புதன், நவம்பர் 30, 2011

நம்பினோர் கெடுவதில்லை

ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா? விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவெடுத்தேன், வேலை, உறவு உயிர் எல்லாம். வாழவே பிடிக்காத இந்த சமூகத்தில் இத்தனை நாள் பொறுமையாய் வாழ்ந்ததே போதும் இனியும் வேண்டாம் இந்த பிழைப்பு. எனக்குள் நானே பிதற்றிக்கொண்டே உறங்கிப்போனேன்.

எத்தனை மணி என்று தெரியவில்லை.  நான் இருந்த இடம் முழுவதும் வெளிச்சம் ஆனால் அது புது இடமாய் இருந்ததால் விடியவில்லை என்று மட்டும் உணர்ந்தேன். வேறு ஏதோ ஆகி விட்டதையும் அறிந்தேன். தென்றல் மெல்ல வருடியது, அந்த சுகம் இதுவரை அனுபவித்திராதது.  தென்றல் வழி வந்த சுகந்தத்தில் மெல்ல மயங்கியும் நின்றேன். 

"குழந்தாய்.."

சத்தம் கேட்டு கண்கள் விரித்துப்பார்தேன். அங்கே கடவுள் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் ஆச்சரியம்.. 

"எல்லாவற்றையும் விட்டுவிட நினைக்கிறாயா?" - மெல்ல கேட்ட கடவுளை நோக்கி "விடாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?" கொஞ்சம் கோபமாய் கேட்டேன்

"இங்கே சுற்றிப்பார், என்ன எல்லாம் இருக்கிறது.? "

"நிறைய மூங்கில் மரங்களும், நிறைய கொடிகளும் இருக்கின்றன. அதனால் என்ன?"

"இவைகள் இங்கே வந்த கதையை சொல்கிறேன் கேள்" என்றார் மெல்லிய சிரிப்புடன்

"ஒரே நேரத்தில் தான் இந்த கொடிகளுக்கும், மூங்கில் மரங்களுக்கும் விதைகளை தூவினேன்.  தேவையான நீரும் ஒளியும் வழங்கினேன். ஆனால் இந்த கொடிகள் வேகமாய் விதையை பிளந்து மண்ணையும் பிளந்து கொண்டு வந்துவிட்டன. ஆனால் இந்த மூங்கில் விதைகளில் இருந்து எதுவும் வரவில்லை, ஆனாலும் நான் தொடர்ந்து நீரும் ஒளியும் வழங்கிக்கொண்டு தான் இருந்தேன். "  மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்

"ஒரு ஆண்டு கழிந்தும் அப்படியே தான் இருந்தது. ஒரு மாற்றமும் இல்லை. இப்படியே இரண்டாவது ஆண்டும் ஓடியது. மூன்று, நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஐந்தாவது ஆண்டு மண்ணை பிளந்து கொண்டு சிறு செடி வெளியே தலை நீட்டி பார்த்தது. ஆனாலும் அது இந்த கொடியோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாகவே இருந்தது. ஆனால் அதன் பின் 6 மாதங்களில் இந்த மூங்கிலின் உயரம் 100 அடியையும் தாண்டி வளர்ந்துவிட்டது. 5 வருஷம் அது தன் வேரை பலப்படுத்திக்க
எடுத்துக்கிச்சு, தேவையான அளவு பலம் வந்ததுக்கப்பறம் அது மேலே வளர்ந்துச்சு" தொடர்ந்து

"குழந்தாய் இன்னும் கேள், நான் யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத  துயரங்களை எப்போதும் கொடுப்பதில்லை. உனக்கு  சோதனை வருகிறது என்றால் உன் வேர்கள் பலப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று எடுத்துக்கொள் உனக்கான காலம் வரும் அப்போது நீயும் இந்த மூங்கில் போல உயர்வடைவாய்" சொல்லிவிட்டு என் முகம் பார்த்தார்.

"எவ்வளவு உயரத்திற்கு நான் போவேன்?"  எனக்குள் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்

"இந்த மூங்கில் மரம் எவ்வளவு பெரிதாய் வளரும்?" திருப்பிக்கேட்டார் கடவுள்

"அதால எவ்வளவு பெருசா வளரமுடியுமோ அவ்வளவு பெருசா.."

