலைஞர்.


புதன், ஏப்ரல் 27, 2011

பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம்...

  • விழிமின், எழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்.

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?

  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

  • எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.

  • தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு உண்மையாக நீ முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.

  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.

  • பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.

  • மிகப்பெரிய உண்மை இது -- வலிமை தான் வாழ்வு; பலவீனமே மரணம்.

  • 'இவனை நம்பு' அல்லது 'அவனை நம்பு' என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் -- முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.

  • ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவன் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவான். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.

  • எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.

  • நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன; நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.

  • நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதைம் நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.

  • இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

  • மக்கள் பொதுவாக வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் தங்களுடன் வாழ்பவர்கள் மீதோ, அல்லது அது தவறினால் தெய்வத்தின் மீதோ சுமத்துகிறார்கள். அல்லது புதிதாக அவர்கள் ஏதோ பேய் பிசாசு என்று கற்பித்துக்கொண்டு, அதைத் தலைவிதி என்று சொல்கிறார்கள். விதி என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது? எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, அதன்பொருட்டுத் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளம் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?

  • ‘நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தத் துன்பம், என்னுடைய சொந்தச் செயல்களாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒரு நிலையே, என் ஒருவனால் மட்டுமே அது நீக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது’ என்று சொல். நான் எதைப் படைத்தேனோ அதை என்னால் அழிக்கவும் முடியும். பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை ஒருபோதும் என்னால் அழிக்க முடியாது. எனவே, எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையுடன் இரு. பொறுப்பு முழுவதும் உன் தோள் மீதே சுமந்துகொள். உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

  • நாம் நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு சூட்சுமத் தன்மையை அடைகிறது. பின்பு அது வித்து வடிவத்தைப் பெற்று மறைந்திருக்கும் நிலையில் நமது சூட்சும சரீரத்தில் வாழ்கிறது. மீண்டும் சிறிது காலத்திற்குப் பிறகு அது வெளிப்பட்டு வந்து தனக்கு உரிய பலன்களைத் தருகிறது. இந்தப் பலன்களே நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இவ்விதம் மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.

  • பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்
-- விவேகானந்தர் மேற்கோள்கள்