"அது உனக்கும் பொருந்தும்" சொல்லிவிட்டு சிரித்தார்

திடீரென முகத்தில் மழை பெய்வதை போலுணர்ந்தேன்..

கண் விழித்த பார்த்த போது,  தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த என் குழந்தை பெய்த மழை..

கிஞ்சித்தும் இருள் இல்லாமல் பொலபொலவென விடிந்து இருந்தது பொழுது என் மனதிலும் இரவில் இருந்த இருள் இப்போது இல்லை.



இன்றைய லொள்ளு

என்ன பண்ணுறாங்கன்னு யாராவது சொல்லுங்கப்பா..



செவ்வாய், நவம்பர் 29, 2011

வாய்ப்புகள் என்னும் வைரங்களை தேடி

ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு, விவசாயம் நல்லா நடந்ததால அவரு சந்தோஷமா இருந்தாரு. தேவையான வருமானம் சந்தோஷமான வாழ்க்கை வேற என்ன வேணும் ஒரு ஆளுக்கு. ஆனாலும் விதி விடுமா அவருக்கும் வந்துச்சு ஒரு நாள் சாமியார் வேசத்தில, வந்த சாமியாரு அந்த விவசாயி கிட்ட வைரத்த பத்தி பேசுனாரு. ஒரு கட்டை விரல் அளவு வைரம் இருந்தா இந்த ஊரை வாங்கிடலாம்,

நடுவிரல் அளவு வைரம் கிடைச்சா இந்த நாடே உன்னோடது, சொல்லிட்டு போயிட்டாரு அந்த சாமியாரு. அதுவரை சந்தோஷமா இருந்த விவசாயி மனசுல அடிக்க ஆரம்பிச்சது புயல்.  நிம்மதியா தூங்கி எந்திருச்ச மனுஷன், இப்ப குழப்பத்தோட படுக்கைக்கு போறாரு.

மறுநாள் காலையில ஒரு முடிவுக்கு வந்துட்டாரு, வைரங்களை தேடி எப்பிடியாவது கண்டுபிடிச்சிரணும்ன்னு. இருந்த நிலத்தை எல்லாம் வித்துட்டு கிளம்பினாரு ஊரை விட்டு, உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் கண்டுபிடிச்சிரணும்ன்னு ஒரு வைராக்கியம் மனசுல.

ஒவ்வொரு ஊரா சுத்துனாரு அந்த ஆளு, எங்கேயும் அகப்படலை வைரம். கையில இருந்த காசு தீர்ந்தப்ப அவரு மனசுல இருந்த ஆசை எல்லாம் வடிஞ்சு வெறும் விரக்தி மிச்சம் ஆச்சு இனி சாகுறத தவிர வேற வழியில்லைன்னு முடிவுக்கு வந்து தற்கொலை பண்ணிக்கிட்டாரு.

இன்னொரு பக்கம் அவர் கிட்ட நிலத்தை வாங்குனவரு ஒரு நாள் வயல்ல வேலை செய்யுறப்ப ஏதோ ஒரு பொருள் வெயில் பட்டு ஜொலிச்சிக்கிட்டு இருக்கிறதை பார்த்தாரு. அவருக்கும் தெரியலை அது என்னானு, எதுக்கும் இருக்கட்டும்ன்னு எடுத்து வேட்டியில முடிஞ்சுகிட்டாரு. சாயந்தரம் வீட்டுக்கு வந்தவரு அதை வாசல் கதவுல கட்டி தொங்க விட்டு இருந்தாரு.

அந்த வழியா வந்த சாமியார், வைரத்தை தேடி போனவன் வைரத்தோட வந்துட்டான்னு நெனைச்சு வெளியே இருந்து கூப்பிட்டாரு, வெளியே வந்த புது ஆளு,  அவர் இன்னும் வரலை உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்துட்டாருன்னு கேட்டாரு. இல்லை இங்கே வைரம் தொங்கிக்கிட்டு அதான் வந்துட்டாரோன்னு நினைச்சேன் அப்பிடின்னாரு. அது வைரம் இல்லை சாமி வெறும் கல்லு, சொன்ன புது ஆளுகிட்ட, எனக்கு தெரியும் இது வைரம் தான் அடிச்சு சொன்னாரு சாமியாரு. இது மாதிரி இன்னும் நிறையா அந்த வயல்ல கிடக்கு வந்து பாருங்கன்னு சொன்னாரு புதுஆளு. கொஞ்சம் எடுத்துட்டு போயி வைர  வியாபாரிகிட்ட காட்டுனாங்க, அவரும் சோதிச்சு பார்த்துட்டு அது எல்லாம் வைரம் தான்னு உறுதியா சொன்னாரு. அந்த வயல் பூராவுமே இப்படி வைரங்கள் அங்கே அங்கே நிறையா புதைஞ்சு இருந்துச்சு.

கதை சொல்லும் கதை
1. வாய்ப்புகள் எப்போதும் நம்முடைய கால்களுக்கு அடியில் தான் கிடக்கிறது அதை கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது

2. அக்கரை எப்போதும் பச்சையாய் தான் இருக்கும்

3. வாய்ப்புகளை கண்டுணர முடியாதவர்களுக்கு, வாய்ப்புகள் கதவை தட்டுவது கூட வெறும் சத்தமாய் தான் தெரியும்

4. ஒரே வாய்ப்பு இன்னொரு முறை வாய்ப்பது இல்லை கண்டுகொள்ள வில்லை என்றால் அதுவும் கடந்து போகும், வேறு ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்கலாம் ஆனால் அது நாம் இழந்த வாய்ப்பிற்கு சமமாகுமா தெரியாது.

இன்றைய லொள்ளு

சொன்ன பேச்சை எவன் கேக்குறா இங்கே


திங்கள், நவம்பர் 28, 2011

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு - ஒரு பார்வை

மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது சரி என்று சிலரும் தவறு என்று என்று சிலரும் பேசிக்கொள்வது என்னை குழப்பியதின் விளைவே இந்த தேடல்.

முதலில் அரசு தரப்பில் என்ன காரணங்கள் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் 

பொருட்களை எடுத்துச்செல்வதில் இருக்கும் முதலீட்டு பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது உலகிலேயே பழங்கள் மற்றும் காய்கறியின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் நாம் இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் உற்பத்தி செய்வது ஆண்டுதோறும் 200 மில்லியன் மெட்ரிக் டன், ஆனால் நம்மிடம் இருப்பது 5836 கோல்ட் ஸ்டோரேஜ் எனப்படும் குளிர் பதன நிலையங்கள் இவற்றின் மூலம் 23.6 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்களை மட்டுமே கையாள முடியும், அவற்றிலும் 80% உருளைகிழங்கு பதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது (உபயம் சிப்ஸ் கம்பெனிகள் போல)  

நம்மால் பதப்படுத்த முடியாத காரணத்தினால் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 1 டிரில்லியன் ரூபாய்கள், இது மொத்த  உற்பத்தியில் 57 சதவீதம். இன்னும் சில புள்ளி விவரங்கள் நாம் உற்பத்தி செய்யும் பழங்களில் 35-40% வீணாவதாகவும்!!(?), தானிய வகைகளில் 10% வீணாவதாகவும் சொல்கின்றன.  குளிர் பதன துறையில் மட்டும் முதலீட்டை அனுமதிப்பது பயன் அளிக்காது, ரீடைல் அவுட்லெட்களும் அதிகரிப்பதன் மூலம் வீணாகும் பொருள்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும் அப்பிடின்னு சொல்றாங்க.

அது மட்டும் இல்லாம இடைதரகர்களின் தலையீடும் குறையும் பலன் விலை நேரே விவசாயிகளுக்கு கிடைக்கும், அது மட்டும் இல்லாம அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். சுமாரா 5 வருசத்தில 1 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும. 

கபினேட்ல என்ன முடிவு வச்சு இருக்காங்கன்னா
1.    51% நேரடி முதலீடு செய்ய அனுமதிப்பது, குறைத்த பட்சம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்ப்பது
2.    50% உள்கட்டமைப்புக்கு ஒதுக்குவது இதன் மூலம் திறன் வாய்ந்த பதன கிடங்குகளை அமைக்க முடியும்.
3.  30% பொருட்கள் குடிசை/சிறு தொழில் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களை கொள்முதல் செய்து சந்தைபடுத்துதல். 
4.    விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
5.  10 லட்சத்திற்கு அதிகம் மக்கள் வசிக்கும் ஊர்களில் மட்டும் கடைகளை திறப்பது
6.    விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முதல் உரிமை அரசிடம் தான் இருக்கும்
7.    எந்த பொருட்கள் கொள்முதல் செய்தாலும் அதே பெயரில் தான் உலகம் முழுவதும் விற்கப்பட வேண்டும்

மேலும் விவரங்களுக்கு


சரி இப்ப எதிர்தரப்புல பரவலா சொல்லப்படுற விஷயங்களை பார்ப்போம் 

1. தினமணி தலையங்கம்

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

 மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

 2. ஜெயலலிதா :  சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.

3. கருணாநிதி கண்டனம்:  நாட்டில் சில்ல‌ைர வியாபாரத்தில் அன்னிய முதலீடு வந்தால் நாட்டின் பொருளாதாரம் சீரழியும். பலர் தங்களுடைய தொழிலை இழக்கும் அபாயம் ஏற்படுவதுடன் பொருளாதாரத்தில் சுனாமி என்ற பேரழிவு ஏற்படும். இதனை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.

4. மத்திய அரசின் முடிவை ஆதரித்தால், சிறு மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆதரவை எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சியினர் பெற்று விடுவர் என அஞ்சுவதால், கேரள காங்கிரசார், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

5. மாயாவதி: சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

ஒரு சாமானியனாக எனக்குள் ஓடிய ஒரு விஷயம் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரும் போது போட்டியின் காரணமாய் பொருட்களின் விலைகள் குறையும் என்பது நிதர்சனம்.

நிறைய தேடியும் இன்னும் சரியா புரியலை இது சரியா தப்பான்னு , யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..  

வியாழன், நவம்பர் 24, 2011

எப்பிடி எல்லாம் அசத்துறாங்க

 உலகின் மிகப்பெரிய 3D ஓவியம்  - ஒரு ஜிம்மை விட பெரியது. பெரிய வேலை தான் பார்த்து இருக்காங்க 

 

 
இயேசுவை போன்ற தோற்றம்  மேகத்தில்

 

சாத்தான் போன்ற தோற்றம் மேகத்தில்




இன்னொரு முறை மழலையானால்

 


 அண்டத்தின் (universe)  முப்பரிமாண வடிவம்



இன்றைய லொள்ளு



courtesy : google images, shortlist 
படங்கள் கூகிள் இமேஜ்-இல் இருந்து எடுக்கப்பட்டது. வீடியோ வழக்கம் போல youtube   

புதன், நவம்பர் 23, 2011

தடை செய்யப்பட்ட நாவல்கள்

சில நாவல்கள் புகழ் பெற்ற எழுத்தாளர்களால் எழுதப்பட்டு இருந்தும் காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக்கொண்டு இருக்கிறது என்று அரசும் மக்களும் நினைத்ததால் தடை செய்யப்பட்டன, அவற்றுள் சில இங்கே 

1.Brave New World by Aldous Huxley

சுருக்கம்: இது 1931 ல் எழுதப்பட்டது, ஒரு வருடத்திற்கு பின்னர் 1932 இல் வெளியிடப்பட்டது. தொழில்மயமாக்கல் காலம் தான் கருப்பொருள், ஹக்ஸ்லி தொழில்மாயமாக்கலால் ஏற்படும் பேரழிவு விளைவு மற்றும் சமூகத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை விரிவாக சொல்லி இருந்தார்

ஏன் தடை செய்யப்பட்டது:    முதலில் இந்த நாவல் அயர்லேண்ட்டில் தடை செய்யப்பட்டது குழந்தை பிறப்பை பற்றிய எதிர்மறை கருத்துக்கள் இடம் பெற்று இருந்ததால் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.  பின்னர் இது அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்டது, இது எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

2. The Grapes of Wrath by John Steinbeck

சுருக்கம்: 1939 இல் வெளியிடப்பட்டது ஸ்டெயின்பெக்கின் புலிட்ஃஜர் பரிசு பெற்ற நாவல், கிராமப்புற ஏழை பெருமந்த விளைவுகளை பற்றிய கதை.  வறட்சி, பொருளாதார காரணங்களால், மற்றும் விவசாய துறையில் மாற்றங்கள் எப்படி மக்களை ஊருக்கு வெளியே விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதையும், அவர்கள் தங்களுக்கான வேலை மற்றும் நிலத்தை தேடியதை பற்றி விரிவாய் சொல்லி இருக்கிறார் ஸ்டெயின்பெக்கின். 

ஏன் தடை செய்யப்பட்டது? இலக்கிய உலகில் சிறந்த நாவலாய் இருந்த போதிலும், அதை பகிரங்கமாக அமெரிக்க தடை செய்தது  மற்றும் பொது மக்கள் ஒட்டுமொத்தமாக அந்த நாவலை எரித்தனர். ஏழ்மை பற்றிய ஸ்டெயின்பெக்கின் கருத்துக்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, அது அவர்களை மேலும் அதிர்ச்சியையே உருவாக்கி இருந்தது. அந்த கருத்துக்களை எல்லாம் நீக்கி மீண்டும் இன்னொரு பதிப்பு மேற்கொள்ளப்பட்டது.

3. Tropic of Cancer by Henry Miller

சுருக்கம்: 1934 இல் வெளியிடப்பட்டது, இந்த கதையின் ஆசிரியர் மில்லர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து எழுதி இருந்தார். தான் நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் எப்படி தன்னை கையாண்டார்கள் என்பதை விரிவாக வியல்க்கி இருந்தார்.
இதில் வெளிநாட்டில் வாழும் ஒரு அமெரிக்க குடிமகனின் நிலையை விளக்கி இருந்தார்

ஏன் தடை செய்யப்பட்டது? பாலுறவு பற்றி மில்லர் எழுதி இருந்தது சற்று முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.  மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் இது தடை செய்யப்பட்டது

4. Slaughterhouse-Five by Kurt Vonnegut

சுருக்கம்: 1969  இல் வெளியிடப்பட்டது, ஜெர்மானிய படைகளிடம் மாட்டிக்கொண்ட ஒரு போர் குற்றவாளியை பற்றிய கதை. அவர் சிறையில் செய்யப்பட்ட கொடுமையை விரிவாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஏன் தடை செய்யப்பட்டது? போர் குற்றம் பற்றி எழுதப்பட்டு இருந்ததால் தடை செய்யப்பட்டது.

5. The Satanic Verses by Salman Rushdie

சுருக்கம்: 1988  இல் வெளியிடப்பட்டது, இந்த நாவல் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு புல பெயர்ந்த இந்தியரின் கதை. ஒரு விமான விபத்தில் இருந்து தப்பிய ஒரு நடிகரும், இன்னொரு சாமானிய மனிதரும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள முடிந்தது என்பதை பற்றிய நாவல்.

ஏன் தடை செய்யப்பட்டது? இந்த நாவலில் சில இடங்களில் இஸ்லாம் சமயம் பற்றிய அவதூறு கருத்துக்கள் இருந்தது. வெனிசுலா நாட்டில் இந்த நாவலை படிப்பவர்களுக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது, ஜப்பானில் அபராதம் விதிக்கப்பட்டது. அமெரிக்காவும் இந்த நாவலை தடை செய்தது.

மேலே சொல்லப்பட்டுள்ளது ஒரு துளி,  இன்னும் இது போல் இன்னும் நிறைய நாவல்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கையில் அதையும் எழுதுகிறேன்.  

இன்றைய சிந்தனை

1.     வலி தவிர்க்க முடியாதது என்றாலும் அனுபவிப்பது நம் விருப்பம் மட்டுமே

2.    உலகின் சிறந்த வலிநிவாரணி தாயின் முத்தம், இதற்கு இணையான மருந்து இன்னும் கண்டுபிடக்கப்படவில்லை

3.    தைரியத்தை வளர்க்க சிறந்த வழி வலி.

இன்றைய லொள்ளு